Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : செல்வராகவன்நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

நானும் விகடனும்!

இந்த வாரம் : செல்வராகவன்நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

''சின்ன வயசுல விகடனைத் தனியா வாங்கிப் படிக்கலாம்னு நினைக்கிறப்போ, அப்பாகிட்ட பைசா இருக்காது. ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்த நாட்க ளில், விகடனும் எனக்கு ஒரு சப்ஜெக்ட்தான். நாலணா கொடுத்து லெண்டிங் லைப்ரரியில் வாங்கிப் படிப்பேன். அந்தப் பைசாகூட கையில் இல்லாத சமயங்களில், கவர்மென்ட் லைப்ரரி. அங்கே புத்தகம் கைக்கு வர ரொம்ப நேரம் காத்திருக்கணும். ஆசையாக் காத்திருந்து படிப்பேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடன் நான் முதலில் பார்த்த அதே பொறுப்போடு இன்னிக்கும் இருக்கிறதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அப்பவும் சரி, இப்பவும் சரி, விகடனைக் கையில் எடுத்து வாசிக்கும்போது கம்பீரமா இருக்கும். புத்தகத்தை ஒளிச்சு, மறைச்சுப் படிக்கிற மாதிரி, அதுல எதுவுமே இல்லை.

நானும் விகடனும்!

எனக்கு விகடனில் முதலில் ரொம்பப் பிடிச்சது ஜோக்ஸ். விதவிதமா இருக்கும். இப்படிலாம் ஜோக்ஸ் இருக்குமானு ஆச்சர்யப்படுத்தும்! யாரையும் புண்படுத்தாமல் புன்சிரிக்கவைப்பது விகடன் ஜோக்குகளின் ஸ்பெஷல். அரசியல்வாதி, போலீஸ்காரங்கதான் அதிகமாக் கிண்டல் செய்யப்படுவாங்க. அந்த கேலி, கிண்டலும் நாமளே ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்.  

இப்போதைய என்னோட ரசனை, ஆளுமையைச் செதுக்கியதில் விகடனுக்கும் ஒரு கணிசமான பங்கு இருக்கு. எனக்கு விகடன் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்களை ஒரு தடவையாவது பார்க்கணும்னு ஆசை. ஆனால், அது சாத்தியமே இல்லாத ஆசையாச்சே!

கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிறகு, விகடனில் என்னைக் கவர்ந்தவை சிறுகதைகள். ஒரு இதழில் அப்போ ரெண்டு,மூணு கதைகள்கூட வரும். ஒவ்வொரு கதையும் ஆத்மார்த்தமா ஏதோ ஒரு விதத்தில் மனசைத் தொடும். சில கதைகள் புதுசா ஒரு சிந்தனையைத் தூண்டும், சில கதைகள் நல்ல திருப்பத்தோடு பளிச்னு முடியும். சில கதைகளைப் படிச்சு, நான் என்னை அறியாமல் அழுது இருக்கேன். இன்னிக்கு வரைக்கும் பிடிவாதமா நல்ல சிறுகதைகளைவெளியிட்டுக் கொண்டே இருக்கிறது விகடன்.

அந்தக் கால லைப்ரரியில் விகடன் தொகுப்பு களைப் படிக்கிறது உண்டு. ஜெயகாந்தனின் வீரியமான பல தொடர்கள், சிறுகதைகளை அப்படித்தான் படிச்சேன். 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’னு ஜெயகாந்தன் எழுதிய தொடரும், அதற்கு கோபுலு வரைந்த ஓவியங்களும் காவியம். எனக்கு ஹென்றி மாதிரி ஒரு மனுஷனைப் பார்க்கணும்னு ஆசை. என்னால் அப்படி எல்லாம் இருக்கவே முடியாது. 'அக்னிப்பிரவேசம்’ சிறுகதை... இப்ப என்னவோ புதுமைனு நிறையச் செய்கிறோம். ஆனா, அந்தக் கதைக்கு முன்னாடி எதுவுமே புதுமைன்னு சொல்லிட்டு நிக்க முடியாது.  

  அந்த வாரம் முழுக்க நியூஸ் பேப்பர் படிக்கலைன்னாலும், எந்த வாரமும் விகடன் தலையங்கத்தை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். அது தமிழ்நாட்டின் கரன்ட் ட்ரெண்டை பளிச்னு புரியவெச்சிடும். எந்தச் சமரசமும் இல்லாம ஆட்சியாளர்கள் தலையில் குட்டி இருக்காங்க, தக்க சமயத்தில் பாராட்டி எழுதுவாங்க. மக்கள் நலன் என்பதைத் தாண்டி வேற எந்த நோக்கமும் இருந்ததே இல்லை!

அடலசன்ட் வயதில் ஒரு மாதிரி மனசு இலக்கே இல்லாமத் திரிஞ்சுட்டு இருந்தப்ப, அதுக்குக் கடிவாளம் போட்டு இறுக்கி வழிக்குக் கொண்டுவந்தது விகடனில் வெளியான 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ தொடர். சுவாமி சுகபோதானந்தாவின் ஒவ்வொரு வாக்கியமும் எளிமையும் வலிமையுமா இருந்தது. அந்த ரெண்டுங்கெட்டான் வயசில் அந்தத் தொடர் எனக்குப் பெரிய உற்சாக டானிக்.

சினிமா சூழலில் வளர்ந்ததால், ரொம்ப சின்ன வயசுல இருந்தே சினிமா ஆர்வம் எனக்குள் தொத்திக்கிச்சு. விவரம் புரிஞ்சு சினிமா பார்க்கத் துவங்கிய பிறகு, விகடன் விமர்சனத்தோடு என் எண்ணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அலசிட்டு இருப்பேன்.  

விகடன் மார்க் எல்லோரையும் எதிர்பார்க்கவைக்கும். என்னைப் பொறுத்தவரை விகடன் விமர்சனமும் மார்க்கும்தான், ரசிகர்களுக்கு ஒரு படத்தைப் பார்க்கத் தூண்டும் சென்சார் சர்ட்டிஃபிகேட்னு நம்புவேன். என் முதல் படம் 'துள்ளுவதோ இளமை’க்கு விகடனின் விமர்சனம் ரொம்பவே காட்டம். அடிச்சுப் பிரிச்சுத் துவைச்சுட்டாங்க.

யோசித்துப் பார்த்தால், விகடன் சொல்லியது அதன் இன்னொரு தகுதியான சமுதாயப் பொறுப்பின் வெளிப்பாடு. பிறகு, என்னை மாற்றிக்கொண்டேன். முதல் படத்தின் தடத்தில் இருந்து அடுத்த படத்திலேயே பாதை மாறி, 'காதல் கொண்டேன்’ பண்ணேன். அப்படியே என்னை ஏற்றுக்கொண்டது விகடன். 'காதல் கொண்டேன்’ படத்துக்குப் பிறகு நான் விகடன் தாத்தாவின் அரவணைப்பில் தஞ்சம் புகுந்துகொண்டேன்னுதான் சொல்லணும்.

நான் சமீபத்தில் மிகவும் விரும்பிப் படிக்கிற பகுதி... பொக்கிஷம். எப்பவும் பழைய நினைவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். பழைய காதல், பழைய பாட்டுப் புத்தகம், பழைய படங்கள் எல்லாமே கிளாஸிக் நினைவுகளில் நெகிழவைக்கும். நான் முன்னாடி படிக்கத் தவறவிட்டதை இப்போ விகடனில் மறுபடியும் படிக்கிறேன்.

ஆனந்த விகடன் என்றால், 'ஹேப்பி ஜோக்கர்’னு அர்த்தம். 'நான் ஒரு முட்டாள்’ என்பது மாதிரி சொல்லிக்கொண்டு சமூகத்துக்கு நிறைய நல்ல செய்திகளைச் சொல்லும் விகடன்.

நான் விகடனைச் சும்மா டைம் பாஸுக்குப் படிக்கிறது இல்லை. அதற்காகத் தனியா நேரம் ஒதுக்கிப் படிப்பேன். என் தனிமைத் தோழர்களில் விகடனுக்கு மிக முக்கிய இடம்.

'காதல் கொண்டேன்’ ஹிட்டான பிறகு விகடனில் வெளிவந்த என் முதல் பேட்டி இப்பவும் மனசுல பதிஞ்சிருக்கு. அது வரை நான் படிச்சுட்டு இருந்த பத்திரிகையில் போட்டோவோடு என் பேட்டி. என்னை உயரத்தில் தூக்கிவெச்சுக் கொண்டாடினாங்க. அதற்குப் பிறகு, எவ்வளவோ பேட்டிகள். என் ஒவ்வொரு பட முயற்சியின்போதும் என் முதல் பதிவு விகடனில்தான்!

நான் எழுத்தாளன் கிடையாது. ரசனையான வாசகன் மட்டுமே. ஆனா, என்னையும் எழுதவெச்சது விகடன். நான் ஆரம்பத்தில் தயங்கினபோது, 'உங்களால் முடியும்’னு உற்சாகப்படுத்தினாங்க.

நானும் விகடனும்!

'கனாக் காணும் காலங்கள்’ என்ற பெயரில் வெளிவந்தது எனது இளமைப் பருவ நினைவுகள். நான் வெளிநாடுகளுக்குப் போனா, இன்னமும் அதை ஞாபகம்வெச்சு அந்தத் தொடரைப்பற்றி யாராவது பேசு வாங்க. என்னையும் ஏதோ ஒரு விதத்தில் எழுத்தாளன் ஆக்கி அழகு பார்த்தது விகடன். என்னைப்பற்றியும் விகடனில் கிசுகிசு வெளியாகி இருக்கிறது. ஆனால், அதையும் நேர்மையோடுதான் சொல்லி இருந்தாங்க. இதோ இப்போ என் மனைவி கீதாஞ்சலியோடு காதல் என்று நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் விகடனில்தான்.

'ஆர்ட் ஃபிலிம் இல்லை... கமர்ஷியல் படம் இல்லை... ஆனா, நல்ல படம்பா!’ என்பார்கள் இண்டஸ்ட்ரியில். எனக்கு விகடன் அப்படித்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism