Published:Updated:

நீர்ச்சித்திரக்காரர்கள்!

பாண்டிச்சேரி பிரதர்ஸ்

##~##

''வெற்றியாளன் வெற்றிப் பாதையைத் தேடிப் போவது இல்லைதான்; ஆனால், போகின்ற பாதையையே வெற்றிப் பாதையாக மாற்றுகிறான்'' என்ற வாழ்வியல் வரிகளை உண்மையாக்கி இருக்கிறார்கள் ஏழுமலை-ஆபேல் என்ற இரு புதுவை இளைஞர்கள். ஃபிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்குச் சென்று வாட்டர் கலர் ஓவியங்கள் குறித்து வகுப்பு எடுக்கிறார்கள் இருவரும்.

 ''பாரதியார் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படித்தேன். படிப்பு முடித்து, ஓவியக் கண்காட்சிகள் நடத்திக்கொண்டு இருந்தேன். ஒருமுறை என் கண்காட்சிக்கு வந்திருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த  வில்லி லேம்பர்ட், என் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, 'பெல்ஜியத்துக்கு வந்து எங்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியுமா?’ என்று கேட்டார். 2005-ல்தான் என் முதல் பயணம். ஒவ்வொரு வருடமும் வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆபேலையும் அழைத்துச் செல்லத் தொடங்கினேன்'' என்கிறார் ஏழுமலை.

நீர்ச்சித்திரக்காரர்கள்!

''எங்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு வரக் காரணமே, நமது ஓவியங்களில் பிரதிபலிக்கும் நமது கலாசாரம். உதாரணமாக, நமது நாட்டில் எப்போதுமே வெயில் இருக்கும்; அதனால் நமது ஓவியங்களிலும் வெயில் பிரதிபலிக்கும். ஆனால், பெல்ஜியத்தில் எப்போதுமே மழைதான் அதிகம். அவர்கள் வெயிலைப் பார்ப்பதே குறைவு. அதனால் நமது ஓவியங்களும் வண்ணங்களைப் பயன்படுத்தும் முறையும் அவர்களுக்குப் பிடித்து இருக்கிறது. அவர்கள் வாட்டர் கலரைக்

நீர்ச்சித்திரக்காரர்கள்!

கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போதே, 15 முதல் 20 வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் கடினமான முறை. நீலம், மஞ்சள், சிவப்பு இவைதான் அடிப்படையான வண்ணங்கள். இந்த மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்தாலே, அனைத்து வண்ணங்களையும் கொண்டுவந்துவிடலாம்'' என்கிற ஏழுமலை, 30 கண்காட்சிகளையும் நடத்தி இருக்கிறார்.

''ஆயில் பெயின்டிங் மூலம் வரையப்படும் ஓவியங்களில் ஒரு தவறு நடந்துவிட்டால், அதன் மேல் வேறு வண்ணத்தைத் தீட்டி முடித்துவிடலாம். மேலும் ஒரு ஓவியத்தை வரைய இரண்டு, மூன்று வருடங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், வாட்டர் கலரில் வரையத் தொடங்கிவிட்டால், வரைந்து முடித்துவிட்டுத்தான் தூரிகையைக் கீழே வைக்க முடியும். குறிப்பிட்ட இடத்தில் என்ன வண்ணம் வேண்டும், அதற்குப் பக்கத்தில் என்ன வண்ணம் தீட்ட வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிட வேண்டும்'' என்று நீர் வண்ண ஓவியத்தின் நுட்பங்களை விளக்குகிறார் ஆபேல். 20-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி இருக்கும் ஆபேல், லலித் கலா அகாடமி விருது உள்பட பல விருதுகளைப் பெற்று இருக்கிறார்.

நீர்ச்சித்திரக்காரர்கள்!

''இந்தியா குறித்த வெளிநாட்டினர் புரிதல் அறியாமை நிறைந்தது. ஒருமுறை ஒரு ஃபிரான்ஸ் மாணவி, 'நீங்கள் இந்தியாவில் இருந்துதானே வருகிறீர்கள்? தலையில் கோழி இறகுகள் எங்கே?’ என்று கேட்க... எங்களுக்கு ஒருபுறம் திகைப்பு; இன்னொருபுறம் சிரிப்பு.  இந்தியர்கள் என்றாலே செவ்விந்தியர்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில குழந்தைகள், 'இந்தியாவில் எப்போதுமே சூரியன் இருக்குமா?’ என்று ஆச்சர்யம் பொங்கக் கேட்பார்கள்'' என்கிறார் ஏழுமலை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஃபிரான்ஸில் நடக்கும் 'அகில உலக நீர் வண்ண ஓவியத் திருவிழா’... நீர் வண்ண ஓவியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். உலகம் முழுவதும் இருந்து வரும் 600 பேரில் 45 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு அந்த 45 பேரில் ஏழுமலையும் ஆபேலும் உண்டு. புதுவைக்குப் பெருமை!

- ஜெ.முருகன்