Published:Updated:

போராட்ட பின்னணியில் அரசியல் பேசும் எகிப்திய படம் ’கிளாஷ்’! #Clash #CIFF

Vikatan Correspondent
போராட்ட பின்னணியில் அரசியல் பேசும் எகிப்திய படம் ’கிளாஷ்’! #Clash #CIFF
போராட்ட பின்னணியில் அரசியல் பேசும் எகிப்திய படம் ’கிளாஷ்’! #Clash #CIFF

சென்னையில் நடந்து வரும் 14 வது சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அதில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற 'கிளாஷ்' என்ற எகிப்து திரைப்படம் கேசினோ திரையரங்கில் திரையிடப்பட்டது. மொஹமத் தீயெப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளைக் குவித்திருக்கிறது.    

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் உறுப்பினரான மொஹமத் மோர்சி, நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்கப்பட்டதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்த சமயம் அது. அரசுக்கு ஆதரவான கூட்டம், இன்னொரு பக்கம் போராட்டக்காரர்கள், இவர்களுக்கு நடுவே இரண்டு பத்திரிகையாளர்கள், இந்த மூன்று தரப்பும் கைது செய்யப்பட்டு ஒரு காவல் வாகனத்தில் பிடித்து வைக்கப்படுகிறார்கள். வெவ்வேறு கருத்துகளைக் கடைப்பிடிக்கும் இவர்களுக்குள்ளே நடக்கும் விவாதங்களும், பிரச்னைகளும் தான் 'கிளாஷ்' படத்தின் கதை.

கைதிகளையும் போராட்டக்காரர்களையும் ஏற்றிச் செல்லும் போலீஸ் வாகனத்தின் உட்புறம் ஆட்கள் யாரும் இன்றி காட்டப்படுகிறது. பின்னணியில் மெல்லிய இசையோடு துவங்குகிறது படத்தின் முதல்காட்சி. கதவுகள் திறக்கப்படுகின்றன. இரு பத்திரிகையாளர்கள் போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கபடுகின்றன. அவர்களிடமிருந்து அடையாள அட்டை, கேமிரா, மொபைல் போன்றவற்றைப் பறித்து, உள்ளே தள்ளி கதவை சாத்துகிறார்கள். அதே நேரத்தில் அரசுக்கு ஆதரவான கூட்டம் ஒன்று சாலையில் பேரணியாக சென்று கொண்டிருக்கிறது. வண்டிக்குள் இருக்கும் பத்திரிகையாளர்கள் காப்பாற்றச் சொல்லி சத்தம் போட அவர்களோ பத்திரிகையாளர்களை கற்களால் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களில் சிலரும் கைது செய்யப்பட்டு வண்டியில் ஏற்றப்படுகிறார்கள். அந்த வாகனம், போராட்டம் நடக்கும் இடம் ஒன்றிற்கு செல்கிறது. அங்கேயும் சிலர் கைது செய்யப்பட்டு அதே வண்டியில் அடைக்கப்படுகிறார்கள். இரண்டு எதிரெதிர் குழுக்கள் ஒரே வண்டியில், உள்ளுக்குள்ளேயே மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கு மண்டை உடைகிறது. அதற்கும் அங்கே இருக்கும் நர்ஸ் ஒருவரே சிகிச்சை அளிக்கிறார். இப்படி சுற்றிச்சுற்றி ஒவ்வொரு காட்சியும் வண்டிக்குள்ளேயே சுழல்கிறது. 

அவர்களைப்போலவே இன்னும் பலரும் பல வண்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கலவரம் நடக்கும் பகுதிகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சில வண்டிகளில் சுவாசிக்க கூட முடியாத அளவுக்கு ஆட்களை ஏற்றி அழைத்துச் செல்லும் அவலமும் அரங்கேறுகிறது. இந்த வாகனத்தில் இருப்பவர்களில் ஒருவர் தன் மகனை தேடுகிறார், இன்னொரு இளைஞன் தன் தந்தையை தேடுகிறான். மாற்றி மாற்றி ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். நேரம் ஆக ஆக அந்த வாகனத்தில் இருப்பவர்கள் மூச்சு விடமுடியவில்லை என கத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் இடம் மனதை என்னவோ செய்கிறது. இவர்களுடன் இருக்கும் ஒரு இளைஞன் தொடர்ந்து தன் தாயிடமும், அதிகாரியாக இருக்கும் தனது மாமாவுக்கும் காப்பாற்றச் சொல்லி முயற்சி செய்து கொண்டே இருக்கிறான்.  

ஒரு இடத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் இந்த வண்டி  மாட்டிக்கொள்கிறது. சுற்றிலும் இருந்து கல்கள் வண்டியின் மேல் வீசப்படுகின்றன. அப்போது அங்கிருந்து தப்பிக்க நினைக்கும் ஒரு முதியவரும், மகளும் அதில் மாட்டிக் கொள்கிறார்கள். போலீஸ் மகளை மீட்டு மீண்டும் வாகனத்தில் அடைத்துவிட அவளின் தந்தை அங்கேயே வீழ்கிறார். காலையில் தொடங்கி இரவு வரை அந்த வண்டிக்குள்ளேயே நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், விவாதங்களுடன் சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது கதை. எந்த இடத்திலும் அந்த காவல் வண்டியை விட்டு கேமரா வெளியே செல்லாமல் அதற்குள்ளாகவே பயணிக்கிறது. 

‛சிறுநீர் கழிக்க வேண்டும் திறந்து விடுங்கள்’ எனச் சொல்லும் நீரிழிவு நோயாளிக்கு வாட்டர் பாட்டிலை நீட்டுவது, வெளியே விட்டே ஆக வேண்டுமென போலீசிடம் சண்டையிடும் பெண்ணிடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்து மீண்டும் உள்ளே அடைப்பது என படம் முழுவதும் நடைமுறை அரசியல் எதார்த்தத்தை நுட்பமாக பதிவு செய்து கொண்டே இருக்கிறது 'கிளாஷ்'.

அந்த வண்டியில் போலீஸ்காரர் ஒருவரும் மாட்டிக்கொள்கிறார். போராட்டக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளும் வண்டியின் கதவு உடைக்கப்பட்டு ஒவ்வொருவராக வெளியே இழுத்துவரப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இறுதியில் பல்வேறு சிந்தனைகளுடைய அனைவரும் சேர்ந்து வாகனத்தின் கதவை மூடி, போராட்டக்காரர்களிடமிருந்து தன்னை காப்பாற்ற முயற்சிப்பதோடு நிறைவடைகிறது படம்..!  

-  க.பாலாஜி