Published:Updated:

ஆறாம் திணை

மருத்துவர் கு.சிவராமன், படம்: பிரபு பி.தாஸ்

ஆறாம் திணை

-ம் நூற்றாண்டு வரை நம்மிடையே தீபாவளி இல்லை.

கார்த்திகைத் திருவிழா, தைப்பூசம், திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி பதினெட்டு... இவைதாம் நாம் கொண்டாடிய பழந்தமிழர் விழாக்கள்’ என்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன் தன் 'பண்பாட்டு அசைவுகள்’ எனும் நூலில்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'21-வது சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் நினைவு நாளை தீபம் ஏற்றிக் கொண்டாடிய வழக்கமே, நரகாசுரன் அழிந்த நாளாக பின்னாளில் மாறியது’ என்பது தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. 'நீத்தார் நினைவு நாளில் தலையில் எண்ணெய் வைப்பது என்பது, இடைக்காலத்தில் நம்மிடம் வந்துசேர்ந்த மரபு. அந்த மரபின்படிதான் தீபாவளி நாளில் தலைக்கு எண்ணெய் வைப்பதும் நம்மிடையே வந்தது’ என்கிறார்கள்.

தீபாவளி கொண்டாடும் பழக்கம் வரும்  முன்னரே தலைக்கு எண்ணெய் வைத்துக் குளிப்பது என்பது, நம் அன்றாட வாழ்வியலாக, மருத்துவமாக, மருத்துவத்தில் மறுபத்தியமாக, மரபாக, சடங்கு சாங்கியமாக நம்மோடு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த ஒன்று.

'பஞ்சேந்திரியமும் பலத்துத் தெளிவையுரும்’ என்கிறது சித்த மருத்துவம். எள்ளின் நெய், ஆமணக்கு நெய், வேம்பு நெய், பசு நெய் இத்தனையும், அந்த நாளில் தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்பட்ட எண்ணெய்கள்தாம்.

ஆறாம் திணை

வெகு சமீபத்தில், காற்றில் அலை அலையென பளபளப்பாகப் பறக்கும் கூந்தல்தான் 'நாகரிகம்’ என ஆகிப்போனதில் இருந்து தலைக்கு எண்ணெய் வைப்பதே மறைந்துவருகிறது. அதே எண்ணெயில் கொஞ்சம் acidifiers, polymers, hydrolyzed protein, moisturizers, dimethicone, sequestrants, lubricants, amino acids  என கிளார்க் அட்டவணையில் இருக்கும் ரசாயனங்களில் பெரும்பாலானவற்றை ஒன்றாகக் கலக்கி தயாரிக்கப்படும் கண்டிஷனரில் முடியை 'அமிலக் கழுவலுக்கு’ உள்ளாக்கும் போக்கே அதிகரித்து வருகிறது.

'தலையில்... மூட்டில்... உடலில் எண்ணெயைத் தேய்ப்பதா?’ என்று சில காலத்துக்கு முன்பு வரை நவீன அறிவியலும் வரிந்துகட்டி கேள்வி எழுப்பியபடிதான் இருந்தது. ஆனால், இப்போதோ நிலைமையே வேறு!

பூனாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், கைக்குழந்தைகளுக்கு தைலம் தேய்த்து மசாஜ் செய்வதால், எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதை உறுதி செய்கிறது என 'Indian Paediatrics’ எனும் மருத்துவப் பத்திரிகை தெரிவிக்கிறது. உடல் எடை, சரும வனப்பு, குழந்தை நன்கு தூங்கி எழும் தன்மை ஆகிய பல நலக்கூறுகளை எண்ணெய் மசாஜ் குளியல் அதிகரிப்பதை சமீபத்திய மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

'தினமும் கொஞ்சமே கொஞ்சம் எண்ணெயை தலையில் தேய்த்துக் குளிக்கக் குளிக்க, தோல் வறட்சி நீங்கும்; உடல் வலி சோம்பல் தீரும்; அடிக்கடி சளி பிடிக்கச் செய்யும் சைனஸ் தொல்லை குறைவதோடு, பல் வியாதிகளைக்கூட கட்டுப்படுத்தும்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ எனும் மருத்துவ நூல்.

'அட நீங்க வேற... பொறந்து வளர்ந்த ஊரைவிட்டு என்னைக்கு சென்னை வந்தேனோ, அன்னைக்கே எனக்கு சைனஸ் வந்துருச்சி. என்னைக்கு தலைமுடி கொட்ட ஆரம்பிச்சதோ, அப்போ இருந்து கார்ப்பரேஷன் தண்ணியைத் தலைக்குக் காட்டுறதே இல்லை. இந்த லட்சணத்துல நீங்க தினமும் எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கச் சொல்றீங்களே சார்!’ என்று அலுத்துக்கொள்ளும் தமிழர்களுக்கு சிறு விளக்கம்...

'குளியல்’ என்பது கார் அல்லது பைக்கைக் கழுவுவதுபோல அழுக்கு நீக்கும் ஒரு கடமை மட்டுமே அல்ல. வியர்வை, அழுக்கு போக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்லோரும் வேலை முடித்து இரவில்தான் குளிக்க வேண்டும். ஆதிகாலம்தொட்டு ஏன் காலையில் குளித்துக்கொண்டிருக்கிறோம்? இரவெல்லாம் பூமியில் சந்திரனின் ஆட்சி. பகலில் சூரியனின் ஆட்சி. சந்திரன், பிரபஞ்சத்தைக் குளிர்விக்கும்; சூரியன், பிரபஞ்சத்தை உஷ்ணமாக்கும். அதைத் தாங்கிக்கொள்ளும் வகையில் நம் உடல் குளிர்ச்சியடைய வேண்டும். அதனால்தான் சூரியனின் தாக்கம் தொடங்கும் காலை வேளையில், நம் உடலைக் குளிர்விக்க, வளர்சிதை மாற்றத்துக்கு ஏதுவாக காலைக் குளியல் அமைக்கப்பட்டது.

ஆறாம் திணை

'நதி நீராடல்’ வாய்ப்பே இல்லாது போய்விட்ட கான்க்ரீட்வாசிகளான நாம், குறைந்தபட்சம் தினமும் தலைக்குக் குளிப்பது நல்லது. கழுத்துக்குக் குளிப்பது, இடுப்புக்குக் குளிப்பது, பாத்திரம் கழுவுவதுபோல் பாத் டப்பில் படுத்துக்கொண்டு குளிப்பதால் எல்லாம் ஒருவேளை அழுக்கு நீங்கலாம்... ஆனால், வியாதி நீங்காது.

மூக்கடைப்புக்காரர்கள் உரிய மருத்துவத்துடனும் கூடுதலாக சுக்கு, தைலம் போன்ற சித்த மருத்துவத் தலைமுழுக்குத் தைல உதவிகளுடனும் கண்டிப்பாகத் தலைக்குக் குளிக்க வேண்டும். ரத்தக்கொதிப்பு நோயாளிகள் நல்லெண்ணெயில் சீரகம் போட்டுக் காய்ச்சியும், அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உடையவர் மிளகு போட்டுக் காய்ச்சியும் குளிப்பது நல்லது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலின் நிணநீரின் ஓட்டத்தைச் சீராக்குகிறது என்பது, நவீன அறிவியலுக்கும் புரியத் தொடங்கியுள்ளது. இந்தக் குளியல், நோய்வாய்ப்பட்ட இடத்தில் நோய் எதிர்ப்பாற்றலைத் தீண்டி,  புண் மற்றும் வலி நிவாரணத்தைத் தூண்டுவதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், எண்ணெய் தேய்த்து உடலை மசாஜ் செய்து குளிப்பதினால் புற்றுநோயின் தீவிரமும் குறையக்கூடுமோ என ஆராயத் தொடங்கியுள்ளனர். அப்பத்தா, அம்மாக்களுக்குப் பயந்து தீபாவளிக்கு மட்டும் எண்ணெய்க் குளியல் செய்யாமல், அதை வழக்கமாக்கிக் கொண்டால், பல நோய்கள் நம் பக்கம் வராது.

தித்திப்பு இல்லாமல் தீபாவளியா? வெள்ளைச் சர்க்கரை இல்லாத தித்திப்பை இந்தத் தீபாவளியில் இருந்தேனும் கொஞ்சம் முயற்சிப்போமே! தினை அதிரசத்துக்கும், திரட்டுப்பாலுக்கும், இனிப்புப் பணியாரத் துக்கும், முந்திரிக் கொத்துக்கும், கம்பு உருண்டைக்கும் வெல்லம் போதும். அதுவும் ஹைட்ரேஸ் சேர்க்காத பழுப்பும் கறுப்புமாக இருக்கும் உதிரி நாட்டு வெல்லம்தான் இந்த மண்ணையும் காற்றையும் நீரையும்கூட இனிப்பாக வைத்திருக்கும்.

சிறுதானிய ஸ்வீட் கொழுக்கட்டை, நிலக்கடலை பர்ஃபி, தினையரிசி முருக்கு, வரகரிசி தேன்குழல், சாமையரிசி ரிப்பன் பக்கோடா... என நீங்கள் உங்கள் வீட்டை மகிழ்வூட்டும் முயற்சியில்தான் இந்த நாட்டையும் மகிழ்வூட்ட முடியும்!

குதூகலத்திலும் கொண்டாட்டத்திலும் உடன் வாழ்ந்த நிலத்துக்கு அறமும் நன்றியும் சொன்ன கூட்டம் நாம். வானம் பார்த்தே சூழல், காலம் சொன்னவர் வாழ்ந்த பூமி இது. வீசும் காற்றின் ஓசை உணர்ந்து நாவாய் திருப்பிய கடல் ஆண்டவனின் மண் இது. இலையின் வாசம் பார்த்து வைத்தியம் சொன்ன அறிஞர் நிறைந்திருந்த நிலம் இது. விளையும் பொருளும், விளைந்த நிலமும் பார்த்து, வாழ்வியல் சொல்லும் நாகரிகம் படைத்தவன் உலகம் இது.

எண்ணெய்க் குளியலில் தொடங்கி மஞ்சள் நீர், வேம்புக் காப்பு, முளைப்பாரி, வாழைப்பந்தல், கோபுரக் கலசத்து வரகரிசி என்ற பல நலவாழ்வுச் சூத்திரங்கள் காலம்காலமாக தமிழ் மரபில் விழாக்களுடனும் சடங்குகளுடனும் பொதிந்துபோய் இருக்கின்றன. அவற்றைப் பத்திரமாகக் கட்டவிழ்த்துப் பயன்படுத்த வேண்டியது மட்டுமே நம் கடமை!

- பரிமாறுவேன்...