Published:Updated:

என் ஊர்!

''பொன்னம்பல வாத்தியார் தெருவும் அதிகார நந்தியும்!''

என் ஊர்!

''பொன்னம்பல வாத்தியார் தெருவும் அதிகார நந்தியும்!''

Published:Updated:
##~##

வியர் மணியம் செல்வன் மயிலாப்பூர் பற்றி இங்கே மனம் திறக்கிறார்...

''வந்தவாசி அருகே உள்ள தண்டரைக் கிராமம்தான் என் பூர்வீகம். வைத்தியப் பரம்பரை. கொள்ளுத் தாத்தா காலத்தில் வைத்தியத் தொழிலுக்காக சென்னை மயிலாப்பூர் பொன்னம்பல வாத்தியார் தெருவில் உள்ள வீட்டில் குடியேறி இருக்கிறார்கள். கபாலி கோயிலுக்கு அருகில் உள்ள அந்த வீட்டை எங்களின் தல விருட்சம் என்றே சொல்லலாம். அந்த வீட்டுச் சூழல்தான் இரக்கம், ஒழுக்கம், ஓவியம் என்று வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் எனக்குக் கற்றுத் தந்தது. எஸ்.ராஜத்துக்கும் எங்க அப்பாவுக்கும் ஓவிய ஆர்வம் வரக் காரணமே எங்க சின்ன தாத்தா லிங்கையாதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொன்னம்பல வாத்தியார் தெருவில் தொடங்கும் வீடு, இப்போதைய பாரதிய வித்யா பவன் இருக்கும் இடத்தில்தான் முடியும். அந்த அளவுக்கு மிகப் பெரிய வீடு. அப்பாவின் சிறு வயதிலேயே தாத்தா உமாபதி காலமாகிவிட்டார். அதனால் அப்பாவின் பெரிய சித்தப்பா வைத்தியலிங்கம் பராமரிப்பில் குடும்பம் வளர்ந்தது. மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். எப்போதும் மணம் பரப்பும் மூலிகை வாசம், சனிக்கிழமை தோறும் நடைபெறும் பூஜைகள், பஜனைப் பாடல்கள், சுவரோவியங்கள், சுப்ரமணிய சிவா, மதுரை மணி அய்யர் போன்ற பிரபலங்களின் வருகை என்று வீட்டுக்குள்ளேயே தினம் தினம் திருவிழாதான்.

என் ஊர்!

அதேபோல் கபாலி கோயிலுக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பங்குனி உத்திரத்தில் நடைபெறும் அதிகார நந்தி உற்சவத்துக்குப் பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குதான் முதல் தீபாராதனை. மரத்தாலான அந்த நந்தி வாகனத்துக்கு 1917-ல் எங்கள் தாத்தா அப்போதே 48 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வெள்ளித் தகடு பதித்தார். அந்த நந்தியின் கம்பீரமான கலை நேர்த்தியைப் பார்த்து வியக்காத பக்தர்களே கிடையாது. இன்றும் எங்கள் குடும்பத்தார் எங்கு இருந்தாலும் அதிகார நந்தி உற்சவத்துக்குத் தவறாமல் மயிலைக்கு வந்துவிடுவார்கள்.

விடுமுறைக்கு புதுச்சேரியில் உள்ள அம்மா வழித் தாத்தா வீட்டுக்குப் போகும்போதுதான் நாமும் மயிலாப்பூர் என்ற கிராமத்தில்தான் வாழ்கிறோம் என்று புரிந்துகொண்டேன். ஆமாம், அப்போது மயிலாப்பூர் கிராமங்களுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய ரம்மியமான ஊராக இருந்தது.  பங்குனி உத்திரத் திருவிழா நடக்கும் 10 நாட்களும் கொண்டாட்டமாகத்தான் கழியும்.

செங்குத்தாகச் சுழலும் குடை ராட்டினம், பொம்மலாட்டம், பயாஸ் கோப்பில் பார்த்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி படங்கள், கலைநயம் மிக்க சொப்புச் சாமான்கள், அப்பாவின் கையைப் பிடித்தபடி சாப்பிட்ட ஜாங்கிரி, தேங்காய் பர்பிகள், டாஸ் போட்டுப் பார்ப்பதுபோல 'இந்த வருடம் பாஸா, ஃபெயிலா’ என  கபாலி கோயில் சிறிய பலிபீடங்கள் மீது விரல்கள் பதித்து நடத்திய கருத்துக் கணிப்புகள், மண்ணில் புரண்டு உருண்ட பிராகாரங்கள், கை, வாய் எல்லாம் சிவக்கச் சிவக்க மென்று தின்ற ஜவ்வு மிட்டாய்கள் என இப்போதும் மயிலாப்பூர் தருணங்கள் பசுமையாக என் மனதில் நிழலாடுகின்றன. சிறு வயதிலேயே எனக்குள் இருந்த ஓவிய ஆர்வத்தைத் தூண்டியதில் தெற்கு மாட வீதி பொம்மை சத்திரத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. அரை நூற்றாண்டுக் கால அறுபத்து மூவர் திருவிழா இன்னமும் நினைவில் நிழல் ஆடுகிறது. ஆனால், அன்று குவிந்த மர விளையாட்டுச் சாமான்களில் ஏதாவது இன்று கண்களில் தட்டுப்படுகிறதா என நானும் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். கிடைக்கும் சாமான்கள் எல்லாம் பிளாஸ்டிக்தான்!

ஹைஸ்கூல், ஹையர் செகண்டரி என வளர்ந்து நிற்கும் பெண்ணாத்தூர் சுப்பிரமணியன் பள்ளிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு. அப்பா, நான், என் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என நான்கு தலைமுறைகளாக அந்தப் பள்ளிதான் எங்களுக்கு எழுத்தறிவித்து வருகிறது.

எஸ்.ராஜம், தனபால், சில்பி, கிருஷ்ணாராவ், கோபுலு என ஓவிய ஜாம்பவான்கள் பலர் அப்பாவுக்கு அறிமுகமானதும், கிருஷ்ணலேகா, ஸ்வாமி, கிருஷ்ணாராவ், மாருதி, அரஸ் என என் சக ஓவியர்கள் புடைசூழ வாழ வாய்த்த இந்த மயிலாப்பூர் பற்றிப் பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது தோழர்களே!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.கார்த்திகேயன்