Published:Updated:

இதெல்லாம் ரொம்பத் தப்பு ராசாக்களா...! - இம்சிக்கும் ஜென் Z இளைஞர்கள்

இதெல்லாம் ரொம்பத் தப்பு ராசாக்களா...! - இம்சிக்கும் ஜென் Z இளைஞர்கள்
இதெல்லாம் ரொம்பத் தப்பு ராசாக்களா...! - இம்சிக்கும் ஜென் Z இளைஞர்கள்

ந்தத் தலைமுறை ஜென்-Z இளைஞர்கள் எல்லாத் தொழில்நுட்பங்களிலும் கில்லியாக கெத்து காட்டினாலும், மற்றவர்களைக் கடுப்பாக்கும் விதமாக இவர்கள் செய்யும் இம்சைகள் ஏராளம்.

* முன்பெல்லாம் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குனு பேச்சை ஆரம்பிப்பார்கள். ஆனால் இது ஜென் Z காலம். உங்களை கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்ல முன்னாடியே பார்த்த மாதிரியே இருக்கேனு கலாய்க்கிறதோடுதான் கான்வர்சேஷனே தொடங்கும். ஆமாம், நானும் உன்னை க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் டவுன்ஹால்லே பார்த்திருக்கேன் என மாற்றிமாற்றி ஆரத் தழுவிக்கொள்வார்கள் இந்த டியர் ட்யூட்ஸ் இளசுகள்.

* கே.டி.எம், யமஹா -எஃப்.இசட் எனக் கண்ணைப் பறிக்கும் நிறத்தில் புது மாடல் பைக்குகளோடு பறந்துகொண்டிருக்கும் யூத்ஸ், வண்டி ஓட்டுவதோடு சும்மா இருக்காமல்  யாராவது ரோட்டில் தனியாக நடந்து செல்லும்போது க்ளட்சைப் பிடித்துக்கொண்டே ஆக்ஸிலேட்டரைத் திருகி மதம்பிடித்த யானையைப் போல வண்டியைப் பிளிறவிட்டுப் பயமுறுத்துவார்கள்.

* தேர்தலில் ஒரே ஒரு ஓட்டுப் போடுவதற்குக்கூட ஜென் Z யூத்துகள் ஃபுல் மேக்கப்போடுதான் வீட்டைவிட்டுக் கிளம்புவார்கள். வரிசையில் நிற்கும்போது #Voting_is_our_right என விழிப்புணர்வு வாசக ஹேஸ்டேக்கோடு ஒரு போட்டோ, அப்புறம் கைவிரலில் வைக்கப்பட்ட மை ஈரம் காய்வதற்கு முன்பாகவே சூட்டோடு சூடாக விரலைக் காட்டியபடி ஒரு செல்ஃபி என வரிசையாக ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பதிவேற்றி வம்படியாக லைக்ஸ் குவிப்பார்கள்.

* பக்கத்து ஊர் தொழிற்சாலையோ அவ்வளவு ஏன் எதிர்த்த தெருவின் இரண்டாவது வீடோ பற்றி எரிந்தால்கூட பதற்றமே இல்லாமல் 'குபுகுபு'வெனப் பின்னணியில் புகை தெரியும்படி செல்ஃபி எடுத்து #Back_with_fire எனச் சிரிச்சமேனிக்கி அப்லோடு செய்து மாஸ் காட்டுவார்கள். கெரகத்த!

* சலூன் கடைக்குப் போய்த் திரும்பும் நம் மேதகு ஜென் Z ட்யூட்ஸ்களை அப்பா, அம்மாவுக்கே அடையாளம் தெரியாது என்பது அவலத்தின் உச்சம்தான். அந்த அளவுக்கு வித்தியாசமாக ஒரு பக்கத் தலையைச் சுத்தமாக வழித்து எடுத்து லேடி காஷ் ஸ்டைலிலோ, ஒருபக்கம் மட்டும் முன்னாடி முக்கால் அடி நீளத்துக்கு முடி வளர்த்து அடுத்தபக்கம் இருக்கும் காது வரை மடித்து ஜஸ்டின் பெய்பர் ஸ்டைலிலோ, நல்லா இருக்கும் தலைமுடியை ஸ்பிரிங்குக்குள் விட்டு சுருளாக்கி நூடுல்ஸ் மண்டையாகவோ மாற்றி கண்ணைக் குத்துவார்கள். இது நல்லா இருக்குனு இவிங்களுக்கு யார் சொன்னது?

* ஒரே கலரில் கோடுபோட்ட லைட் ஷேடட் சட்டை அணிவதெல்லாம் இப்போது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது. பளீரென ஆரஞ்சுக் கலரில் பலவண்ணப் புள்ளிகள் வைத்து, எதிரில் நடந்துவரும் நபருக்கு நிறக்குருடு வர வைக்க வேண்டும் என்பதே நோக்கம் போல. இடுப்புக்குக் கீழே அணியும் பேன்ட் இன்னும் வெறித்தனம். கிளிப்பச்சை கலரிலும், மஞ்சள் தூள் கலரிலும், சாயத்தில் ஊறப்போட்ட துணிகளைத் தாறுமாறாகக் கிழித்துத் தைத்து மெட்ராஸ் ஐ வரவழைக்கவே ஒரு கூட்டம் இருக்கிறது.

* மாறிய சோஷியல் ட்ரெண்டுகளுக்கு ஏற்ப நாமும் மாறாமல் இருந்தால் 'அவுட் ஆஃப் அப்டேட்டர்கள்' என இந்தச் சமூகம் நம்மை அங்கலாய்க்கும் எனக் கருதி யூத்துகள் எல்லாம் பப், டிஸ்கொதே, வீக் எண்ட் பார்ட்டி என வகைவகையாகப் பொங்கிப் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

* ராக் பாடல்களை ரிங்டோனாக வைத்துப் பக்கத்தில் இருப்பவர்களை அலறவிடுவது, ஹோட்டலில் வெறுங்கையால் சாப்பிடுபவர்களை வேற்றுகிரகவாசிகளைப் போலப் பார்ப்பது, காதில் ஹெட்போனை மாட்டியபடி, பின்னால் வரும் காருக்கு வழிவிடாமலேயே சின்ன சந்துக்குள் சுற்றவிடுவது என இவர்களின் அலப்பறைகள் கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு.

- விக்கி