Published:Updated:

சைபர் க்ரைமை கண்டிக்கும் பெண்கள்! ஜோதிமணிக்கு குவியும் ஆதரவு #ISupportJothimani

சைபர் க்ரைமை கண்டிக்கும் பெண்கள்! ஜோதிமணிக்கு குவியும் ஆதரவு #ISupportJothimani
சைபர் க்ரைமை கண்டிக்கும் பெண்கள்! ஜோதிமணிக்கு குவியும் ஆதரவு #ISupportJothimani

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணியின் மீது நேற்றிரவு கடுமையான முறையில் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் பாலியல் ரீதியிலான தாக்குதல் நடந்தது. அதை தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்பில் ஜோதிமணியை குறித்து ஆபாசமான வார்த்தைகள் அடங்கிய உரையாடல்கள் அங்கே தொடரப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜோதிமணி வாட்ஸ் அப் உரையாடல்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து அதை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டதுடன், பிரதமர் மோடிக்கும், தமிழிசை சௌந்திரராஜனுக்கும் நீண்ட கடிதம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இதை தொடந்து ஜோதிமணிக்கு ஆதரவாக பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இந்த சைபர்கிரைம் குற்றம் குறித்து பல்வேறு தரப்பினரிடம் பேசினோம்.

விஜயதாரணி, காங்கிரஸ் :

ஜோதிமணியின் மீதான இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பெண்கள் அரசியல் ரீதியாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வதை பொறுத்து கொள்ள முடியாத சிலரே இத்தகைய செயல்களை செய்கிறார்கள். ஆகவே முழுக்க முழுக்க ஜோதிமணிக்கு ஆதரவு அளிக்கிறோம். ஒரு பென்ணை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் தான் இப்படி பாலியல் ரீதியான அருவருப்பான பேச்சுகள் மூலம் பழி தீர்த்துக் கொள்ள நினைக்கிறார்கள். பெண்கள் இப்படியான செயல்களைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து தைரியத்தோடு போராட வேண்டும்.ஜோதிமணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்தமாய் பெண்கள் தரப்பில் ஆதரவு தருகிறேன்.

லீனா மணிமேகலை, எழுத்தாளர்:

ஜோதிமணியின் மீது நடந்திருக்கும் சைபர் பாலியல் தாக்குதலை கண்டிக்கிறேன். ஆனால் இது முதல் தடவையல்ல. சமூக அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகப் பதிவிடும் பெண்களை பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்யும் தாக்குதல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இடது, வலது, தேசியவாதிகள் என அனைத்து சித்தாந்த ரவுடிகள் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், கவிஞர்கள், செயல்பாட்டாளர்கள், கார்டுனிஸ்டுகள், என அறியப்பட்டவர்களின் "ஆண்மை" ஒன்றுசேரும் புள்ளி பாலியல் வசவு.
தேர்ந்தெடுத்தவர்களுக்கு மட்டும் கூக்குரல் போடாமல், தங்களுக்கு உவப்பில்லாத அரசியல் கருத்துள்ள பெண்கள் தாக்கப்படும்போதும் எல்லோரும் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தாலன்றி, இந்த வன்முறை நிற்காது. மொட்டை சுவரில் அமர்ந்து விசில் அடிப்பவர்கள், நோ சொல்லும் பெண் மீது ஆசிட் அடிப்பவர்கள், கத்தியால் குத்துபவர்கள் தான் முகநூல் டிவிட்டர் சுவர்களிலும் பொறுக்கி கொண்டிருக்கிறார்கள். இதில் இன்டலக்சுவல் ஆண்களும் விதிவிலக்கல்ல. ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் சைபர் செல்களும் சைபர் சட்டங்களும் கடுமையாக்கப்பட்டால் ஒருவேளை இந்த வக்கிரத்தை ஒடுக்கலாம். வன்முறையாளர்கள் தொடர்ந்து தில்லாக இயங்குவதற்கு காரணம் நமது கலாசாரத்திலேயே ஊறியிருக்கும் வன்முறை தான். "அடக்கி வாசிக்கலாம்ல!!" "நாய்ங்க குலைச்சிட்டு தான் இருக்கும் அதுக்கெல்லாம் பயப்படலாமா?!" என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச அட்வைஸ் மட்டும் எப்போதும்  கிடைக்கும்.  ஆனால் வன்முறையாளர்களை நோக்கி எல்லா சுட்டு விரல்களும் அறிவுரைகளும் பாரபட்சமில்லாமல் நீளுமா என்றால் கேள்விக்குறி தான். மேற்கில் இருப்பது போல் இங்கே கிடுக்கிப்பிடி பிடித்தால் நம்மூரில் கூடுதல் சிறைகள் தான் கட்ட வேண்டி வரும்.

கவின்மலர், பத்திரிகையாளர்:

ஒரு வாட்ஸ் அப் குரூப்பை உருவாக்கி அதில் பலரையும் இணைத்து குரூப்பின் பெயரை ஆபாசமாக வைத்து அதில் பேசும் உரையாடல்கள் வரை இவ்வளவு ஆபாசமாக ஒரு பெண்னை சித்தரிக்கிறார்கள் என்றால் இதெல்லாம் யார் கொடுத்த தைரியம்?. சைபர்கிரைம் உண்மையாகவே எதன் அடிப்படையில் செயல்படுகிறது. இதுவரை யார் யார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் அல்லது சைபர் கிரைம் மூலமாக புகார் கொடுத்தால் என்ன தண்டனை வழங்கப்படுகிறது உள்ளிட்டவை எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது வதந்தியை ஏற்படுத்தியாக சமூக வலைதளங்களில் இயங்கிய சிலரை கைது செய்திருந்தார்கள். ஆனால் இதே நடவடிக்கையை ஏன் சாதாரணமாக ஒரு பெண் கொடுக்க முயலும் போது எடுக்கப்படுவதில்லை? ஒரு பெண் பொதுவெளிக்கு, அதிலும் குறிப்பாக அரசியலுக்கு வர முயன்றால் அவரை ஆபாசமாக சித்தரித்து அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவரது முன்னேற்றத்தை திசைதிருப்புவதற்காக இத்தகைய செயல்களை செய்கிறார்கள். இப்படியான தாக்குதல்களை எதித்து ஒரு பெண் போராட முயன்றால் அவளை கண்டு கொள்ளாமல் இருக்கச் சொல்லியே அறிவுறுத்துகிறார்கள். இந்த போக்கு சரியானது அல்ல.


ஷாலின் மரியா லாரன்ஸ், சமூக ஆர்வலர்:

கணவன் மனைவியை அடித்தால் மனைவியைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். சைபர் கிரைம் என்பதெல்லாம் கண்துடைப்பு வேலைதான். முதல்ல நீ ஒழுங்கா இரு, எதுக்கு ஃபேஸ்புக் பக்கம் போறீங்க, ஒழுங்கா இருக்க வேண்டியது தானே, என்றெல்லாம்  பெண்களை அடக்கவே முன்வருவார்களே தவிர தவறு செய்யும் ஆண்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சரியாக இயங்காத சைபர் கிரைமை நம்பி ஒரு பயனுமில்லை. அதனால பெண்கள் என்னதான் சட்டரீதியான நடவடிக்கைக்கு முன்னெடுத்து சென்றாலும் தாங்களே முன்வந்து பொதுவெளியில் நியாயம் கேட்க முன் வந்தால் தான் ஓரளவிற்கு பயப்படவாவது செய்வார்கள்.


வினிசர்பனா, பத்திரிகையாளர்:

பெண்கள் அரசியலுக்கு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை மறைமுகமாக அழிக்கவே இத்தகைய செயல்களை செய்கிறார்கள். எதிர்கட்சியில் இருக்கும் ஒருவர் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு அதற்குரிய வகையில் திறம்பட செயல்படுவது தான் நல்லது. அதைவிடுத்து நாகரிமான எதிர்த்து வாதத்தை வைக்கத் துணிவில்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் சாடுவது கொஞ்சம் கூட ஏற்புடையது அல்ல. சமீபத்தில் வைகோ மீது தாக்குதல் நடத்திய போது ஸ்டாலின் தன் கட்சிக்காரர்கள் குறித்து வருத்தம் தெரிவித்தது போல் பிஜேபியை சேர்ந்த தலைவர்களும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். உடல்ரீதியான பெண்களை தாக்கும் இந்த போக்கு மாற வேண்டும்.

-பொன்.விமலா