Published:Updated:

என் ஊர்!

''அரசியல் பல்கலைக்கழகத்தில் படித்தேன்!''

என் ஊர்!

''அரசியல் பல்கலைக்கழகத்தில் படித்தேன்!''

Published:Updated:
##~##

''நான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயர் திருவேற்களம். அது மருவி திருவக்குளம் என்றானது. ஆனால், இந்தப் பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது. 'அண்ணாமலை நகர்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்!''- மலர்ச்சியான சிரிப்புடன் தன் ஊர் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன்.

 ''எங்கள் ஊர் மக்களுக்கு, ஊர் என்றால் பல்கலைக்கழக வளாகம்தான். தமிழ்நாட்டின் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். நான் எட்டாவது படித்துக்கொண்டு இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது அண்ணாவின் மீது இளைஞர் களுக்கு அதிகமான ஈர்ப்பு. அண்ணா காலை 10 மணிக்கு வருகிறார் என்று அறிவித்து இருப்பார்கள். ஆனால், அவர் மதியம் 3 மணிக்கு வருவார். ஆனாலும், அவ்வளவு நேரமும் கூட்டம் கலையாமல் அதிகரித்தபடிதான் இருக் கும்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த ராஜேந்திரனின் மரணம் எங்கள் வீட்டின் அருகேதான் நடந்தது. அந்தப் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். காவல் துறை மாணவர்களை விரட்டி அடித்தது. பின்னால் உள்ள அணியில் நாங்கள் இருந்தோம். இப்போது பாலிடெக்னிக் இருக்கும் இடத்தில் மாணவர்கள் முன்னேறிச் சென்றபோது, முன்னால் இருந்த ராஜேந்திரன் குண்டுக்கு

என் ஊர்!

இரையானார். ராஜேந்திரனுக்கு அண்ணாமலை நகரில் இப்போதும் சிலை இருக்கிறது. பாலதண்டாயுதம், உமாநாத், மதியழகன், அன்பழகன், கே.ஏ.கிருஷ்ணசாமி போன்ற திராவிட இயக்க மற்றும் கம்யூனிஸ்ட் அரசியல் தலைவர்களை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கியது.

நான் பி.யு.சி. முடித்துவிட்டு எம்.ஏ. சைக்காலஜி படித்தேன். என் தந்தைக்கு என்னைக் காவல் துறை அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசை. அதனால் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெறுவது கொஞ்சம் எளிமையாக இருக்கும் என்பதற்காகவே என்னை சைக்காலஜி படிக்க வைத்தார். பல்கலைக்கழக மைதானத்துக்குச் சென்று பல வகையான உடற்பயிற்சிகள் செய்வது, விளையா டுவது என்று பொழுது கழிந்தது.

எங்கள் ஊர் ஒரு கிராமமாக இருந்தாலும், பல்கலைக்கழகம் இருந்ததால், கிராமத்துக்கே உரிய பஞ்சாயத்து போன்றவை எல்லாம் கிடையாது. ஆனால், எங்கள் ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயில் கூத்தாண்டவர் திருவிழா மிகப் பிரபலம். கூவாகத்தில் நடப்பதுபோலவே இங்கும் விமரிசையாக நடக்கும். 10 நாட்கள் மகாபாரதக் கூத்து நடக்கும். காளி பூஜை, அரவானுக் குத் தாலி கட்டி அறுக்கும் சடங்கு என எல்லாமே நடக்கும். அதையட்டி தேர் பவனியும் உண்டு.  

எங்கள் ஊரில் சின்னச் சின்ன ஹோட்டல்கள்தான் இருக்கும். பெரிய ஹோட்டலுக்கோ தியேட்டருக்கோ போக வேண்டும் என்றால், சிதம்பரம் டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். இந்திய அளவில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் என்ற பெருமையைப்போலவே முதன்முதலில் தலித் விடுதலைக்காகப் போராட்டம் நடத்திய நந்தன் பிறந்த ஊர் என்ற பெருமையும் உண்டு.

இப்போது நிறைய மாறிவிட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் முன்புபோல் அரசியல் உணர்வுக்கான களமாக இல்லை. சுய முன்னேற்றத்தைக் கவனத்தில்கொண்ட, அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தான் இருக்கிறார்கள்.

என் ஊர்!

ஆனாலும், ஓர் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பல்கலைக்கழகத்தின் இருப்பால் எங்கள் ஊரில் எல்லா சாதியிலும் வீட்டுக்கு ஒரு பட்டதாரி இருக்கிறார். வேறு எந்த ஊருக்கும் கிடைக்காத பெருமை இது!''

- கவின் மலர், படங்கள்:வீ.நாகமணி, எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism