Published:Updated:

காதல், குடும்ப சிக்கல்களுக்கு 11 வயது சிறுவன் தரும் கவுன்சலிங்!

விகடன் விமர்சனக்குழு
காதல், குடும்ப சிக்கல்களுக்கு 11 வயது சிறுவன் தரும் கவுன்சலிங்!
காதல், குடும்ப சிக்கல்களுக்கு 11 வயது சிறுவன் தரும் கவுன்சலிங்!

நியூயார்க்கில் உள்ள சுரங்க ரயில் நிலையம் அது. எப்போதும் ஒருவித பரபரப்புடன் அங்கு கடந்தபடியே இருக்கும் மக்கள், இப்போது ஒரு கணம் நிறுத்தி, அங்கு ஓரத்தில் சேர் போட்டு அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனை கவனித்துவிட்டுதான் நகர்கிறார்கள். அப்படி அனைவரின் கவனத்தையும் அவன் ஈர்க்கக் காரணம், அவன் முன் வைக்கப்பட்டிருக்கும் 'உணர்வுப்பூர்வமான ஆலோசனை - இரண்டு டாலருக்கு( Emotional Advice $2' என்று வாசகம். ஆம்... அவன் ஒரு குட்டி கவுன்சிலர்!

அந்தச் சிறுவனின் பெயர், சிரோ ஆர்டிஸ். ஆறாவது கிரேடு படிக்கும் 11 வயதுச் சுட்டி. மினி தெரபிஸ்டாக மாறி, மக்களின் எமோஷனல் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி வரும் இவன், அதற்காக இரண்டு டாலர்கள் வசூலிக்கிறான். சப்வே ரயில் நிலையத்தில் மட்டும் அல்ல, நியூயார்க் தெருக்களிலும் அமர்ந்து, 'என்ன செய்யலாம் பாஸ்?' என்று தங்கள் பிரச்னையுடன் தன்னை அணுகுபவர்களுக்கு, கூல் தீர்வு சொல்லி அனுப்புகிறான் இந்த சமர்த்துப் பையன்!

சிரோ இப்படி குட்டி யோகியாக மாறக் காரணம், அவன் பெற்றோர். பள்ளியில் சக மாணவர்களால் அவன் துன்புறுத்தப்படும் போதெல்லாம், அதை தன் பெற்றோரிடம் வந்து பகிர்ந்துகொண்டான். அதற்கு அவர்கள், 'யார் என்ன சொன்னாலும், செய்தாலும் 'டேக் இட் ஈஸி' ஆக எடுத்துக்கொள். அப்போது எந்தப் பிரச்னையும் உன்னை நெருங்காது. எல்லாப் பிரச்னைகளுக்கும் மனசுதான் காரணம்' என்று அறிவுரை வழங்க, அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டான் சிரோ. 'ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை இருக்கும். அதற்கான தீர்வு, அவர்கள் மனதில் இருந்துதான் பிறக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கு ஆலோசனையாகச் சொன்னால் என்ன?' என்று நினைத்தான். 'இலவசம் என்றால் மதிப்பு இருக்காது என்பதால், அதற்கு இரண்டு டாலர்கள் கட்டணம் வாங்குகிறேன்' என்று, 'நியூயார்க் போஸ்ட்' பத்ரிகையிடம்  தெரிவித்துள்ளான் சிரோ.

காதல், திருமணம், உறவுச் சிக்கல்கள் என்று பல பிரச்னைகளுக்கும் சிரோவிடம் ஆலோசனை கேட்டுச் செல்கிறார்கள் நியூயார்க் மக்கள். ஒரு நாளைக்கு சராசரியாக சிரோ 50 டாலர்கள் சம்பாதிக்கிறான்(இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,400). அதைப் புத்தகங்கள் வாங்கவும், பள்ளியில் தன் நண்பர்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கிக்கொடுக்கவும் செலவழிக்கிறான்.

'வாழ்க்கை விலை மதிக்கமுடியாதது. இதில் வருத்தங்களுக்கு எந்த இடமும் தந்துவிடாதீர்கள்' என அறிவுறுத்தும் சிரோ, ஒவ்வொருவரின் பிரச்னைக்கும் ஏற்ப ஆலோசனை வழங்குகிறான். ஒரு தம்பதி சிரோவை அணுகினர். கணவர்,  'என் மனைவி சைவத்துக்கு மாறிவிட்டாள். இதனால் எங்களுக்குள் அவ்வப்போது சண்டை வருகிறது' என்று தன் பிரச்னையைக் கூறினார். அதற்கு சிரோ, ' 'உனக்கு என்ன சாப்பிடப் பிடிக்குமோ அதையே சாப்பிடு. அதில் நான் தலையிட மாட்டேன். அதேபோல எனக்குப் பிடித்த உணவை நான் சாப்பிடுவேன். இதில் நீ தலையிடாதே' என்று இருவரும் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் பிரச்னை ஓவர்' என்று கூல் செய்து அனுப்பினான்.

இப்படி சிரோ கூறும் ஆலோசனைகள் தங்களுக்கு வொர்க்அவுட் ஆனதும், அவர்கள் மறக்காமல் அவனைத் தேடி வந்து, 'ரொம்ப நன்றி சிரோ' என்று பாராட்டிச் செல்கிறார்கள்.

நீ கலக்கு குட்டி!

- மல்லிகார்ஜுனா