Published:Updated:

கார்... பைக்... சைக்கிள்...

ஒரு 'மர'த் தமிழனின் சாதனை!

கார்... பைக்... சைக்கிள்...

ஒரு 'மர'த் தமிழனின் சாதனை!

Published:Updated:
##~##

''மரத்துக்கும் மனிதனுக்குமான உறவு மகத்தானது. வேம்பு, துளசி, கற்பகம்னு மரங்களின் பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதில் இருந்தே இந்த நெருக்கத்தைப் புரிந்துகொள்ளலாம். மரங்கள் நமக்கு வரங்கள்.''  ஆழமான விளக்கத்துடன் தொடங்குகிறார் திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த அப்பர் லட்சுமணன். கடந்த வாரம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'ஆட்டோ வேர்ல்டு எக்ஸ்போ’வில் மரத்தாலான கார், பைக், சைக்கிளை காட்சிக்கு வைத்து அசரடித்த மரப் பிரியர்.

''பரம்பரை தொழிலான தச்சுத் தொழிலை என் அப்பா அப்பரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மாட்டு வண்டி செய்வதில் அவர் கைதேர்ந்தவர். மரத்தை இழைத்து மாட்டு வண்டி செய்து கொடுக்கும்போது ஊர் மக்கள் தாம்பூலம், பழம், தட்சணை வைத்து சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து வணங்கி, மாட்டு வண்டியை இழுத்துச் செல்வார்கள். தச்சுத் தொழில்தான் தெய்வம்னு எனக்குப் புரியத் தொடங்கிய காலம் அது. லாகவமாக மரத்தைப் பயன்படுத்தும் கலையை அப்பாவிடம்தான் கற்றேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்... பைக்... சைக்கிள்...

என் அண்ணன் ஆனந்தன் எனக்காகப் பழைய சைக்கிள் ஒன்றைக் கொடுத்தார். ரொம்ப நாள், மழையில் நனைந்ததால் துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அண்ணன் ஆசையாகக் கொடுத்த சைக்கிளை காயலான் கடையில் போட மனமில்லை. டயர், செயின், வீல் தவிர மற்ற பொருட்களை கருவேல மரத்தில் இழைத்து நானாகவே மர சைக்கிள் ஒன்றை உருவாக்கினேன். 'ரொம்ப சூப்பரா இருக்கு’னு அக்கம் பக்கத்தினர் பாராட்டவே இன்னும் ஏதாவது புதுசா பண்ணணும்னு உத்வேகம் வந்தது. மரத்திலேயே கார் செய்யும் வேலையில் இறங்கினேன். வெவ்வேறு வடிவக் கருவேல மரங்களை வாங்கி வெகுநாள் இழைத்து, உழைத்து இந்த காரை உருவாக்கினேன். எனக்கு ஆட்டோமொபைல் டிசைனிங் தெரியாது. ஆனாலும் எங்கள் தச்சுத் தொழிலில் உள்ள அளவீடுகளை வைத்து லாகவமாக இந்த காரை உருவாக்கினேன். பிறகு மாருதி 800 இன்ஜினைப் பொருத்தி, கேஸ், வீல் இவற்றை மட்டும் இரும்பில் பொருத்தினேன். காரின் உள்ளே 2 நாற்காலிகள், ஒரு சோபா, கதவு என்று மற்ற அனைத்து பாகங்களும் மரத்தால் இழைக்கப்பட்டவையே.

கார் செய்து முடித்ததும் வீட்டில் அனைவருக் கும் அப்படி ஒரு மகிழ்ச்சி! மனைவியையும் குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு 2 கி.மீ தூரம் ட்ரையல் போய் வந்தேன். ஊரே எங்களை ஆச்சர்யமாகப் பார்த்தது'' என்கிற லட்சுமணன் தன் அப்பாவின் நினைவாக அந்த மர காருக்கு 'அப்பர் 25’ என்று பெயர் வைத்துள்ளாராம்.

கார்... பைக்... சைக்கிள்...

காரைத் தொடர்ந்து மர மோட்டார் பைக் செய்தவர் தற்போது மரத்தினால் ஆன ஆட்டோ, பொலிரோ காரைச் செய்து வருகிறாராம். இதைத் தவிர 'மரமும் மனிதனும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்வதோடு இதுகுறித்து ஏழு புத்தகங்களும் எழுதியுள்ளார். இத்தனைக்கும் லட்சுமணன் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

''இந்த கார் 15 கி.மீ வேகத்தில் செல்லும். ஹீரோ ஹோண்டா இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ள பைக் 55 கி.மீ.க்கு மேல் செல்லும். இதற்காக மாருதி, ஹீரோ ஹோண்டா கம்பெனியிடம் அனுமதி பெற்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலும் உரிய சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். மர காரை முழு நேர பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ள விரும்பாதவர்கள் ரெஸ்டாரண்ட், தோட்டம், உயிரியல் பூங்கா, வீட்டு ரிசப்ஷன், வி.ஐ.பி-க்களை அழைத்து வர  என்று இலகுவான பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளலாம்'' என்கிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக  மரத்தாலான விளக்கை உருவாக்கியதற்காக 'கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்’,  பூம்புகார் தேசிய விருதுக்கு இவரின் பெயரை பரிந்துரைத்துள்ளது!

- க.நாகப்பன், அ.ராமநாதன், படங்கள்: அ.ரஞ்சித்

கார்... பைக்... சைக்கிள்...