Published:Updated:

''தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

''தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

Published:Updated:
''தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

''கிடைத்ததில் பிடித்ததை எல்லாம் ஒரு கை பார்ப்பதுதான் 20 வயது வரை நம் வாழ்க்கை சரிதம். அதன்பிறகு மனைவியின் குளிர் பார்வையில், கனிவான பேச்சில் உருகிக் கலந்து, உண்டு மகிழ்ந்து வளர்ந்த சதையின் பளபளப்பில் பெருமைப்படுகிறோம். நாற்பதைக் கடந்ததும், பட்டினத்தாரின் மொழியில் இந்த 'நாற்றப் பாண்டம் பீற்றல் துருத்தி’ ஆகிவிடுகிறது. 'நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதை எண்ணாமல், உன் வாய்க்கும் மனதிற்கும் வசப்பட்டதை எல்லாம் வாரிச் சுருட்டி விழுங்கினாயே... இப்போது என் முறை; உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று நமக்கு சவால்விடும் உடம்பு. விளைவு... உடம்பின் அலைக்கழிப்பு ஆரம்பமாகிவிடும். அப்போதுதான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதும், 'சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பதும் கிழக்கின் வெளிச்சக் கீற்றாய் நமக்கு விளங்கத் தொடங்கும். ஆனால், காலம் கடந்துவிட்டதே! என்ன செய்யலாம்?'' - வாழ்வியல் வடிவத்தைச் சொல்லி ஆரம்பிக்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பெயர் பெற்றவர். உடலையும் மனதையும் மையப்படுத்தி, 'வாதமும் நானே... தீர்ப்பும் நானே’ என்கிற பாணியில் இங்கே பேசுகிறார் சாலமன் பாப்பையா...

##~##
''சிறுவயதிலேயே, நம் உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான், 'மாலை முழுவதும் விளையாட்டு, அதை வழக்கப்படுத்திக்கொள் பாப்பா’ என்று பாடினான் பாரதி. இந்த மந்திரத்தை, பிள்ளைகள் மனதிற்குள் நாம் இளம் பிராயத்திலேயே விதைத்தால், பிற்காலத்தில் 'உடலை வளர்த்தேன்; உயிரை வளர்த்தேன்’ என்று அவர்கள் நன்கு உணர்ந்து, உடலையும், உள்ளத்தையும் பக்குவமாய் பார்த்துக்கொள்வார்கள். ஆங்கிலேயர்கள் இதே பாணியைத்தான் பின்பற்றினார்கள். நம்மவர்களும் அந்தக் காலத்திலேயே அதை ஏற்றுக்கொண்டு, 'கீதையைப் படிப்பதற்குச் சமமாக’ விளையாட்டுத் திடலில் தங்களின் உடம்பையும் உள்ளத்தையும் பக்குவமாய் வளர்த்துக்கொண்டனர். ஆனால், என்ன நேர்ந்ததோ தெரியவில்லை! நம்மை நாமே ஆளத்தொடங்கிய பிறகு அதெல்லாம் அரிதாகிப்போனது. பண வளம் பெருக்கும் கல்வி முறை பெருகியதே தவிர, மன நலத்தோடு உடல் நலம் பேணும் கல்வி பெரும்பாலும் இல்லாமலே போனதை சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள், 'என் பிள்ளை நல்லா படிக்கணும். அவன் நிறைய மார்க்ஸ் வாங்கணும். விளையாடிப் பொழுதைக் கழிக்காமல் எந்த நேரமும் படிப்புன்னு புத்தகமும் கையுமாகவே இருக்கணும்!’ என நினைக்கிறார்கள். நன்றாகப் படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும் என்பதுதான் இன்றைய பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் இந்த மண்ணைச் சார்ந்து உடலையும் உள்ளத்தையும் ஒருசேர வளர்த்து பண்படுத்தும் மனவளக்கலையில் பயிற்சி பெறாமலேயே நம் குழந்தைகளின் கல்விக்காலம் கடந்துவிடுகிறது.

''தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

பணம் பெருக்கும் போதனையை மட்டுமே சொல்லித் தரும் கல்விக் கூடங்களில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, வேலை; அதன்பிறகு திருமணம்! அப்போது நம் வீட்டிலும் சரி... வெளியிலும் சரி... உடல் நலம் காக்க ஏது நேரம்? ஏது இடம்? பல்வேறு தேவைகளும், வாழ்க்கை நெருக்கடிகளும், எதிர்பாராத சம்பவங்களும், கவலை மேகங்களாய் அடர்ந்து, படர்ந்து உள்ளத் தளர்ச்சியையும் உடற் சோர்வையும் பெருக்கி விடுகின்றன. அப்போது பதுங்கிக் கிடந்த நோய்க் கூட்டம் பரம்பரை சொத்தாய், தனி விதைப்பாய் முளைத்து தாண்டவமாடத் தொடங்கிவிடுகின்றது. இதிலிருந்து விடுதலை பெறும் வழியும் உண்டு! அழுக்குப் போகக் குளித்து, விரும்பிய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி உடம்பை சுத்தமாக்கிக் கொள்கிறோம். உள்ளத்துள் குவிந்துவிடும் தவறான - தீய எண்ண அழுக்குகளை எப்படியப்பா போக்குவது? இது என்னய்யா வேடிக்கை... உடல் நலம் பேணுவது குறித்துக் கேட்டால் உள் நலன் பற்றிச் சொல்கிறீரே என்கிறீர்களா? ஆம்... உடல் நலத்துக்கு இன்றியமையாதது உள் நலம்தான்!

'உள்ளம் பெருங் கோயில்...
ஊண் உடம்பு ஆலயம்!’

''தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

நாம் வணங்கும் கடவுள் நம் உள்ளத்தினுள் தங்கினால், உடல் நலம் பெருகி ஒரு தெய்வீகக் களை நமக்கு ஏற்படும். அப்படியானால் மனத்தின் முந்தைய அழுக்குகளைப் போக்குவதும், புதிதாகச் சேரவிடாமல் தடுப்பதும் எப்படி? நம் பெற்றோர் நமக்குக் காட்டிய கடவுளின் வடிவமும், நாமமுமே போதும். அந்த நாமத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைக்கவேண்டும். 'சாதி, சமயம், கல்வி, பதவி, பணம், திறமைகள் எல்லாவற்றிலும் நான் உயர்ந்தவன்’ என்ற  எண்ணம் நமக்குள் வளரவிடக்கூடாது. அப்படியரு எண்ணம் நம்மையும் அறியாமல் நமக்குள்ளே எழுந்தாலும், இறைவனின் திருநாமத்தை மனதிற்குள் சொல்லியே அதை அடித்துத் துரத்த வேண்டும்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் பாப்பையா. கடவுளை நண்பனாகக் கருதும் பக்குவத்தை தொடர்ந்து கற்றுத் தருகிறார் பாப்பையா.

''எத்தனை நெருக்கடி வந்தாலும்,  படுக்கையில் விழும்பொழுதும் எழும்பொழுதும் விழிகளை மூடி இறைவன் திருநாமத்தை இதயத்திற்குள் பலமுறை உள்ளார்ந்து உச்சரிக்கவேண்டும். காலைக் கடனை முடித்தவுடன் கண்டதையும் மனத்துக்குள் போட்டுக்கொள்ளாமல், கவலையை மறந்து கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டே, பெரிய கோயில்களின் வெளிச்சுற்றுக்கள் அல்லது வசதிமிக்க வெளிப்பரப்பில் வேக நடை போடுங்கள். வியர்வை அடங்கி குளித்து முடித்ததும், நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து, கடவுளின் திருப்பெயரை சொல்லிச் சொல்லி அவனோடு மனம் திறந்து பேசலாம். அடிகளார்களின் பாடல்களைப் பாடி மகிழலாம். ஏன்... தன் பக்குவ நிலைமைக்கு ஏற்ப கவலைகளை அவனிடம் சொல்லி அழக்கூட செய்யலாம்! மனம்விட்டும் பேசுவதே மகத்தான மருந்து. கடவுளை உங்களின் ஆத்மார்த்த நண்பனாக நினைத்துக்கொள்ளுங்கள்.

எல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று எண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில் இருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும். எங்கெல்லாம் வழிபாடு நடைபெறுகிறதோ, அங்கே அதுவும் அவன் வழிபாடே என்று முழு நம்பிக்கையோடு வழிபடவேண்டும். 'தன் பெண்டு தன் பிள்ளை’ என்று எண்ணிப் பணம் சேர்க்கும் பண்பில் வளராமல், இறைவன் கொடுத்த வளம் அவன் மக்களுக்கும் என்று எண்ணி செயல்பட்டால் உள்ளம் அவன் கோயிலாகிறது. அந்த கோயிலுக்குள் தீய சிந்தனை என்னும் அழுக்கு ஒருபோதும் சேராது... மன அழுக்கு இல்லாத உடலில் கடவுள் குடியிருப்பார். அவர் குடியிருக்கும் கோயிலுக்கு நலமும் வளமுமே வாய்க்கும். அத்தகைய வளத்தோடு வாழ்வதற்கான வழிகளை நாமும் தேடுவோமா?'' - பட்டிமன்றத் தீர்ப்பைப்போலவே பளீர் சிரிப்பில் வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லி முடிக்கிறார் பாப்பையா.

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி