Published:Updated:

குறையே நிறை!

காஞ்சியில் ஒரு கச்சேரி

குறையே நிறை!

காஞ்சியில் ஒரு கச்சேரி

Published:Updated:
##~##

'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்’. 'ஒளி விளக்கு’ படப் பாடலை அமுதா பாட, நாதனின் கீ-போர்டு, ரமேஷின் தபேலா தாள லயத்தில் அந்தப் பாட்டு இன்னும் அழகாகிறது. ஆங்காங்கே மெய்ம் மறந்து நிற்கும் மக்களிடம் உண்டியலை ஏந்தி வசூலைத் தொடங்குகின்றனர் இருசப்பன், கோபாலகிருஷ்ணன், லட்சுமணன். ஓரிரு வாத்தியக் கருவிகள் துணையுடன் ஒரு மினி லாரியையே மேடையாக்கி கச்சேரி செய்யும் இவர்கள், காஞ்சி புரம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இவர்களில் நாதனைத் தவிர, மற்ற அனைவரும் பார்வையற்றவர்கள்.

குறையே நிறை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 அமுதாவுக்கு சொந்த ஊர் காட்பாடி. இவரின் கணவர் ராஜ்குமாரும் பார்வையற்றவர். ''எட்டு வருஷமாப் பாடிட்டு இருக்கேன். ஆரம்பத்தில் லாட்டரிச் சீட்டு வித்துட்டு இருந்தேன். அரசு, லாட்டரிக்கு தடை விதிச்சதும் எங்க வீட்டிலும் சோத்துக்கு லாட்டரிதான். என்ன செய்றதுனு தெரியாம லாட்டரிச் சீட்டு வித்தவங்க விழிச்சப்ப, பலர் பிச்சை எடுக்கப் போனாங்க. எனக்கு மனசு வரலை. 'கண்ணைப் பறிச்ச கடவுள் அதுக்குப் பரிகாரமாத்தான் நல்ல குரலை கொடுத்திருக்கானே’னு நினைச்சேன். முறையா சங்கீதம் கத்துக்கலைனாலும், ரேடியோ, டி.வி-யில வர்ற பாட்டுகளை ஆர்வத்தில் திரும்பத் திரும்பக் கேட்டுப் பழகினதுதான் இன்னைக்கு சோறு போடுது'' என்பவர், தன் காதல் திருமணம் பற்றி லேசான வெட்கத்துடன் தொடர்கிறார். ''மூணு வருஷத்துக்கு முன்னே ஒரு குழுவில் பாடப் போனப்பதான், ராஜ்குமார் பழக்கம். யார்கிட்டேயும் அதிர்ந்து பேசாத அவரோட அமைதியான குணம் பிடிச்சி இருந்துச்சு. நானாதான் போய் 'கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். மூணு மாசம் பேசிப் பேசியே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோம். சமீபத்தில்தான் கல்யாணமாச்சு'' என்கிறார் அமுதா.

நாதன்தான் குழுவின் டி.எம்.எஸ்., பி.பி.எஸ். எல்லாம். ''எனக்கு விழுப்புரம். இந்த மாதிரிப் பல குழுக்கள்ல பாடிட்டு இருக்கேன். ஆண் குர லுக்கு யாரும் ஆள் இல்லைனா, போன் பண்ணு வாங்க. அடுத்த பஸ் பிடிச்சு ஓடியாந்து இவங்க ளோட சேர்ந்துக்குவேன். இப்படி அவசரத்துக்கு ஓடி வர்றதாலயே என்னை '108’னுதான் கூப்பிடுவாங்க. ஊனத்தைச் சாக்காவெச்சு உட்கார்ந்து சாப்பிடாம உழைக்கிற இவங்களுக்காக, எவ்வளவு பிஸியா இருந்தாலும் ஓடி வந்துடுவேன்'' என்கிறார் நாதன்.

குறையே நிறை!

நாமக்கல்லைச் சேர்ந்த தபேலா ரமேஷின் கதை சோகம். ''நல்ல குடும்பம்தாங்க. செஞ்ச தொழில்ல திடீர் நட்டம். குடும்பம் தடுமாறுச்சு. பொறுப்புகள் அண்ணன் கைக்கு மாறுச்சு. 'அம்மா-அப்பாவை வெச்சுக்கிறேன். இந்தக் குருடனைவெச்சு நான் என்ன பண்றது?’னு துரத்திவிட்டுட்டான் அண்ணன். பாவம், அவனுக்கு எதுக்கு பாரமா இருக்கணும்னு நானும் கிளம்பிட்டேன்'' என்கிற ரமேஷைத் தேற்றும் லட்சுமணனின் கதையும் உருக்கமானது.தான் ஒரு விபத்தில் அடிபட, காலில் ஸ்டீல் வைத்து ஆபரேஷன் செய்ய சொன்னார்களாம். அதற்குப் பணம் இல்லாமல் அப்படியே நடமாடிக்கொண்டு இருக்கிறாராம்.

''கூட்டம் கலைஞ்சு போறதுக்குள்ள உண்டியலைக் குலுக்கினாத்தான் காசு. உண்மையைச் சொல்லணும்னா, 'என்னமாப் பாடுறானுங்கப்பா’னு இரக்கப்படும்போதே போய் நின்னாத்தான் காசு. இல்லைனா, அவங்கவங்க வேலைகளைப் பார்க்கப் போயிடுவாங்க'' என்கின்றனர் ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் உண்டியல் ஏந்தி வசூல் செய்யும் கோபாலகிருஷ்ணனும் இருசப்பனும்.

இந்தக் குழுவை நிர்வகித்து வரும் ரவி, திருச்சிக்காரர். ''ஆரம்பத்தில் வேற ஒரு குழுவுக்கு டிரைவரா இருந்தேன். அந்தக் குழுவைக் கலைச்சிட்டாங்க. இவங்க எதிர்காலத்தை நினைச்சு நானே வண்டி ஒண்ணை வாடகைக்கு எடுத்து நடத்திட்டு வர்றேன். எந்தக் குறையை சொல்லி வீட்ல இவங்களைப் புறக்கணிச்சாங்களோ, அதையே மூலதனமாக்கி வாழும் இவங்களோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். இந்த ரமேஷ் வீட்ல பட்ட கொடுமை கொஞ்ச நஞ்சம் இல்லைங்க. அதை யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுனு சொல்லி இருக்கான். எப்பயாவது, 'என்ன ரமேஷ் வீட்டுப் பக்கம் போயிட்டு வர்றியா?’னு கேட்டா, ரெண்டு நாளைக்குப் பேசவே மாட்டான். 'சரி போக வேண்டாம்’னு சொன்னாத்தான், பழையபடி சந்தோஷமா பேசுவான்'' என்கிறவர், ''ஒரு நாளைக்கு 1,200 ரூபா வரை கிடைக்கும். டீசல் சாப்பாடு, டிரைவர் படி போக மத்ததை எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துருவேன்'' என்கிறார்.

குறையே நிறை!

''டாஸ்மாக் கடை வாசல்தான் எங்களோட சாயங்கால நேர டார் கெட்'' என்று சிரித்தபடி தொடங்கிய நாதன், ''மப்புல வர்றவங்க விரும்புற பாட்டைப் பாடினோம்னா, பணத்தை அள்ளிக் கொடுப்பாங்க. ஆனால் ஏகப்பட்ட பணத்தை அள்ளித் தரும் மொடாக் குடிகாரர்களிடம் வாங்க மாட்டோம்'' என்கிறவர், 'தரை மேல் பிறக்கவைத்தான் எங்களைத் கண்ணீரில் தவிக்கவிட்டான்’ என சூழலுக்கு ஏற்றபடி 'படகோட்டி’ பாடலை குரல் எடுத்துப் பாட, மற்றவர்கள் வாத்தியங்களை இசைக்க மறந்து அமைதியில் உறைந்து இருக்கின்றனர்!

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி