Published:Updated:

நெகிழ வைக்கும் சைக்கிள் சாகசம்!

நெகிழ வைக்கும் சைக்கிள் சாகசம்!

##~##

'The Cyclist’ என்ற ஒரு படத்தில் நோயுடன் போராடிக்கொண்டு இருக்கும் தன் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்குப் பணம் திரட்டுவதற்காக, ஒரு வாரம் முழுக்க இரவும் பகலும் தரையில் கால் பதிக்காமல், சைக்கிளில் சுற்றிக்கொண்டே இருப்பான் குடியானவன் ஒருவன். அவனுடைய முயற்சியை முறியடிப்பதற்கு பலவிதங்களில் சிக்கல்கள் வரும். மேலோட்டமாகப் பார்க்க சைக்கிள் சாகசம்போல் தோற்றம் அளித்தாலும், படத்தின் நிறைவு, நெகிழ்வாக அமைந்து இருக்கும். அதேபோல் கோவையிலும் ஒரு நெகிழ்வும் மகிழ்வுமான சைக்கிள் சாகசம் அரங்கேறி இருக்கிறது...  

 கோவை என்.ஜி.பி. நகரைச் சேர்ந்த அருண், சைக்கிள் சாகசம் புரிவதில் கில் லாடி. வெறும் த்ரில் அனுபவத்துக்கு சாகசம் புரியாமல், கோவையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் சைக்கிள் சாகசம் புரிந்து அந்தக் குழந்தைகளை மகிழ்விக்கும் அருணுக்கு வயது 15-தான்!

நெகிழ வைக்கும் சைக்கிள் சாகசம்!

''எட்டாவது வரைக்கும் சென்னையில் படிச்சேன். அப்பாவுக்கு வேலை இங்கே மாத்தலாகிருச்சு. வீடியோ கேம்ஸில் எனக்கு சைக்கிள் விளையாட்டுதான்  பிடிக்கும். அந்த ஆர்வம்தான் நாலாவது படிக்கிறப்பவே சைக்கிள் சாகசத்துக்கு என்னைத் தூண்டியது.

சைக்கிளை முன் அல்லது பின் சக்க ரங்கள் ஏதேனும் ஒன்றில் மட்டும் ஓட்டு வேன். இப்படி கோவை-அவினாசி சாலையில் 4 கி.மீ. தூரம் வரை ஓட்டி இருக்கேன். இப்படி ஒரே சக்கரத்தில் 10 கி.மீ. சைக்கிள் ஓட்டிய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இப்போ தீவிரமா இருக்கேன்!'' என்று நெற்றி வியர்வை துடைத்துச் சிரிக்கிறார் அருண்.  

பின்னால் இருக்கும் கேரியர் மேல் ஒரு கால், ஹேண்டில் பாரில் மற்றொரு கால் வைத்த படி சைக்கிள் ஓட்டுவது, ஸீட்டில் அமர்ந்தபடி காலால் ஹேண்டில் பாரை 'கை’யாளுவது என்று வித்தியாசமான சாகசங்களால் வியப்பூட்டுகிறார் அருண்.

''ஒருமுறை இப்படி நான் சும்மா ரோட்டுல சைக்கிள் விட்டுட்டு இருக்கிறதைப் பார்த்த  ஒருத்தர் என்னை அழகழகா போட்டோ எடுத்தார். அவர் பெயர் மகேந்திரனாம். கிளம்புறப்போ என்கிட்ட, 'நீ செய்யுற விஷ யம் மத்தவங்களுக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்குறதா இருக்கணும். அப்படி நடந்துக்கோ’ன்னு சொல்லிட்டுப் போனார். அப்போ இருந்துதான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆதரவற்றோர் குழந்தை இல்லங்களுக்குப் போய் சைக்கிள் சாகசம் பண்றேன். மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு!'' என்று சொல்லும்போது அருண் கண்களில் திருப்தி தெரிகிறது.

சின்ன வயசு... பெரிய விஷயம்.  வாழ்த்துக்கள்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: தி.விஜய்      

அடுத்த கட்டுரைக்கு