Published:Updated:

கெட் டுகெதர்னு எவனாவது வந்தா... கொன்டேபுடுவோம்..!

கெட் டுகெதர்னு எவனாவது வந்தா... கொன்டேபுடுவோம்..!
கெட் டுகெதர்னு எவனாவது வந்தா... கொன்டேபுடுவோம்..!

ள்ளி, கல்லூரிகள் முடித்துவிட்டு ஆளாளுக்கு ஒரு திசையைப் பார்த்து செட்டிலான பிறகு, எப்போதாவது ஒன்றிரண்டு பேர் பேசத் தொடங்கினாலே முதலில் பேசும் விஷயம் எல்லோரும் சேர்ந்து ஒரு கெட் டுகெதர் பண்ணலாமே அப்படின்றது தான். அப்படியே பேச்சோடு பேச்சா ஒரு வாட்ஸ்-அப் க்ரூப்பையும் ஆரம்பிச்சு அதுக்கு 'கெட் டுகெதர்'னு பேரையும் வெச்சு, குரூப் டி.பி-யா நண்பர்கள் கை கோத்திருக்கிற போட்டோவையும் வெச்சு ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணுவாய்ங்க. அப்புறம் நடக்குற அட்ராசிட்டீஸ் அந்தலை சிந்தலை ரகம். அதையெல்லாம் ஒண்ணொன்னா பார்ப்போம். 

கெட் டுகெதர்னு எவனாவது வந்தா... கொன்டேபுடுவோம்..!

குரூப் ஆரம்பிச்ச உடனேயே கான்டாக்ட்ல இருக்குற பயபுள்ளைகளப் பூராம் உள்ளே இழுத்துப் போட்டு, எல்லோரும் அறிமுகம் பண்ணிக்கிற வரையும் ஸ்மூத்தா தான் போகும். அப்புறம் தான் இருக்கு வேடிக்கை. குரூப் அட்ராசிட்டீஸ்தான் தெரியுமே...

'சரி அப்புறம்... எப்போ மீட் பண்ணலாம்?'னு எவனாவது ஒருத்தன் கேட்டா, மத்த எல்லோரும் நோட்டிஃபிகேஷன் மெசேஜைப் பார்த்துட்டு அப்படியே ஆஃப்லைன் மோடுக்குப் போயிடுவாய்ங்க. கேட்டவன் 'என்னடா ஒருவாட்டி கேட்டதுக்கே கட்டில், மெத்தையெல்லாம் தூக்கிட்டு காலி பண்ணிட்றீங்க'-னு புலம்ப வேண்டியதுதான். 

ஒரு வழியா, பத்துப் பதினைந்து நாளாகப் பேசி முடித்து ஒரு தேதியை ஃபிக்ஸ் செய்வார்கள். ஆரம்பிக்கும்போதே ஒரு நாலைந்து பேர் வரிசையா வந்து 'அன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு கய்ஸ். எனக்கு உங்களையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்கல... அடுத்த மீட்ல கண்டிப்பா வந்துட்றேன்னு வண்டி வண்டியா ஃபீலிங்ஸைக் கொட்டிட்டு குரூப்பை விட்டே கிளம்பிருவாய்ங்க. அடுத்து ஒண்ணு நடந்தாதானேடா..!

ஒருமாதிரி எல்லோரையும் சம்மதிக்க வெச்சு, நேரமெல்லாம் குறிச்சு முடிச்சா, காலேஜ் பக்கத்தில இருக்கிற உள்ளூர் காரன் மட்டும் விடியறதுக்கு முன்னாடியே போய் உட்கார்ந்து வாசலை வெறிச்சுப் பார்த்துட்டு இருப்பான். அந்தா இந்தானு ஒரு பத்துப் பேர் வந்து சேருவாய்ங்க. அதுல பாதிப்பேரை அடையாளமே தெரியாது. 

படிக்கும்போது பெல் பாட்டம் பேன்ட் போட்டு, தலையில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய் ஊத்திக்கிட்டு வந்தவன், ஸ்பைக் ஹேர்ஸ்டைல்னு பக்கத்தில் வந்து கண்ணைக் குத்துவான். 'ஓமக்குச்சி' நரசிம்மன் மாதிரி இருந்தவன்லாம் குனிஞ்சு பார்த்தா கால் தெரியாத அளவுக்கு குண்டாகி அதிரவைப்பான். 'எக்குத்தப்பா டயட் எடுத்ததுல இப்படி ஆகிருச்சு மச்சி...' என நாலு வார்த்தை பேசிவிட்டு மூச்சு வாங்குவார்கள்.

கெட் டுகெதர்னு எவனாவது வந்தா... கொன்டேபுடுவோம்..!

படிக்கும் காலத்தில், எல்லோரும் தம் அடிக்கும்போது  ரூமுக்கு வெளியே நின்றவன் பாக்கெட்டில் எப்போதும் ஒரு பாக்கெட் வைத்து இருமிக் கொணடிருப்பான். க்ளாஸூக்குப் போகாத நேரம் முழுதும் மப்பிலேயே ரூமில் இருந்தவன் 'எல்லாத்தையும் விட்டு மூணு வருசமாச்சு மாப்ளே' எனச் சந்தோசமாகச் சொல்லி வெறுப்பேத்துவான். 'உங்களையெல்லாம் பார்த்தா அம்புட்டு நல்லவிங்க மாதிரி தெரியலையேடா'-னு நாமதான் புலம்பிக்கிட்டே திரியணும். 

இன்னும் நாலைஞ்சு பேர் நாம எதுக்கு வந்தோம்னே தெரியாம வாட்ஸ்-அப் க்ரூப்கள்ல முழுநேரமா கடலை வறுத்துக்கிட்டு இருப்பாய்ங்க. 'வீட்டுல இருந்தா பொண்டாட்டி நொச்சு நொச்சுங்கிறா மச்சான். இங்கேயாவது நிம்மதியா வேலையைப் பார்க்க விடுங்கடா' என அசடு வழிவான்.

ஒரு வழியா எல்லாப் பஞ்சாயத்தையும் முடிச்சு வெச்சு, விழாவையும் சிறப்பா நடத்தி முடிச்சு வழியனுப்புறதுக்குள்ள அந்த ஒருங்கிணைப்பாள நண்பன் நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பான். பஸ் ஏறி எல்லோரும் வீட்டுக்குப் போய்ச் சேர்றதுக்குள்ளே 'உங்க சங்காத்தமே வேணாம்டா சாமீ'-ன்னு குரூப்பையே டெலிட் பண்ணிட்டு ஓடுற ஆள் அவனாதான் இருப்பான். அடுத்து, கெட் டுகெதர்னு எவனாவது வந்தா மொத டெட்பாடி அவன் தான்!

- விக்கி