Published:Updated:

வாவ்! தோனி மாற்றி வடிவமைத்த ஸ்கார்ப்பியோவில் இத்தனை வசதிகளா? #MSDhoni

வாவ்! தோனி மாற்றி வடிவமைத்த ஸ்கார்ப்பியோவில் இத்தனை வசதிகளா? #MSDhoni
வாவ்! தோனி மாற்றி வடிவமைத்த ஸ்கார்ப்பியோவில் இத்தனை வசதிகளா? #MSDhoni

கிரிக்கெட்டுக்குப் பிறகு மகேந்திர சிங் தோனிக்கு ரொம்பவும் பிடித்தது - கார், பைக்ஸ் என்று சொல்லலாம். மேட்ச்சில் போர் அடித்தால் ஃபோர், சிக்ஸ் என்று ஹெலிகாப்டர் ஷாட்கள் அடித்து பட்டையைக் கிளப்புவதுபோல், வீட்டில் போர் அடித்தால் பைக், கார் ஏதாவது ஒன்றை ஸ்டார்ட் செய்து பப்ளிக்கை அசத்தி விடுபவர் தோனி. கார்/பைக்கில் ஸ்பீடோமீட்டரின் முள் தெறிக்க, டாப் ஸ்பீடில் பறப்பது தோனியின் ஸ்பெஷல். இன்றைய தேதி வரை 22 பைக்குகளும், 15-க்கும் மேற்பட்ட கார்களும் தோனியின் கராஜில் வீற்றிருக்கின்றன. கவாஸாகி, ஹார்லி டேவிட்சன், நார்ட்டன் என்று வெரைட்டியாக பைக்குகள் இருந்தாலும், முதன்முதலாக 4,500 ரூபாய்க்கு, தான் வாங்கிய யமஹா RD350 பைக் மீதுதான் தோனிக்கு பாசம் அதிகம். அதேபோல் கார்கள் லிஸ்ட்டும் வேற லெவல். ஹம்மர், லேண்ட்ரோவர், போர்ஷே, ஃபெராரி, ஆடி என்று காஸ்ட்லி கார்கள் இருந்தாலும், ஆஃப் ரோடு எஸ்யூவி வாகனங்கள் மீது தோனிக்கு எப்போதும் ஒரு தனி கண் இருக்கிறது.

முன்பு, தான் வாங்கிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரை செமையாக தற்போது மாடிஃபிகேஷன் செய்திருக்கிறார். அண்மையில் தனது ஊரான ராஞ்சி ஸ்டேடியத்தில், ரூஃப் இல்லாத ஸ்கார்ப்பியோவில் தோனி வந்து இறங்க, அனைவரது கண்களும் விரிந்தன. காரணம், இதன் வெளித்தோற்றம் அப்படி. கார்களை அதன் உருவத்திலிருந்து மொத்தமாக மாற்றி, ரீ-மாடிஃபிகேஷன் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றாலும், மஹிந்திராவாலேயே இந்த கார் ரீ-டிஸைன் செய்யப்பட்டிருப்பதுதான் ஸ்பெஷல். 

இதன் கலர் தீமே ‘வாவ்’ என்று வியக்க வைக்கிறது. சிவப்பு மற்றும் கறுப்பு வண்ணத்தில், செம கான்ட்ராஸ்ட்டாக இருக்க வேண்டும் என்று ஸ்பெஷலாக இந்த கலர்களைக் கேட்டு வாங்கினாராம் தோனி. ஓப்பன் டைப் வாகனமாக மாடிஃபை செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கார்ப்பியோ, முழுக்க முழுக்க ஆஃப்ரோடு வாகனமாக மாற்றப்பட்டிருக்கிறது. எவ்வளவு பெரிய பொருளின் மீது மோதினாலும் காரைப் பாதுகாக்கும் Bull Bar, (இது ராணுவ வாகனங்களிலும் பீரங்கிகளிலும் இருக்கக்கூடிய வசதி) தண்ணீருக்குள்கூட ஒளிரும் ஃப்ளட் லைட்ஸ், காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்போது நேரடியாக காற்றை இன்ஜினுக்குள் அனுப்பும் Hood Scoop, ORVM-ல் இண்டிகேட்டர்கள், ஸ்ட்ராங்கான அலாய் வீல்கள், டூயல் எக்ஸாஸ்ட்டுகள் என்று முரட்டுத்தனமான ஆஃப்ரோடு வாகனமாக மாறியிருக்கிறது தோனியின் ஸ்கார்ப்பியோ. இது கிட்டத்தட்ட 3 அடி வரை தண்ணீருக்குள் செல்லும் தன்மை கொண்டது.

இன்டீரியரைப் பொறுத்தவரை, வழக்கமான ஸ்கார்ப்பியோவில் இருக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் இங்கே காலி. லெக் ரூம் அதிகம் கிடைப்பதற்காக, இரண்டாவது வரிசை சீட்டுகளைப் பின்னே தள்ளியிருக்கிறார்கள். இன்ஜினைப் பொறுத்தவரை, எந்த மாற்றங்களுக்கும் தென்படவில்லை. 120bhp பவரும், 29kgm டார்க்கும் கொண்ட அதே 2.2 லிட்டர், M-Hawk, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான். ‘‘சிட்டிக்குள் என்றாலும் சரி; காட்டுக்குள் என்றாலும் சரி - இந்த ஸ்கார்ப்பியோதான் என் செல்லம்!’’ என்று தனது ஆஃப்ரோடு ஸ்கார்ப்பியோவை உச்சிமுகர்கிறார் தோனி.

எப்போதாவது சாலைகளில், காருக்குப் பின்னால் ‘MS' என்ற நம்பர் பிளேட் கொண்ட ஸ்கார்ப்பியோ ஓடினால், அது தோனியோட ஸ்பெஷல் ஸ்கார்ப்பியோ என்பதை மறந்து விடாதீர்கள்!

- தமிழ்.