Published:Updated:

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

Published:Updated:
24 X 7 ராணுவப் பாதுகாப்பில் இருக்கும் வெள்ளை காண்டாமிருகம்! ஏன்?

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகம்தான் ஆடுகளம். ஆப்பிரிக்காவின் கை தேர்ந்த வேட்டைக்காரர்களின் பார்வை எப்போதும் இந்த காப்பகம் மீதுதான். கென்ய அரசு ராணுவம், சுற்றுசூழல் போராளிகள் ஆகியோரின் ஏக்கமும் இந்த காப்பகம் மீதுதான். இவை அனைத்திற்கும் காரணம், சூடான் என்னும் வெள்ளை காண்டாமிருகம். எந்நேரமும் வேட்டையாடப்படலாம் என்ற பயத்துடனும், அதே சமயம் ராணுவ வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த சூடான். இத்தனை பெரிய களேபரங்களுக்கும், சூடான் மீதான கவனத்திற்கும் காரணம் என்ன தெரியுமா? இதுதான் ஆப்பிரிக்க வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் இனத்தின் கடைசி ஆண் காண்டாமிருகம். வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே உலகில் மொத்தம் மூன்றுதான். அதில் இரண்டு பெண்கள். ஒரு வேளை வேட்டைக்காரர்களின் துப்பாக்கி இந்த சூடானையும் சுட்டு விட்டால் இந்த பூமியில் இனி இந்த இனமே கிடையாது. இருக்கும் வரை கொன்றுவிட்டு இறுதியில் அழுவதுதானே மனித இயல்பு? அதுதான் இந்த காண்டாமிருகங்களின் கதையும்.

கொம்புகளுக்காக அழிக்கப்பட்ட இனம்:

இந்த வெள்ளை  காண்டாமிருகங்களை பொறுத்தவரை இயற்கையில் எந்த விலங்காலும் வேட்டையாடப்படும் பாதிப்பு கிடையாது. ஆப்பிரிக்க யானைக்கு அடுத்து நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது இந்த வகை காண்டாமிருகங்கள். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை தேர்ந்தெடுத்து மந்தையாக வாழும் இவை தங்களுக்குள்ளேயே சண்டையிட்டோ, நோய்வாய்ப்பட்டோ, வயதாகியோ மட்டுமே இறக்கும். ஆனால் அதன் முதல் எதிரியே மனிதனாகி போனதுதான் சோகம். இதன் பலம் ,பலவீனம் இரண்டுமே இதன் கொம்புதான். தற்காப்புக்காக இயற்கையாக அமைந்த இந்த கொம்புகளே, மனிதனிடம் பலியாக காரணமாகி விட்டது.  இதன் இன்னொரு பலவீனம் இது அமைதியான விலங்கு. சிறுத்தை,புலி,சிங்கம் போன்று மனிதனை பார்த்தவுடன் தாக்கும் பழக்கம் இவற்றிற்கு கிடையாது. ஆபத்து என அறிந்தால் மட்டுமே சண்டையிடும். யானை போல பெரிய விலங்கு என்றாலும் சாதுவான விலங்கு என்பதால் இதுவும் மனிதர்களுக்கு வசதியாகி போய் விட்டது.

காண்டாமிருகங்களின் கொம்புகள் சீனா மற்றும் வியட்நாம் சந்தைகளில் சக்கை போடு போடுகின்றன. இவற்றின் மருத்துவத்தில் காண்டாமிருகத்தின் கொம்புகள் கேன்சர், பக்கவாதம்,வலிப்பு நோய்கள் போன்றவற்றை குணமாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால் வியட்நாம் இவற்றின் கொம்புகளுக்கு மிகப்பெரிய சந்தைகளாக விளங்குகிறது. அதோடு இதன் கொம்புகள் ஆண்மையை பெருக்கும்,பாலுணர்வை தூண்டும் என  கதை கட்டிவிட, சிட்டுக்குருவிகள் போல இதையும் விட்டுவைக்க வில்லை மனிதர்கள். அதோடு சீன பணக்காரர்கள் காண்டாமிருக கொம்புகளை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் நினைப்பதால் இவற்றை துரதிருஷ்டம் துரத்தியது. அதோடு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த சமயத்தில் இதன் கொம்பின் ஒரு கிலோ 30 லட்சம் வரை பேரம் பேசப்பட்டன, இப்போது ஒரு கிலோ கொம்பின் விலை ஐம்பது லட்சம். நமீபியா, காங்கோ போன்ற நாடுகளில் காண்டாமிருகத்தின் தலை வெற்றிக்கேடயம் போல வீட்டில் தொங்கும். சில வருடங்களுக்கு முன்பு இந்த வெள்ளை காண்டாமிருகங்களின் தலையை கோப்பையாக நாங்கள் கொண்டு வருவோம் என வேட்டை குழுக்கள் வெளிப்படையாகவே அறிவித்து அச்சுறுத்தியது.

வேலியே பயிரை மேய்ந்த கதை:

சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த பலம் வாய்ந்த வேட்டைக்காரர்கள் முன்பு பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகள் என்ன செய்யும்? எனவே கடந்த நூற்றாண்டுகளில் செம ஜரூராக நடந்தது வேட்டை. உலக அமைப்புகள் இவைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து எச்சரிக்க, பின்னர் பிரச்னை அறிந்து விழித்து கொண்டன ஆப்பிரிக்க நாடுகள். எனவே இனிமேல் சரணாலயங்களுக்கு பாதுகாப்பு, கடுமையான சட்டம் என சில 'சின்னப்புள்ள' தனமாக காரியங்கள் செய்தது. ஆனால் ஹெலிகாப்டர், நவீன துப்பாக்கிகள்,  இரவு நேர தாக்குதல் என வரும் ஹைடெக் வேட்டைக்காரர்களுக்கு எதிராக சண்டையிட முள்வேலியிட்டு, சில போலீஸ் காரர்களை  மட்டும் நிறுத்தி வைத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது என்பதை விட, இந்த நாடுகளால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. எங்களுக்கு பணம் கொடுத்து விட்டு தாராளமாக வேட்டையாடிக் கொள்ளுங்கள் என உள்ளூர் நிர்வாகங்களே அனுமதித்த கொடுமைகளும் உண்டு. உணவுக்கே வழியின்றி தவிக்கும் மக்கள் கொண்ட நாட்டில் காண்டாமிருகத்தை பற்றி பாதுகாப்பை பற்றி எப்படி யோசிக்க முடியும்? இதை முன்னரே யோசித்த கொலைகாரர்கள்  வெறித்தனமாக புகுந்து இவற்றை வேட்டையாடினர்.

வேட்டை என்பது ஏதோ ஒரு மிருகத்தை மட்டும் கொன்றுவிட்டு செல்வது என்பது அல்ல. கும்பல் கும்பலாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு கண்ணில் படும் காண்டாமிருகங்கள் எல்லாம் துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டு வீழ்த்துவார்கள். நூற்றுக்கணக்கில் காண்டாமிருகங்கள் கொலை செய்யப்படும். பின்னர் இவற்றின் கொம்புகளை கத்திகள் கொண்டு அறுத்துவிட்டு அப்படியே கிடத்தி விட்டு போய் விடுவார்கள். அரசாங்கம் பின்னர் வந்து பார்த்து விட்டு இந்த நாளில், இத்தனை கொலை என பதிவு செய்து விட்டு போகும். இது கடந்த சில ஆண்டுகளாக எண்ணிப்பார்க்க முடியாத அளவு நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 2007-ல் 13 காண்டாமிருகங்கள் மட்டுமே வேட்டையாடப்பட்டது. ஆனால் 2014-ல் இறந்த காண்டாமிருகங்களில் மொத்த எண்ணிக்கை 1215. காரணம் இவற்றின் தேவை. எண்ணிக்கை குறைய குறைய அதன் தேவையும், விலையும் அதிகமாகி கொண்டே போகிறது. 2013-க்கு பிறகு இதன் விலை இருமடங்காகி விட்டது சந்தையில்!

மறையத் துவங்கிய இனம்:

விளைவு 1900-ம் ஆண்டில் 5 லட்சம் என்றிருந்த மொத்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 1970- களில் மட்டும் 70,000 என ஆனது. ஆப்பிரிக்க நாடுகள் முழுக்க இருந்த மொத்த காண்டாமிருக இனங்களின் எண்ணிக்கை இது. இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது வடக்குப்பகுதி வெள்ளை காண்டாமிருகங்கள். காரணம் இவை மற்ற காண்டாமிருகங்களை விட கவுரவம் மிக்கதாக கருதப்பட்டதால் அதிகம் கொன்று குவிக்கப்பட்டது. 2011- ல் கருப்பு காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஐந்து மில்லியன் ஆண்டுகள் தாக்குப்பிடித்த இந்த இனம் மனிதர்களின் அட்டூழியத்தால் நூறு வருடங்கள் கூட வாழ முடியவில்லை. தற்போது உலகில் 29,000 காண்டாமிருகங்கள் இருப்பதாக கடந்த  வருடம் கணக்கிடப்பட்டது. அதே போல வடக்கு வெள்ளை இன காண்டாமிருகங்கள் 1960-ல் 2000 என இருந்தது. இவற்றின் எண்ணிக்கை 1984-ல் வெறும் 15 ஆக மாறியது. இப்படியே இருந்தால் ஆபத்து என அறிந்த  ஆர்வலர்கள் இவற்றை பிரித்து செக் குடியரசு, அமெரிக்கா, கென்யா என பிரித்து பாதுகாக்க முடிவு செய்தனர். வெள்ளை காண்டாமிருகங்கள் இனத்தில் தெற்கு மற்றும் வடக்கு பகுதி வெள்ளை காண்டாமிருகங்கள் என இரண்டு வகைகள் உண்டு. இவற்றில் தென் பகுதி காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பில் இருந்தாலும் அவை தற்போது பாதுகாக்கப்பட்டு 17,000 என்ற அளவில் இருக்கின்றன.

ஆனால் வடபகுதி வெள்ளை காண்டாமிருகங்கள் உலகில் இருந்ததே மொத்தம் மூன்றுதான். அதில் சூடான் மட்டுமே ஆண். இரண்டு பெண் காண்டாமிருகத்துடன் சேர்த்து கென்யாவின் ஒல் பெஜெட்டா காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூடானுக்கு முன் ஆங்கலிஃபூ என்னும் ஆண் காண்டாமிருகமும் கலிபோர்னியாவின் சான் டியாகோவின் பூங்காவில் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டது. அதனை நோலா என்னும் பெண் காண்டாமிருகத்துடன் இணை சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் அது இறக்கவும், வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களில் ஆண் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை இந்த உலகில் ஒன்று ஆனது. 

இனி என்ன எதிர்காலம்?

நமக்கு தெரியாமலே பல இனங்கள் பூமியில் அழிந்து போனாலும் கூட ,கண் முன்னரே அழிவை தடுக்க முடியாமல் போவது என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. எனவேதான் சூடானுக்கு கைகொடுக்க நிறைய பேர் முன்வந்தனர். எனவே தற்போது இதற்கு 38 துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் முழு நேர பாதுகாப்பு  அளிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலப்பரப்பையும் கண்காணிக்க கேமராக்கள் சகிதம் வேட்டைக்காரர்களிடம் இருந்து காத்துக்கொண்டிருக்கின்றனர் வீரர்கள். ”எங்கள் மீது மிக அதிகமான பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தாலும், இதை நாங்கள் மிகவும் நேசித்து செய்கிறோம். எங்கள் குழந்தை ஒன்றை கவனிப்பதை போன்று நாங்கள் சூடானை பார்க்கிறோம். அவனும் அப்படியே பழகுகிறான்“ என்கிறார் காவலாளி டோயோ.       

இதெல்லாம் எதற்கு? இனம் அழியாமல் இருப்பதற்குத்தானே? வெள்ளை காண்டாமிருகங்கள் அதிக பட்சம் 50 வருடங்கள்  வரை  வாழும். சூடானுக்கு 43 வயதாகி விட்டது. பெண் காண்டாமிருகமான நஜின் மற்றும் ஃபட்டு ஆகிய இருவர் மூலம் இயற்கையான முறையில் நடந்த இனவிருத்தி முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே செயற்கை கருத்தரிக்கும் முறையில் மட்டுமே சாத்தியம் என தினமும் முயற்சிகள் செய்து வருகின்றனர் மருத்துவர்கள். அதுவரை இதனை விட்டு வைக்க வேண்டுமே? எனவே கென்யா அரசு உலக மக்களிடம் நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கும்,  வீரர்களின் உணவு, போன்ற செலவுகளுக்காக உலகத்திடம் பணம் கேட்கிறது பூங்கா நிர்வாகம்.

இந்த பிரச்னை, வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு மட்டுமல்ல. மொத்த ஆப்பிரிக்க காண்டாமிருகங்களுக்கும் பொருந்தும். இதே வெள்ளை காண்டாமிருகங்களுக்கு ஒரு பக்கம் பாதுகாப்பளிக்க இன்னொரு புறம் தான்சானியா போன்ற பகுதிகளில் சுதந்திரமாக மற்ற மிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன. எனவே காண்டாமிருகத்தின் பாகத்தால் செய்யப்பட்ட பொருட்களை வாங்காமல் இருக்க உலக விலங்குகள் அமைப்பு அறிவுறுத்துவதோடு, விற்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தும் வருகிறது. 

யார் மிருகமெனத் தெரிகிறதா?