Published:Updated:

''ஐ லவ் டிரம்ஸ்!''

''ஐ லவ் டிரம்ஸ்!''

''ஐ லவ் டிரம்ஸ்!''

''ஐ லவ் டிரம்ஸ்!''

Published:Updated:
''ஐ லவ் டிரம்ஸ்!''
##~##

தாவதொரு பாடல் சொல்லுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பேட்டை ராப்...’

'அரபிக் கடலோரம்...’

'ரங்கன் ரங்கீலா...’

- இளைய தலைமுறையை உலுக்கி எடுத்த இந்த 'சூப்பர் ஹிட்’களில் இந்த இளைஞரின் கைவரிசைக்குப் பெரும் பங்கு. இதுவரை 5,000 திரைப் பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்திருக்கிற ஆனந்தன் சிவமணி என்கிற சிவா, செம கலர் ஃபுல்லான மனிதர்.

''ஐ லவ் டிரம்ஸ்!''

''எல்லாரையும்போல சின்ன வயசுல ஆரம் பிச்ச இன்ட்ரஸ்ட்தான் எனக்கும். கே.வி.மகா தேவன் சார்கிட்ட என் அப்பா டிரம்ஸ் வாசிச் சாரு. அப்படியே எனக்கும் ஆசை வந்தது. வீட்ல அப்பா இல்லாத நேரமா உட்கார்ந்து, டிரம்ஸைத் தட்டிப் பார்ப்பேன். பிளாஸ்டிக், சில்வர் பாத்திரம் போதும்... எதுனா ஒரு குச்சி கிடைச்சா, 'டும் டும்’னு தட்டிட்டே திரிவேன். என்னைத் திட்டாத ஆளே கிடையாது. எங்க அப்பாவுக்கு இது பிடிக்கல 'இந்தக் கஷ்டம் என்னோட போகட்டும். நீயாவது படிச்சு வேலைக்குப் போகணும்டா’னு அடிக்கடி சொல்வார்.''

பேசும்போதே பரபரப்பாகும் கைகள் காற்றிலேயே டிரம்ஸ் அடிக்க, சிவமணி துடிக்கிறதைப் பார்க்க அழகாக இருக்கிறது. ''ஸ்கூல்லயும் இதான் தொழில். டெஸ்க்ல தாளம் போட்டுக்கிட்டே திரிஞ்சதில், படிப்பு ஏறவே இல்லைங்க. முறைப்படி டிரம்ஸ் கத்துக்கலேன்னாலும், ஆர்வத்துல பிக்-அப் பண்ணி வெளியில புரொகிராம்ஸ் பண்ண ஆரம் பிச்சேன். மெட்ராஸ்ல இருக்கிற எல்லா லோக்கல் ட்ரூப்ல யும் வாசிச்சேன். பெரும்பாலும் ரோட்லதான் நம்ம கச்சேரி. ரெண்டு ரூபா டிப்ஸ் தருவாங்க.''

முதன் முதலில் இவரை அடையாளம் கண்டது, எஸ்.பி.பி!

''என் காட்ஃபாதர் அவர். ஒரு கல்யாண கச்சேரியில் நான் டிரம்ஸ் அடிக்கிறதைப் பார்த்துட்டு, எஸ்.பி.பி. சார்தான் எனக்கு சினிமா சான்ஸ் வாங்கித் தந்தார். அப்போ இருந்து இப்போ வரைக்கும் எஸ்.பி.பி. சார்தான் எங்களுக்கு எல்லாம் அப்பா மாதிரி.''

ஏ.ஆர்.ரஹ்மானும் சிவமணியும் பால்ய சிநேகிதர்கள். ''ரெண்டு பேரும் சேர்ந்து 'Roots’ னு ஒரு ட்ரூப் நடத்தினோம். ரஹ்மான்கிட்ட பிடிச்ச விஷயம்... அவனோட நல்ல குணம். இன்னிக்கு எங்கியோ உயரத்துல இருந்தாலும், டிசிப்ளின்லயும் தொழில் பக்தியிலயும்... அவன் ஒரு ஜெம். 'ரோஜா’ல இருந்து 'ரங்கீலா’ வரைக்கும் எங்க டீம் பெர்ஃபெக்ட்டா வொர்க் அவுட் ஆவுது...'' என்கிற சிவமணி, இளையராஜாவின் ரசிகர்!

''மியூஸிக் டைரக்டர்கள் எவ்வளவோ பேர்ட்ட வேலை பார்த்தாச்சு. ஆனா, ராஜா சார்ட்ட வொர்க் பண்றப்போ கிடைக்கிற மனத் திருப்தி... தனி. அப்படியே உருக்கிடும் சார்,'' என்றவர், ''ட்ரெண்ட் மாறுதுங்கிறது வேற... எனக்கு ராஜா சார்னா, என் பையனுக்கு ஃபேவரைட் ரஹ்மான். இப்பவே 'ஹல்லா குல்லா’ங்கிறான்!'' - சிரிக்கிற சிவமணியின் இசைப் பயணம், திரைப் பாடல்களோடு நிற்கவில்லை. ஜாஸ், கர்னாடிக் ஃப்யூஷன் என்று மேடை நிகழ்ச்சிகளில் முத்திரை பதிக்கிறார். இந்திய இசை மேதைகளுடன் பழகியவர், பணி புரிபவர்!

''ஐ லவ் டிரம்ஸ்!''

''சினிமாவுக்கு இசையமைக்கிறதைவிட ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ்தான் எனக்குப் பிடிச்ச விஷயம். ஜாகிர் உசேன், ஹரி பிரசாத் சௌராசியா, அல்லா ராக்கா, எல்.சங்கர், எல்.சுப்ரமணியம், விக்கு விநாயக்ராம், லூயிஸ் பாங்க்ஸ் எல்லாரோடவும் வொர்க் பண்ணிட்டேன்'' என்கிற சிவமணி ஒரு சம்பவத்தைச் சொன்னார்...

''பாம்பேல இன்டர்நேஷனல் டிரம்ஸ் ஃபெஸ்டிவல் நடந்தது. ஸ்வீடன்ல இருந்து என் ஃப்ரெண்ட் அதுல கலந்துக்க வந்தார். அவருக்காக இன்ஸ்ட்ரூமெண்ட்ஸைச் சரிபண்ண ஸ்டேஜ்ல நின்னுட்டு இருந்தேன். விழா நடத்துற அமைப்புக்காரர் ஒருத்தர், என்னைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாத குறையாத் துரத்தறார். 'நானும் ஒரு டிரம்மர்தான்’னு எவ்வளவு சொல்லிப் பார்த்தும், விடலை. பிடிச்சு வெளியே தள்ளிட்டாங்க. அங்கேயே அழுதுட்டேன். 'அவமானப்படுத்திட்டீங் கல்ல... ஒருநாள் இதே மேடையில நான் புரொகிராம் பண்ணிக் காட்டறேன் பார்...’னுட்டு வெளியே வந்தேன்.

'என்ன சிவா... எப்போ வந்தே?’னு என் எதிர்ல ஜாகிர் உசேன். அவ்வளவு அழுகையையும் மறைச் சுட்டு நின்னேன். ஏதோ யோசிச் சவர், 'சரி... நாளைக்கு ஈவ்னிங் நான் உன்னைக் கூப்பிடறேன்’னார். அடுத்த நாள் ஈவ்னிங் உசேன்ஜியோட கச்சேரி, பாதில நிறுத்திட்டு, மைக்ல 'இந்தியாவின் பெஸ்ட் டிரம்மர் மெட்ராஸ் இளைஞர் சிவமணியை இப்போ உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன்’னு ஸ்டேஜுக்கு என்னைக் கூப்பிட்டார். புரொ கிராம்ல அவ்வளவு வெறியோட வாசிச்சேன். பெரிய பெரிய ஜாம்பவான்கள் பார்க்கிறாங்க... பாராட்டுறாங்க. முதல் நாள் என்னைத் தள்ளிவிட்ட ஆளும் வந்தாரு. 'ஐ யம் ஸாரி ஜென்டில்மேன், ஒருநாள் வந்து வாசிப்பேன்னு சொன்னே... ஆனா, இப்படி மறுநாளே வந்து கலக்கிட்டயே''ன்னு மன்னிப்புக் கேட்டார்'' - பேசிக்கொண்டு இருக்கும்போதே சிம்பலைத் தட்டுகிறார்.

''நான் முதன்முதல்ல கத்துக்க ஆரம்பிச்சது வயலின். ஆனா, டிரம்ஸ்தான் என்னோட கரெக்ட்டா செட் ஆனது. ஐ லவ் டிரம்ஸ். வீ லவ் ஈச் அதர். நாங்க எங்களுக்குள்ளே பேசிப்போம். மியூஸிக் எனக்குத் தொழில் இல்லை. இது என்னோட வாழ்க்கை...'' என்பவர் திடீரென மௌனமாகிறார்.

''சரியா சொல்றதுன்னா... நான் டிரம்ஸ் வாசிக்க ஆம்பிச்சா... அங்கே மேலே சிவன் தன்னோட உடுக்கையை அடிக்கிறார்னு தோணும். அதைத்தான் நான் ரிஃப்ளெக்ட் பண்றேன். இது என்னோட பாக்யம். அதைப் பிரசாதமா எல்லோருக்கும் தர்றேன்னு சொல்வேன். கடவுள் மாதிரி நம்பர் ஒன் மியூசிஷியன் வேற யார் இங்கே?

ஆன்மிக ஈடுபாடு நிறைய. தொடர்ந்து சபரி மலைக்குச் செல்கிற பழக்கம் உண்டு. மலைக்குப் போகிற வழியில் இளைப்பாற உட்காரும் சமயங்களில் பக்தர்கள் முன்னாடி வாளிகளைக் கவிழ்த்து வெச்சு மரக் குச்சிக் கச்சேரி நடத்துவேன்.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை பிராக்டீஸ் பண்ணுவேன். கத்துக்கிறதுக்கு  முடிவே இல்லை. அதை நிச்சயமா சொல்லலாம். யார் புதுசா என்ன பண்ணினாலும், போய் உட்கார்ந்து கவனிப்பேன். ஆப்பிரிக்கா டூர் போனா, அங்கே அந்த ஆதிவாசிங்க என்ன வாசிக்கறாங்கன்னு பார்ப்பேன். 200 வகையான இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் கலெக்ஷன் என்கிட்ட இருக்கு. வித்தியாசமான சவுண்டு தர்ற பிரியாணி சட்டில இருந்து, அமெரிக்க 'ஓடு’ வரைக்கும் எல்லாம் வெச்சிருக்கேன்.''

சிவமணிக்கு அதிரடி இசைதான் வாழ்க்கை என்றாலும், மனசு மிக மென்மையானது. தான் மிகவும் மதித்த நண்பரின் சகோதரி மரணம்அடைந்தபோது, அவருடைய இறுதி ஊர்வலத் தில், தெருவில் மேளம் அடித்துக்கொண்டு போனதை அவரது நண்பர்கள் சொல்கிறார்கள். அந்தச் சகோதரி பற்றிக் கேட்டால், சிவமணியின் கண்கள் கலங்கிவிடுகின்றன.

''அவ்ளோ பாசமானவங்க அந்த சிஸ்டர். நான் என் சோகத்தையும் மரியாதையையும் வேற எப்படிச் சொல்ல முடியும்... சொல்லுங்க?'' என்று உடைந்த குரலில் கேட்கிறார்.

அதே ஹாலில் தரையில் ஒரு தலையணை மீது டிரம்ஸ் ஸ்டிக்கினால், 'டாடி... மம்மி... டாடி... மம்மி...’ என்று ரிதம் பழகிக்கொண்டு இருக்கிறான் குமரன். சிவமணியின் ஒரே மகன்.

''நிறைய மியூஸிக் கேட்கிறான். இவனும் டிரம்ஸ்லதான் வந்து நிக்கறான்'' - அவன் தலை கலைத்துச் சிரிக்கிறார் சிவமணி.

குமரனின் அம்மாவை நம் கண்கள் தேடுவதைப் புரிந்துகொண்ட சிவமணி, நீண்ட தொரு பெருமூச்சுடன், ''நானும் என் பையனும்தான் வீட்ல இருக்கோம். மனைவி என்கிட்ட இருந்து பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சு. மியூஸிக்தான் என்னோட ஃபர்ஸ்ட் வொய்ஃப்ங்கிறதை அவங் களால ஒப்புக்க முடியலை. எப்போ பார்த்தாலும், டூர், புரொகிராம், பிராக்டீஸ்... இது எல்லாம் அவங்களுக்குப் பிடிக்கலை... புரியலை. அதான் இந்தப் பிரிவு. எல்லாம் ஒருநாள் சரியாகும்னு நம்பறேன். அண்டர்ஸ்டேண்டிங் விட்டுப்போச்சுன்னா... அப்புறம் எல்லாமே சிரமம்தான்!''

லூயிஸ் பாங்ஸும் இவரும் இணைந்து 'SILK' என்று ஒரு குழுவை ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், சிவமணி தனியே ஒரு ஆல்பம் தயாரிக்கிறார்.

''அந்த ஆல்பத்துக்கு 'அம்மா’னு டைட்டில் வெச்சேன். நம்ம எல்லோரும் முதல்ல கத்துக்கிடற வார்த்தை... நமக்குக் கிடைக்கிற உறவு அம்மா தானே. அதான் 'அம்மா’ன்னு பேர்வெச்சேன்...'' என்றவர், ''கொஞ்சம் கேக்கறீங்களா!'' என்றபடி 'ஸ்டிக்ஸ்’ எடுத்தார். மெல்லிய அதிர்வில் ஆரம்பித்து, தடதடவெனத் திரண்டு அந்த அறையே இசையால் அதிர ஆரம்பிக்கிறது. வாசிக்கும்போது, பிரமிப்பூட்டும் ஒரு சிறுத்தையின் வேகம் தெரிகிறது அவரிடம்!

பக்கத்திலேயே குமரனும் தன் பங்குக்கு வாசித்துக்கொண்டு இருக்கிறான்... ''டாடி... மம்மி... டாடி... மம்மி...''

- ரா.கண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism