Published:Updated:

சிட்டுக்குருவிகளின் சத்தங்களை நாம் இனி கேட்க முடியுமா?

சிட்டுக்குருவிகளின் சத்தங்களை நாம் இனி கேட்க முடியுமா?
சிட்டுக்குருவிகளின் சத்தங்களை நாம் இனி கேட்க முடியுமா?

சிட்டுக்குருவிகளின் சத்தங்களை நாம் இனி கேட்க முடியுமா?

சிட்டுக்குருவிகளின் சத்தங்களோடு புலரும் காலைப்பொழுதுகள் வெகு சில வருடங்களுக்கு முன்புவரை நமக்கு அதிகமாக வாய்த்திருக்கும். இனி பறவைகளின் சத்தங்கள் நம் காதுகளை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போர் நிலமொன்றின் தோட்டாக்களுக்குச் சிதறிய அமைதியைப் போல, நகரமயமாதலின் பொருட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன இரை தேடும் இனங்கள்.

பறவைகளின் அழிவு நிழலாடும் இந்தத் தருணத்தில் கவிஞர் க.அம்சப்ரியாவின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. 

மர ஓலம்!

முறியும் கிளைகளின்

ஓயாத பேரோலமும்

பறவைகளின் அழுகைச் சத்தமும்

இடைவிடாது துன்புறுத்த

திடுக்கிட்டு உறக்கம் கலைகிறது.

என் அறை இருக்கும் இவ்விடத்தில்

இருந்திருக்ககூடும்

அடர்வனத்துக்கான விதைகளைச்

சுமந்த

ஒரு

பெ

ரு

ம்

- க.அம்சப்ரியா (ஆனந்த விகடன் - சொல்வனம்)

நகரமயமாக்கலின் பொருட்டு இயற்கை வளத்தைத் திட்டமிட்டு அழித்தல், இறைச்சிக்காகப் பறவைகளை வேட்டையாடுதல், நீர் மற்றும் காற்றை மாசுபடுத்துதல், பறவைகளைச் சட்டவிரோதமாகப் பிடித்துச் சுகாதாரமற்ற முறையில் கூண்டிலடைத்து விற்பனை செய்தல், தற்போதைய நவீன வேளாண்முறைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பறவையினங்களில் 12 சதவிகிதம் அழிவின் விளிம்பில் இருப்பதாகப் பறவை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மன்னார்குடியைச் சேர்ந்த பறவையியலாளரும், புகைப்படக் கலைஞருமான அரவிந்த் அமிர்தராஜிடம் பறவைகளின் அழிவையும், அதைத் தடுக்கும் வழிகள் குறித்தும் பேசினேன். 

"பறவைகளின் எண்ணிக்கைக் குறைவுக்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?"

"மனிதர்களுக்குப் பறவைகளும் சேர்ந்ததுதான் சுற்றுச்சூழல் என்பதே சமீபகாலங்களில் மறந்துபோய்விட்டது. நாம் அறியாமல் செய்யும் சிறு தவறுகளும் ஓர் இனத்தின் அழிவுக்கே காரணமாகிவிடுகின்றன. ஆடு, மாடுகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் டைக்லோஃபெனாக் சோடியம் எனும் ஊசி போடப்படும். அந்த வேதிப்பொருள் பறவைகளுக்கு வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆடு, மாடுகளுக்கு அந்த ஊசியைச் செலுத்தியபின் அவை இறந்துபோனால் சரியான முறையில் அவற்றின் உடல் புதைக்கப்படுவது இல்லை. அவற்றை உண்ணும் கழுகுகள் இறந்து போகின்றன. கழுகுகள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்ததற்குக் காரணம் இதுதான். அதனால். இந்த மருந்தைத் தடை செய்ய வலியுறுத்தி வருகிறோம். ஒரு சுற்றுச்சூழல் வட்டத்தில் இருக்கும் எல்லா உயிரினங்களும் சரியாகச் செயல்பட்டால்தான் அந்தச் சுழற்சி முழுமையுறும். ஊண் உண்ணிப் பறவையினத்தின் அழிவு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையே நாசமாக்கும் தன்மை கொண்டது.

பள்ளிக்கரணை பகுதிக்கு ஆண்டு முழுவதும் வெளிநாட்டுப் பறவைகள் வந்துகொண்டிருக்கும். நன்னீர் ஏரி, குளங்களில் உருவாகும் அசுத்தங்களைச் சுத்தப்படுத்துவதுதான் அந்தப் பறவைகளின் வேலை. ஆனால், இப்போதெல்லாம் புதிய கட்டடங்கள் கட்டுதல், பிளாஸ்டிக் மற்றும் துத்தநாகக் கழிவுகள் அதிக அளவில் சேர்ததால் பறவைகளுக்கு விரும்பத்தகாத இடமாக பள்ளிக்கரணை மாறிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் பறவைகளின் வரத்து குறைவதற்குக் காரணமும் அதுவே. இதனால், தன்னிச்சையாக இனப்பெருக்கம் குறைந்து பறவைகளின் எண்ணிக்கையும் குறையும்."

"பறவைகள் அழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும்?"

"அரசின் திட்டங்களைச் சார்ந்திருக்காமல் பறவை ஆர்வலர்கள் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். பொங்கல் கொண்டாடப்படும் மூன்று நாட்களில் ebird.org சார்பில்  'Pongal Bird Count' ங்கிற பெயரில் தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் பறவைகள் எண்ணிக்கைக் கணக்கெடுப்பு நடத்துவோம். அது தவிர, பள்ளி மற்றும் கல்லூரிகளில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துகிறோம். வெறுமனே கணக்கெடுப்புகள் நடத்தினால் அவைகளின் அழிவை கண்முன்னே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளிகளிலேயே எல்லோருக்கும் பறவைகளின் முக்கியத்துவத்தையும், தற்போது இருக்கும் நிலையையும் தெளிவாக விளக்க வேண்டும். அரசாங்கம் இந்தப் பிரச்னையைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்."

"சிட்டுக்குருவிகள் இனத்தின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?"

"சிட்டுக் குருவிகளின் அழிவிற்கு செல்போன் டவர்கள்தான் காரணம் என எல்லோரும் கையைக் காட்டிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறோம். சிட்டுக்குருவிகள் பெருமளவு அழிவிற்குக் காரணங்கள் இவைதான்.

1) சிட்டுக்குருவிகள் அதிக முயற்சி செய்து கூடு கட்டாது. கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளின் உத்தரங்களிலும், சிறு மரங்களிலும் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளும். அடுக்குமாடிகள் கட்ட ஆரம்பித்தபோதே சிட்டுக்குருவிகளின் இனமும் அழிவைச் சந்திக்க ஆயத்தமாகிவிட்டது. 

2) சிட்டுக்குருவிகளின் விருப்ப உணவான கம்பு, சோளம், திணை போன்ற சிறு தானியங்கள் விளைவிப்பதைக் குறைத்து, பணப்பயிர்களின் உற்பத்தியை விவசாயிகள் அதிகரித்ததும் ஒரு காரணம். சிட்டுக்குருவிகள் அவைகளுக்கு ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டால் தங்கள் சந்ததியைச் சுருக்கிக்கொண்டன. 

3) பூச்சிக்கொல்லி மருந்துகளால் கொல்லப்பட்ட பூச்சி, புழுக்களை உண்பதும், அவைகளின் மூலம் விளைந்த தானியங்களை உண்பதும் சிட்டுக்குருவி இனத்தின் அழிவுக்குக் காரணமாகிவிட்டன. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகளின் வரவால் 'பனங்காடை' எனும் பறவை இனமே முற்றிலுமாக அழிந்து போய்விட்டது. கடந்த மாதம், மும்பை தெற்குப் பகுதிகளில் பயணித்தபோது, அதிகாலையில் அந்தப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை அதிக அளவில் பார்க்க முடிந்தது. அங்கே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் வெகுவாக வளரவில்லை என்பதே அதற்குக் காரணம்." 

"உங்களைப் போன்ற பறவை ஆர்வலர்களின் முயற்சி எந்த அளவில் இருக்கிறது?"

"கடந்த இரண்டு வருடங்களாக ஒரு மாவட்டத்திற்கு மூன்று நபர்களாகப் பிரிந்து 'Pongal Bird Count' நடத்தி வருகிறோம். முதல் வருடத்தை விட கடந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது. இந்த வருடம் அதைவிட அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதிகமாகத் தெரியாத அரியவகை உள்நாட்டுப் பறவைகளைக் கண்காணிப்பது, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். கணக்கெடுப்பு விவரங்களை GBBC (The Great Backyard Bird Count) தளத்தில் பதிவு செய்வது, பறவைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பது எனச் செயல்பட்டு வருகிறோம். அவ்வப்போது, பறவைகள் விழிப்பு உணர்வு குறித்த கருத்தரங்குகளையும் நடத்துகிறோம்." எனப் பறவைகளின் மீதான கரிசனத்தோடு பேசி முடித்தார். 

பறவைகளின் வாழ்விடத்தை மனிதர்களே ஆக்கிரமித்து, கடைசியில் அவைகளை நிராதரவாக்கிவிட்டு அந்த இடங்களில்தான் நாம் வசதியாகக் கடைக்கால் தோண்டிக் கொண்டிருக்கிறோம். இதனால் உயிர்சுழற்சியே தலைகீழாகும் நிலை உண்டாகிறது. இதன் நேரடிப் பாதிப்பை உணரப்போவது நாம்தான் என்பதை உணரவேண்டும். பறவைகளின் அழிவுக்கான காரணங்களை அறிந்துகொண்டு அவற்றின் வாழ்வை மீட்டெடுக்க முடிந்தவரை முயற்சிப்போம் என இந்த நாளில் நாம் உறுதியேற்போம்!

- விக்கி

அடுத்த கட்டுரைக்கு