Published:Updated:

கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo

கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo
கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo

கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo

சங்கச் சித்திரங்கள் - ஆனந்த விகடனில் எழுத்தாளர் ஜெயமோகன் 40 வாரங்கள் எழுதிய தொடர். ஜெயமோகனின் எழுத்துகளை தமிழ்மக்களிடம் இன்னும் அதிகமாய் கொண்டு சேர்ந்தது. கடந்த 2001-ம் ஆண்டு நவம்பரில் எழுதத் தொடங்கிய இந்தத் தொடர் புத்தகமாக வந்து வெகுவாக விற்பனையானது. சங்க வாழ்க்கையை தன் வாழ்வின் சம்பவங்களோடு இணைத்து வெளியான ஜெயமோகன் எழுத்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. சங்கச்சித்திர தொடர் துவங்கப்பட்டபோது ஆனந்த விகடனில் வெளியான முதல் பகுதி இங்கே...

"நலத்தகைப் புலத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கி தண்கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணம் இல கமழும் -
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழியவர் சென்ற நாட்டே?

(கழார்க்கீரனெயிற்றியனார் - குறுந்தொகை 330 - திணை: மருதம்)

கள் மணக்கும் மலர்

பத்தாவது படிக்கும்போது நானும் இணைபிரியாத நண்பன் ராதாகிருஷ்ணனும் பிரபஞ்ச ஆராய்ச்சியில் தீவிரமான ஆர்வம் கொண்டிருந்தோம். முதற்கட்டமாக பிரபஞ்ச சிருஷ்டியையும் அதன் முக்கியப் பகுதியாக மானுட சிருஷ்டி ரகசியத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தோம். சமூக அமைப்பின் கெடுபிடி (ஞானத்துக்குத்தான் எத்தனை தடைகள்!) காரணமாக, ஆராய்ச்சி முற்றிலும் கொள்கைத் தளத்திலேயே நடந்துகொண்டிருந்தது. நிரூபணத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில், கொள்கைகள் கடுமையான விவாதங்களைக் கிளப்பியது இயல்பே. முக்கிய விவாதம் புராதனமான 'இயற்கை மணமா, செயற்கை மணமா' பிரச்னைதான், மேலும் விரிவான தளத்தில்.

ராதாகிருஷ்ணன் ஒரு சாகசத்தை முன்மொழிந்தான். எனக்கு அடிவயிற்றில் ஒரு பந்து உருண்டது. இருப்பினும் அறிவுத்தாகம் உந்தியது. இருவரும் ஆற்றங்கரையில் தாழைப் புதர்களுக்குள் ஒளிந்திருந்தோம். அசாதாரணமான உடலமைப்புள்ள மூலைக் காட்டு வீட்டுப் பங்கஜவல்லி அக்கா மதியம்தான் குளிக்க வருவாள். அவள் மாமியார் தூங்கும் நேரம் அதுதான். கொளுத்தும் வெயிலில் மணல் வெண்கனலாக எரிய, நீர் படிகநீலத் துல்லியத்துடன் அலையிளகிக் கொண்டிருந்தது. மீன்கள் வெள்ளி அம்புகள் போல துள்ளிப் பளீரிட்டு விழும் வட்டங்கள் விரிந்து அலையாக மாறி மணல் கரையை மோதும் மெல்லிய ஒலி, தாழை மடல்களில் காற்று சீறும் ஒலி, அப்புறம் எங்கள் மூச்சு ஒலி.

ராதாகிருஷ்ணனின் கையில் ஒரு தூண்டில் இருந்தது. அதைச் சுழற்றி வீசினான். அது மணலில் துவைத்துக் காயப் போட்ட மார்க்கச்சையில் மாட்டியது. ஏதோ அந்தரங்க அழைப்புக்குச் செவி கொண்டது போல கச்சை எழுந்து நடந்து எங்களை நோக்கி வந்தது. கையிலெடுத்த ராதாகிருஷ்ணன் பரவசமாக, 'தாஜ்மஹால் போல இல்லை?" என்று கிசுகிசுத்தான். செத்த கொக்கு போல இருப்பதாக எனக்குத் தோன்றியது என்றாலும் 'ஆமாம்' என்றேன்.

இருவரும் தேங்காய் மூடி திருடியோடும் நாய் போல குலைபதற ஓடிப் பாண்டிக் குளத்தருகே வனயட்சியின் இடிந்த கோயில் அர்த்தமண்டபத்தை அடைந்தோம். பாசிபிடித்த நீர் பெருகி புன்னைமரங்களின் அடர்ந்த நிழல் நெளிய பச்சை இருட்டு தேங்கிய ஆழத்துடன் கிடக்கும் பாண்டிக் குளத்தருகே பொதுவாக மானுட நடமாட்டம் இருக்காது. வனயட்சி வேறு உக்கிர தேவதை.

கல்மண்டபத் தரையில் மாங்கா உடைத்துத் தின்பதற்கு வாகாக உப்பு இருந்தது. பீடிக்கட்டுகள் இரண்டு... ஒரு வாழை இலையில் வெற்றிலை பாக்கு படுக்க ஒரு நாளேடு. தாயக்கட்டம் அழிந்திருந்தது. நான் தாளை விரித்து அமர்ந்தேன். ராதாகிருஷ்ணன் அதை எடுத்தான். அப்போதுதான் அந்த விசித்திரமான பார்வை உணர்வு எனக்கு ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தேன். கல்லாலான கூரைமீது புதர்ச் செடிகள் அடர்ந்த கருவறை, ஒரு தலைபோல இருந்தது. கதவில்லாத வாசல் ஒரு கரிய கண் போல.

"டேய், யாரோ பார்க்கிறார்கள்" என்றேன்.

அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. பிறகு சுதாரித்து தணிந்த குரலில் 'போடா' என்றான்.

என்னால் பார்வையுணர்வைத் தவிர்க்கவே முடியவில்லை. ''நான் வீட்டுக்குப் போகிறேன்" என்றேன்.

"டேய், நில்லுடா."

நான் கிளம்பிவிட்டிருந்தேன்.

"கோழைப் பயலே டேய்..." என்ற ராதாகிருஷ்ணனும் என் பின்னால் ஓடிவந்து கொண்டிருந்தான்.

அன்றிரவு என் கனவில் மூடிய கரிய கருவறை திறக்க, இருளில் இருள் முகமாக யட்சி புன்னகைத்தாள்.

"செவ்விலக்கியம் (Classic) கோயில் சிலை போல, முதலில் அது கல் பிறகு அழகிய சிற்பம். பிறகு பிரபஞ்ச சாரமான கடவுள் முதல் வாசிப்பில் பொதுவாக அது நம்மை சுவாரஸ்யப் படுத்துவது இல்லை. வாசித்ததுமே நம்மை ஆட்கொள்ளும் படைப்பில் செவ்வியலம்சம் குறைவு என்றே கொள்ள வேண்டும். ஏனெனில், செவ்விலக்கியம் தன் முழுமையான சமநிலையிலேயே எப்போதும் காணப்படுகிறது. அது ஓசையிடுவதில்லை. காரணம், அதன் மொழி மெளனமே. மண்ணில் ஒரு விதையை அது ஊன்றுகிறது. மழை நம்முடையது. மறுநாள் பெய்யலாம். முப்பது வருடம் கழித்தும் பெய்யலாம்." பிற்பாடு எனக்குத் தமிழ் கற்றுத் தந்த தமிழய்யா சிகாமணி சார் சொன்னபோது, நான் அந்தக் கணத்தை எண்ணிக் கொண்டேன். கல், கண் திறக்கும் கணம்.

அன்று வாசித்த கவிதை, என் மனதில் பதினான்கு வருடம் கழித்து முளைத்ததை எனது கவிதையனுபவங்களில் முதன்மையானது என்பேன். மதுரை சென்று அருண்மொழி நங்கையைச் சந்தித்துவிட்டுப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். எழுத்தாளனுக்கும் வாசகிக்கும் இடையேயான சாதாரணமான சந்திப்பு. அதிகம் பேசியது அவள் தோழிதான். ஓடும் பேருந்தின் இரு பக்கமும் கானல் பரவிய தரிசுநிலம் மெள்ள திரும்பிக் கொண்டிருந்தது. கந்தகம் கலந்த காற்று உடலை உலை மூச்சுபோல தொட்டது. தங்கள் நிழல்மீதே நின்று எரிந்து கொண்டிருந்தன. கருவேல மரங்கள் திடீரென்று தளிர்கள் நிரம்பி இலைகளே பூவாக நின்ற புங்கமரத்தைக் கண்டேன். கூடவே ஒரு ஞாபகம் வந்தது. பேசிக்கொண்டே நடக்கையில் அருண்மொழி சற்றுத்தாவி, கையில் இருந்த புத்தகத்தால் பூத்துக் குலுங்கிய கொன்றை மரக்கிளையை அடித்தாள். மஞ்சள் நிற இதழ்கள் கொட்டின. அவளுடைய தலையில் பொன்னிற இதழ் ஒன்று வெகுநேரம் இருந்தது.

மீண்டும் மீண்டும் அந்தச் சித்திரம் மனதில் எழுந்தபடியே இருந்தது. என் முகத்தில் இருந்த புன்னகையை யாரும் பார்த்துவிடலாகாது என்று ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டேன். என்னுள்ளில் பல முடிச்சுகள் அவிழ்வதைக் கண்டேன் -

நன்மை செய்யும் சலவைக்காரி
கஞ்சிப்பசையிட்டு எடுத்து
கல்லில் அடித்துப் பிழிந்து
குளிர்ந்த குளத்தில் இடுகையில்
நீரில் பிரியும் துணிபோல
அகன்ற இலைகள் கொண்ட
பகன்றையின் பெரிய மலர்
துவர்ப்பும் இனிப்பும் மிக்க
கள் போல மணக்கும்
இதுபோன்ற ஒரு மாலைப்பொழுது
அவன் பிரிந்து சென்ற
அந்த நாட்டிலும் இருக்காதா என்ன?

"எதைப் பற்றிப் பேசும்போதும் கவிதை மனதைப் பற்றியே பேசுகிறது" என்பார் தமிழய்யா. நீரில் பிரியும் துணி முறுக்குப்போல கள் மணத்துடன் கட்டவிழும் அம்மலர் எது? எந்தக் கணத்தில் தன் முடிச்சை அவிழ்க்க ஒரு மலர் தீர்மானிக்கிறது? " 

- வரவனை செந்தில் 

அடுத்த கட்டுரைக்கு