Published:Updated:

என் ஊர்!

''எம்.ஜி.ஆரின் காரை மறித்தேன்!''

என் ஊர்!

''எம்.ஜி.ஆரின் காரை மறித்தேன்!''

Published:Updated:
##~##

'சேலம் அ.அருள்மொழி’-திராவிடர் கழக மேடைகளில் இப்படித்தான் அறிமுகம் ஆனார். சேலம் டவுன் பகுதியில் பிரபலமான குயில் பண்ணை பதிப்பகமும் அச்சகமும் நடத்தி வந்த புலவர் அண்ணாமலையின் மகள். இன்று தமிழகம் அறிந்த பேச்சாளர்; சென்னை உயர் நீதிமன்றத்தின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். தனது சிறு வயது சேலம் பற்றி அருள்மொழி இங்கே பகிர்ந்து கொள்கிறார்!

 ''நான் பிறந்து வளர்ந்தது சேலம் சிங்க மெத்தை பகுதி. 60-களில் மெயின் ரோட்டில் ஒரு பெரியபங்களா இருந்தது. கட்டடத்தின் இரு முகப்பிலும் சிங்கத்தின் சிலைகள் இருந்ததால், அந்தப் பகுதியின் பெயரும் சிங்க மெத்தை என்றே நிலைத்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

நான் வயிற்றில் இருந்தபோது, மிகை உப்புச் சத்து காரணமாக என் அம்மா சேலத்து மாம்பழங்களை நிறைய சாப்பிட்டார். அதனால், நான் பிறந்தபோது நான்கரை கிலோ எடைகொண்ட குண்டுப் பாப்பாவாகப் பிறந்தேனாம். அவ்வளவு எடை உள்ள என்னை அந்தக் காலத்தில் சுகமாகப் பிரசவிக்கச் செய்தவர் டாக்டர் சண்முகவடிவு.

எங்கள் பகுதியில் சௌராஷ்டிரா சமூகத்து மக்கள் அதிகம். அவர்களுடனே பழகியதால், வீட்டில் என் அப்பா புலவர் அண்ணாமலையைத் தவிர, எங்கள் அனைவருக்குமே சௌராஷ்டிரா மொழி தெரியும். எங்கள் பகுதியில் இசைக் கலைஞர்கள் அதிகம். திருச்சி தாயுமானவர், திருச்சி லோகநாதன்- டி.எல்.மகாராஜன், ஆகியோரின் உறவினர்களும், தியாகராஜ பாகவதரின் கடைசி சீடர்களுள் ஒருவரான நாகை நடராஜனும் எங்கள் பகுதியில்தான் வசித்தார்கள்.

அடுத்து நாங்கள் குடிபெயர்ந்தது சின்னக் கடை வீதி பகுதி. அங்கு ராஜேந்திர செட்டியாரின் செட்டு தட்டு வடை பிரபலம். குழந்தை களுக்குக் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த, இவர்கள் கடையின் செட்டு தட்டு வடை வாங்கித் தருவார்கள். தட்டு வடைக்கு நடுவில் கேரட், பீட்ரூட், தேங்காய்த் துருவல், காரச் சட்னி, தேங் காய் எண்ணெய் தடவித் தருவார்கள். நினைக்கும்போதே இப்போதுகூட நாக்கில் எச்சில் ஊறுகிறது.  

என் ஊர்!

சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே போஸ் மைதானத்தில் பேசாத தலைவர்கள் குறைவு. இங்கு நடந்த  மாநாட்டில்தான் சுய மரியாதை இயக்கம், 'திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. பெண்களுக்கான விவாகரத்து உரிமை, மறுமண உரிமை போன்ற பல முற்போக் குத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஒருமுறை தந்தை பெரியார் இங்கு பேசிக்கொண்டு இருந்தபோது பெரியாரின் தொண்டரான அம்மாப் பேட்டை முத்து என்பவர், நான்கு வயதான என்னைத் தூக்கி மேடையில் ஏற்றிவிட்டார். பெரியார் முன்பாக நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதையை வாசித்தேன்.

1971-ல் சேலத்தில் தி.க. ஊர்வலம் நடந்தது. அதில் ராமாயணத்தில் ராமன், சம்புகனைக் கொன்ற காட்சிகளை ஓவிய மாகத்  தீட்டி எடுத்துச் சென்றார்கள். அப்போது சிலர் ஊர்வலத்தில் செருப்பை எறிந்தார்கள். அந்தச் செருப்பை எடுத்தே பெரியாரின் தொண்டர்கள் ராமனை அடித்தார் கள். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸார், 'ராமரைச் செருப்பால் அடித்த பெரியாரின் கட்சியை ஆதரிக்கும் தி.மு.க-வுக்கா உங்கள் ஓட்டு?’ என்று பிரசாரம் செய்தார்கள். தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் பலரும் நம்பிக்கை இழந்த நிலையில், பெரியார் மட்டும் 'தி.மு.க. வெற்றி பெறும்’ என்று உறுதியாகச் சொன்னார். அதேபோல், பெரும்பான்மை இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது!

சேலம் பெண்கள் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டு இருந்தேன். கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. அப்போது, ஏற்காட்டுக்குச் செல்ல எம்.ஜி.ஆர். எங்கள் கல்லூரி வழியாக வருகிறார் என்று கேள்விப்பட்டு, மாணவிகளை திரட்டிக்கொண்டு அவரது காரை நடுரோட்டில் மறித்தேன். கோபப்படாமல் காரை நிறுத்தியவர், எங்கள் கோரிக்கையை ஏற்று மனுவும் வாங்கிக் கொண்டார். சொன்னதுபோலவே வாக்கையும் நிறைவேற்றினார். அப்போது சேலம் எஸ்.பி-யாக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். எங்களை அழைத்து, 'முதல்வரின் காரை எல்லாம் மறிக்கக் கூடாது’ என்று அறிவுரை கூறினார். பதிலுக்கு நான், 'இதேபோல், எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்றச் சொல்லி  அரசாங்கத்துக்கு அறி வுரை செய்யுங்கள்’ என்றேன். அவருக்குக் கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு, சிரிப் புடன் எங்களை அனுப்பிவைத்தார்!

அதன் பின்பு 85-ல் சென்னை வந்துவிட்டாலும் என் ஊரின் நினைவுகள் என்னைவிட்டு அகலுவது இல்லை. இன்றும் என் தந்தையின் பிறந்த நாள், நினைவு நாளுக்கு சேலத்தில் இருக்கும் எங்கள் குயில் பண்ணை அச்சக வீட்டுக்குச் செல்கிறேன். அங்கு இருந்து சென்னை திரும்பும்போது, விடுமுறை முடித்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையின் ஏக்கத்தை வரவழைக்கிறது என் ஊர்!''

- சந்திப்பு: டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: என்.விவேக், எம்.விஜயகுமார்