Published:Updated:

என் ஊர்!

நுங்கம்பாக்கத்து வயல் காலம்!

என் ஊர்!

நுங்கம்பாக்கத்து வயல் காலம்!

Published:Updated:
##~##

ந்து வயதில் இருந்தே சென்னை  நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் டாக்டர் கமலா செல்வராஜ், நுங்கம்பாக்கம் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''1947-ம் ஆண்டு என நினைக்கிறேன், திருச்சியில் இருந்து நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகர் முதல் தெருவில் உள்ள வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். அப்போது திருமூர்த்தி நகரில் திக்குக்கு ஒன்றாக மொத்தமே ஆறு வீடுகள். சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள், அப்போது நுங்கம்பாக்கத்தில் எங்கள் வீட்டைச் சுற்றிலும் வயல் காடுகள். வயல்களில் மேயும் ஆடு, மாடுகளை விரட்டியபடி ஓடியது இன்றும் நினைவு இருக்கிறது.  அப்பா ஜெமினி கணேசன்தான் முதன்முதலில் இந்தப் பகுதிக்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள வித்யோதயா, சர்ச் பார்க் கான்வென்ட் என இரு பள்ளிகளில் படிப்பு. கார் இருந்தாலும் வீட்டில் இருந்து நடந்தே பள்ளிகளுக்குச் சென்று வருவேன்.  

14-வது வயதில் தீவுத் திடலில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டேன். அம்மாவைக் கொத்தவால்சாவடிக்கு காரில் அழைத்துச் சென்று மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கி வருவோம். அன்றைய ஆர்கானிக் மாசற்ற சென்னை காற்றும், எங்கு பார்த்தாலும் பச்சை சேலையால் போர்த்தியதுபோல் காணப்பட்ட வயல்வெளிகளையும் இன்று நினைத்துப்பார்த்தால், ஏதோ சொர்க்கத்தில் வாழ்ந்ததைப் போல் இருக்கிறது. இப்போது நாங்கள் உள்ள திருமூர்த்தி நகர் ஐந்தாவது தெரு வீட்டை அப்பா அப்போது 80 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார்.

அதிகாலை எழுந்து தோட்டத்தில் பூ பறித்து முடித்ததும் விஜி மாமியை சந்திக்கப் போவேன். விஜி மாமி எங்கள் குடும்பத்தில் ஒருவர். அன்று இருந்த ஆறு வீடுகளில் மாமியின் வீடும் ஒன்று. அந்த நாட்களில் இருந்தே தினமும் பூப்பறித்து விஜி மாமியிடம் கொடுப்பது வழக்கம். பிறகு அங்கு இருந்து திருமூர்த்தி நகரை ஒட்டி உள்ள ஜோசியர் தெருவில் மாமியார் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து அம்மா-அப்பா படத்துக்குப் பூ போடுவேன். பிறகு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வாக்கிங். முடிந்ததும் எங்கள் மருத்துவமனை வழியாக வீடு திரும்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். இத்தனை வருட வாக்கிங் வழக்கம், எதிர்ப்படும் முகங்கள் அனைத்தையும் பழக்கப்பட்ட முகங்களாக மாற்றி இருக்கிறது.

என் ஊர்!

இந்த வாக்கிங் பழக்கம் அப்பாவிடம் இருந்து நான் கற்றது. அப்பாவுடன் கடற்கரை வரை காரில் சென்று அங்கு வியர்க்க விறுவிறுக்க நடந்துவிட்டு, வரும் வழியில் பாம்குரோவில் மசால்தோசை சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவோம். எங்கள் வளர்ப்பு விஷயத்தில் அப்பா-அம்மா இருவரும் இரு துருவங்கள். அப்பா அநியாயத்துக்குச் செல்லம் கொடுப்பார். அம்மா அடிக்கக்கூட தயங்காத கண்டிப்பு. சகோதரிகள் நால்வரும் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு அந்தக் கண்டிப்பே காரணம்.

அப்பாவுக்கு எவ்வளவோ நண்பர்கள் இருந்தாலும் சந்திரபாபுவும், தமிழ்வாணனும் மட்டும் ஸ்பெஷல். சந்திரபாபு வீட்டுக்கு வந்துவிட்டால் வீடே அமர்க்களப்படும். 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’ என்று பாடியபடியே ஆட்டம்போட்டு எங்களையும் ஆடச்சொல்லும் அவரின் துறுதுறுப்புக்கு அன்றைய வாண்டுகள் நாங்கள் அடிமை. எங்கள் சிறுவயதில்  'கல்கண்டு’ இதழில் எங்களைப் பேட்டி கண்டு அட்டையில் எங்கள் படத்தை வெளியிட்டு இருந்தார் தமிழ் வாணன்.

அப்போது அப்பா தினமும் காலையில்  ஷார்ட்ஸ், டி-ஷர்ட் அணிந்து காய்கறி வாங்க அவரே கூடையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். அவரின் கை விரலை பிடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தபடியே நுங்கம்பாக்கம் சாலையில் சென்றதை நினைக்கும் போது இப்போதும் கண்கள் கலங்கும்.

என் ஊர்!

வாழ்க்கையில் எந்த உச்சத்தைத் தொட்டாலும் நுங்கம்பாக்கத்தில் அதுவும் திருமூர்த்தி நகரை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நான் இறைவனிடம் வேண்டி கேட்டுக் கொள்வது!''

- ம.கா.செந்தில்குமார் படங்கள்:என்.விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism