Published:Updated:

ஆப்பிளின் புது 'பச்சைப் பசேல்' அலுவலகம்! #AppleCampus2

ஆப்பிளின் புது 'பச்சைப் பசேல்' அலுவலகம்! #AppleCampus2
ஆப்பிளின் புது 'பச்சைப் பசேல்' அலுவலகம்! #AppleCampus2

ஆப்பிளின் புது 'பச்சைப் பசேல்' அலுவலகம்! #AppleCampus2

ருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றை நம்மை விடவும் நன்கு உணர்ந்துள்ளன, சிலிக்கான் வேலியில் உள்ள டெக் நிறுவனங்கள். எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள் மரபுசாரா ஆற்றல்மூலங்களை நோக்கி முன்னேறி வருகின்றன. கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கூட இவற்றில் முழு மூச்சுடன் களமிறங்கியுள்ளன. அதிலும் ஆப்பிள் நிறுவனம், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில், முன்னிலை வகித்துவருகிறது. உலகின் மொத்த மின்சக்தியில் 7 சதவீதத்தை எடுத்துக் கொள்வதும் இதுபோன்ற தொழில்நுட்ப நிறுவனங்களே ஆகும். எனவே பெரும்பாலான நிறுவனங்கள், மரபுசாரா ஆற்றல் மூலங்களின் தேவையை உணர்ந்து அதற்கான திட்டமிடல்களில் இறங்கியுள்ளன. தற்போது ஆப்பிள் கட்டிவரும் புதிய தலைமையகத்திலும் இதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது அந்நிறுவனம். ஆப்பிள் தலைமையகத்தின் இரண்டாவது கேம்பஸ் ஆன இதனை ஸ்பேஸ்ஷிப் என்றும் அழைக்கின்றனர். இப்படி அழைக்க காரணம் இதன் வடிவமைப்புதான். சீனாவில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்த பீஜிங் பறவைக்கூடு மைதானம் நினைவிருக்கிறதா? மேலே இருந்து பார்க்கையில் வடிவமைப்பில் அதேபோல காட்சியளிக்கிறது இந்த ஆப்பிள் கேம்பஸ். ஆப்பிளின் இந்த அலுவலகம், ஸ்டீவ் ஜாப்ஸின் கனவுகளில் ஒன்று என்பது இதன் கூடுதல் ஸ்பெஷல்.

2011-ம் ஆண்டிற்கு முன்பு, இந்தக் கட்டடத்தின் திட்டத்தை தயாரிக்கவே இரண்டு ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார் ஜாப்ஸ். இந்த அலுவலகம் 2.8 மில்லியன் சதுர அடியில், கலிபோர்னியாவில் மிகப் பிர1மாண்டமாகத் தயாராகி வருகிறது. 

2011-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள், 2015-ம் ஆண்டுக்குள் முடியும்படி திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது குறிப்பிட்ட காலத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் இது செயல்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கான மொத்த செலவு எவ்வளவு என்பது குறித்து ஆப்பிள், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 5 பில்லியன்கள் வரை இருக்கலாம் என யூகிக்கின்றனர் நிபுணர்கள். இதன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரத்திற்காக மட்டுமே ஒரு பில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அளித்த தகவலின்படி, இந்த அலுவலகத்தில் மொத்தம் 14,200 ஊழியர்கள் பணிபுரிய உள்ளனர். இந்த அலுவலகத்தின் முதன்மை கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிதான் உலகின் மிகப்பெரிய வளைந்த கண்ணாடி. இந்த கட்டடத்தை சுற்றி பசுமையான சூழலுக்காக ஏராளமான மரங்கள் நடப்படவுள்ளன.

எப்படி ஆப்பிளின் கேட்ஜெட்ஸில், ஒவ்வொரு பகுதியும், பார்த்துப் பார்த்து துல்லியமாக வடிவமைக்கப்படுகிறதோ, அதைப் போலவே இந்த கட்டடத்தின் ஒவ்வொரு பகுதியும் இழைக்கப்படுகிறது. இந்தக் கட்டுமானப் பணியில் மட்டும் சுமார் 13,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் சுற்றளவு சுமார் 1 மைல். இந்த வளாகத்தில் மொத்தம் 8 கட்டடங்கள் அமையவுள்ளன. 1000 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியமும் இங்கே உருவாகி வருகிறது. இந்த அலுவலகம் திறந்தபின்பு ஆப்பிளின் கீ-நோட் நிகழ்ச்சிகள் இங்கேயே நடக்கவும் வாய்ப்பு அதிகம். ஏற்கனவே கூறியபடி இந்த அலுவலகத்தின் மொத்த மின்சக்தியும் மரபுசாரா ஆற்றல் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. வெறும் அலுவலகமாக மட்டும் காட்சியளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அலுவலகத்தை சுற்றிலும் 80% அளவிற்கு மரங்கள் நடப்படுகின்றன. இதனால் வெறும் கட்டடமாக இல்லாமல், பச்சைப் பசேல் என குட்டி வனம் போல காட்சியளிக்க உள்ளது இந்த டெக் கேம்பஸ்.

- ஞா.சுதாகர்.

அடுத்த கட்டுரைக்கு