Published:Updated:

என் ஊர்!

கருப்பசாமி மாதிரி காந்தி!

என் ஊர்!

கருப்பசாமி மாதிரி காந்தி!

Published:Updated:
##~##

நாட்டுப்புறப் பாடல்கள், சினிமா துள்ளலிசைப் பாடல்கள் மூலம் 'பரவை’க்கு புகழ் சேர்த்த  'பரவை’ முனியம்மா... பரவை குறித்த தன் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறார்...

''நான் பிறந்தது வாடிப்பட்டிப் பக்கம் பெருமா(ள்)பட்டி. அப்பா கருப்பையா சேர்வை. அம்மா பார்வதி. ரெண்டு பேருக்கும் கல்யாணமாயி 18 வருஷம் கழிச்சிப் பிறந்த ஒரே புள்ள நானு. பெருமாபட்டி பூரா விவசாயம் செழிச்சிக்கெடக்கும். எந்த நேரமும் வயக்காட்டில் வேலை நடந்துகிட்டே இருக்கும். களை எடுக்கிற பொம்பளைக அலுப் புத் தெரியாம இருக்க பாட்டுக் கட்டுவாக. அதெல்லாம் கேட்டு வளந்ததால யாரும் சொல்லித் தராமலேயே பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

16 வயசுல திடுக்குன்னு எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. முள்ளிப்பள்ளம் வெள்ளச்சாமி மாப்பிள்ளை. கல்யா ணம் முடிஞ்சதும் நானும், அவரும் வாழ்றதுக்காக பரவைக்கு வந்தோம். 30 ரூபா வாடகைக்கு தீப்பெட்டி சைஸ் வீட்ல குடியேறுன என்னைய மச்சு வீடு கட்டி வாழ வெச்சது இந்த ஊரு ராசிதான். 35 வயசுல மதுரை எம்.கே.புரம் பகவதியம்மன் கோயில் திருவிழாவுல கும்மிப் பாட்டு பாடு றதுக்கு முதன்முறையா மேடை ஏறி னேன். அப்புறம் நிறைய வாய்ப்பு வந்துச்சு. ஊர்ல நிறைய

என் ஊர்!

முனியம்மா இருந்ததால, 'பரவை’ன்னு என் ஊர் பேரை முன்னாடி சேர்த்துகிட்டேன்.

ஊர்ல இருக்கிற முத்துநாயகி அம்மன் கோயிலும், திருவிழாவும் ரொம்பப் பிரசித்தம். புரட்டாசி மாசம் காப்புக்கட்டி 22 நாள் திருவிழா நடக்கும். பிள்ளைமாரு, சேர்வை, நாடார், அரிசன மக்கள்னு ஏழெட்டு சாதிக்காரங்க ஒண்ணுகூடி ஒத்துமையா விழா எடுப்பாங்க. ஆனா, நயா பைசா கூட வரி வசூல் பண்ண மாட்டாங்க.

அதுக்குப் பதிலா ஒரு ஏக்கரில் நெல் நட்டா, அறுக்கிறப்ப ஆறு பக்கா நெல்லை கோயிலுக்குக் காணிக்கையா கொடுத் துடணும். 50 தென்னமரம் இருந்தா 100 காய், வெத்தல கொடிக்கால் நட்டிருந்தா ஒரு சுமை வெத்தல (12 குண்டு) இப்படி என்ன மகசூல் வெச்சாலும் அம்மனுக்கு ஒரு பங்கை காணிக்கையா கொடுக்கணுங்கிறது ஊர்க் கட்டுப்பாடு. யாரும் கள்ளக் கணக்கு காட்ட மாட்டாக. விளைஞ்சதவிட கூடுதலாத்தான் கோயிலுக்குக் கொடுப்பாக. அந்த வருமானத்தில் நித்தம் ஒரு நிகழ்ச்சினு திருவிழா களைகட்டும்.

சுதந்திரப் போராட்ட தியாகிங்க நிறையப் பேரு வாழ்ந்த ஊரு இது. சன்னாசி, அண்ணாமலை, கே.வி.பரங்கிரி, ஜோதியா பிள்ளை, எம்.எஸ்.மணி, செல்லமுத்துப் பிள்ளைன்னு சொல்லிக்கிட்டே போவலாம். தியாகிகளுக்கு அரசாங்கம் ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்தபோது, 'நாட்டுக்காக உழைச்சோம். அதுக்கு எதுக்கு நிலம்’னு வாங்க மறுத்துட்டாங்கப்பா.

பரவைக்குப் பக்கத்தில் தண்டவாளம் இருக்கிறதால், ஊருக்குள்ளே நுழையுறதுக்கு  ஒரே வழி. அந்த ரோட் டில் கம்பீரமா நிற்கிற காந்தி சிலைதான் பரவையோட அடையாளம், சிறப்பு எல்லாமே. ஏழு அடி உயரம், சிலம்புக் கம்பு மாதிரி கையில் நீளமான குச்சி, கருப்பசாமி மாதிரி கம்பீரம்னு ஒரு திணுசா இருப்பார் காந்தி. ஆரம்பத்தில் மீனாட்சி அம்மன் கோயில்ல அம்மன் சந்நிதி பக்கத்தில் இந்த காந்தி சிலை இருந்தது. 'ஒரு அகிம்சைவாதி சிலை இப்படி இருக்கக்கூடாது’ன்னு சிலர் அபிப்ராயம் சொன்னதும் வேற சிலை வெச்சிருக்காங்க. 'அந்தச் சிலையை எங்ககிட்ட கொடுங்க’னு பரவையைச் சேர்ந்த தியாகிங்க கேட்டு வாங்கிட்டு வந்து இங்கே வெச்சிருக்காங்க. இன்னிக்கு வரைக்கும் காந்தி சிலையை ஊர் மக்கள் நல்லபடியா பராமரிச்சுட்டு வர்றாங்க.

என் ஊர்!

மாடி வீடு கட்டி வேலைக்கு ஆள் வெச்சிக்கிற அளவுக்கு வசதியா இருக்கேன். ஆனா, ஊருக்குன்னு பெரிசா எதுவும் செய்யலை. ஏதோ ஊர் பேரை கொஞ்சம் ஃபேமஸ் ஆக்கிட்டேன். என்னால முடிஞ்சது. ஊருக்கு நான் பண்ற கைமாறா கடைசிக் காலம் வரைக்கும் பரவையைவிட்டு எங்கேயும் போக மாட்டேஞ் சாமி!''

- கே.கே.மகேஷ்,  படங்கள்: க.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism