Published:Updated:

மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

##~##

மேஜிக்... இந்த 'மந்திர’ வார்த்தையைக் கேட்டாலே மனசுக்குள் ஓர் இனம் புரியாத சந்தோஷம் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விழிகள் விரியக் கண்டு களிக்கும் மந்திர உலகம் அது. அதிலும் சேலத்தில் மேஜிக் நிபுணர் கார்த்திக் என்றால் குழந்தைகளுக்கு அவ்வளவு குதூகலம்!

 ''என் ஊர் ஆட்டையாம்பட்டி. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என் பள்ளிக்கு மேஜிக் நிபுணர் ஒருவர் வந்து மேஜிக் செய்தார். அதை அதிசயத்துடன் பார்த்தேன். அப்போது அந்த மேஜிக் நிபுணர்தான் எனக்கு ஹீரோ. பல நாட்கள் அவரைப் பற்றியும் அவர் செய்து காட்டிய வித்தைகளைப் பற்றியுமே யோசித்துக் கொண்டு இருந்தேன். மீண்டும் ஒருமுறை அவர் பள்ளிக்கு வந்தபோது, அருகில் சென்று அவரை ஆச்சர்யத்துடன் தொட்டுப் பார்த்தேன். வித்தைகளைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டேன்.

மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

அப்போதுதான் அவர், 'இது ஒன்றும் மாய, மந்திரம் இல்லை. நீயும் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம்’ என்று ஒன்றிரண்டு வித்தைகளைச் சொல்லிக்கொடுத்தார். அதை அப்படியே கற்றுக்கொண்டு, பள்ளியிலும் வீட்டிலும் செய்து காண்பிக்க,  எங்கள் பகுதியில் எனக்கு ஹீரோ அந்தஸ்து கிடைத்தது.  அந்த உற்சாகத்தில் தேடித் தேடி வித்தைகள் கற்றேன்.  

படிப்பை முடித்த பிறகு சென்னை சென்று மேஜிக் துறையில் பிரபலமான மோகன், சூரஜ், பல்லடம் யோனா ஆகியோரிடம் முறையாக மேஜிக் கலையைக் கற்றேன். கடந்த 16 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கிறேன். 3,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை செய்துவிட்டேன். கொல்கத்தா தமிழ்ச் சங்கம் 'சிறந்த மேஜிக் நிபுணர்’ என்ற பட்டம் அளித்தது. பொதிகை டி.வி-யில் 'மாயா மாயா சீஸன்-2’ என்ற எனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேஜிக் என்பது பெரிய விஷயம் இல்லை. டைமிங்குடன் கொஞ்சம் தந்திரம் கலந்தால் அதுதான் மேஜிக். ஆனால், கொஞ்சம் டைமிங் மிஸ் ஆனா லும் சொதப்பிவிடும். மேஜிக் செய்ய தினசரி பயிற்சி முக்கியம்.  மேஜிக்கில்  மனிதனை இரண்டாக வெட்டி மீண்டும் ஒட்டுவது, அந்தரத்தில் மிதக்கும் பெண், கர்ச்சீப்பில் இருந்து புறா பறப்பது போன்ற பெரிய மேஜிக் எல்லாம் வெளியே சொல்ல மாட்டோம். அவை தொழில் ரகசியம். ஆபத்து நிறைந்ததும் கூட. மற்றபடி சிறிய வித்தைகளை  எல்லோரும் தெரிந்துகொண்டு செய்யலாம்.

மாயம் இல்லை... மந்திரம் இல்லை!

என் நிகழ்ச்சிக்கு முதலில் குழந்தைகள்தான் ஆர்வமாக வருவார்கள். பெரியவர்கள், குழந்தைகளுக்காக வருவதாகச் சொல்லி அலட்சியமாக வந்து அமர்வார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்ததும் பெரியவர்களும் குழந்தைகளாக மாறிக் கைதட்டி வாய்விட்டு சிரிப்பார்கள். அவர்களின் உற்சாகம்தான் என்னைச் செலுத்திக் கொண்டிருக்கும் மேஜிக்!'' மந்திரப் புன்னகை மாறாமல் பேசுகிறார் கார்த்திக்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு