Published:Updated:

தென்கச்சியார், சரோஜ் நாராயண்சுவாமி, இசைஞானி... வானொலியின் வானவில் தருணங்கள்! #WorldRadioDay

தென்கச்சியார், சரோஜ் நாராயண்சுவாமி, இசைஞானி... வானொலியின் வானவில் தருணங்கள்! #WorldRadioDay
தென்கச்சியார், சரோஜ் நாராயண்சுவாமி, இசைஞானி... வானொலியின் வானவில் தருணங்கள்! #WorldRadioDay

'இந்திய மக்கள் அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்' என கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, மீடியா அபரிமிதமாக வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்திலும் கூட, இன்னும் 'மன் கி பாத்' உரையை வானொலியில் ஆற்றிக்கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு இந்தியா முழுக்கவும் பரவியிருக்கும் ஒரே ஊடகம்தான் வானொலி.

ஆனால் ரேடியோவைப் பயன்படுத்தாத ஒரு தலைமுறையே தற்போது உருவாகிவிட்டது. சின்ன வயதில் விடுமுறைக்கு ஊருக்குப் போகும்போது மரப்பெட்டிக்குள் பிரமாண்ட வடிவில் சிலர் வானொலியை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கலாம். அதன்பின்பு டீக்கடையிலும், பார்பர் ஷாப்பிலும் அலறும் ரேடியோவின் ஒலியைக் கேட்டிருக்கலாம். ஆபிஸ் போகும் அவசரத்தில் பக்கத்தில் நின்ற கால் டாக்ஸியில் ஒலித்த எஃப்.எம்-ல் எக்கச்சக்க விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சம் நிகழ்ச்சியையும், பாடல்களையும் கேட்டிருக்கலாம். இப்படி ஏதாவதொரு வகையில் ரேடியோ உங்களுக்கு பரிட்சயமாகி இருக்கும். இப்போது உங்கள் மொபைலில் அதிகம் பயன்படாமல் இருக்கும் FM ரேடியோ ஆப்ஷனின் முந்தைய காலம் எப்படி இருந்தது தெரியுமா?

ரேடியோ அறிமுகமான காலகட்டத்தில், 'மர்பி', 'பிலிப்ஸ்' போன்ற ப்ராண்ட்களின் பிரமாண்ட வடிவ ரேடியோக்கள் ஊருக்கு ஒருவர் வீட்டில் தான் இருக்கும். அதுவும் உடனடியாகவெல்லாம் ஆன் ஆகாது. ஸ்விட்சை தட்டிவிட்டு அதிலிருக்கும் வாக்யூம் ட்யூப்கள் சூடாகி, ரேடியோவின் இரைச்சல் கேட்கவே குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும். அதன்பின் ட்யூனரை இம்மி பிசகாமல் திருகி, வானொலியின் தொண்டை கரகரக்காமல் சேனலை மாற்றுவதே பெரும் கலையாக பார்க்கப்பட்டது. 'ரேடியோவைக் கண்டுபிடிச்சது மார்க்கோனி...ஆனா அதைக் கேட்க வச்சது நம்ம இசைஞானி'-ன்னு குக்கூ படத்தில் ஒரு வசனம் வருமே? அதுபோல வானொலி என்பது வெறும் தொழில்நுட்பக் கருவியாக மட்டுமே இல்லாமல், மக்களின் உணர்வோடும் ஒன்றிப்போக காரணமாக இருந்தனர் சிலர். அதிலும் 'இன்று ஒரு தகவல்' என உங்கள் காதைக் கட்டிப்போட்ட தென்கச்சி சுவாமிநாதனின் குரல், இன்னும் அவரின் ரசிகர்களது காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் காலையில் சொல்லும் நீதிக்கதைகளும்,  'ஆகாசவானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி' என்ற கரகரப்பான குரலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவையும் 90-களுக்கு முன்பு பிறந்து வானொலி கேட்டவர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருக்கும். எப்.எம். வருகைக்குப் பின்பு 24 மணி நேரமும் வானொலி கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு இளையராஜாவின் இசை ஆறுதலோடு துணைக்கு வந்தது.

கம்பியில்லாத் தந்தி முறை தான் வானொலிக்கு அடிப்படை. அதை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் இத்தாலியைச் சேர்ந்த 'வானொலியின் தந்தை' என்றழைக்கப்படுகிற மார்க்கோனி. அதுவரை கம்பிகள் மூலமாக மின்காந்த அலைகளின் வழியாகதான் தந்தி அனுப்பப்பட்டு வந்தது. தான் உருவாக்கிய கம்பியில்லா தந்தி முறையைப் பற்றி இத்தாலியின் தபால்-தந்தி அமைச்சருக்கு மார்க்கோனி ஒரு கடிதம் எழுதினார். அதைப் படித்துப்பார்த்த அமைச்சர் என்ன செய்தார் தெரியுமா? மார்க்கோனி அனுப்பிய கடிதத்திற்கு 'பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பவேண்டியவன்' எனப் பதில் அனுப்பினார் இத்தாலி அமைச்சர். மார்க்கோனி ஓயவில்லை. இங்கிலாந்துக்குச் சென்று தனது ஆய்வுகளைத் தொடர்ந்து, தான் கண்டறிந்த கம்பியில்லா தந்தி முறையை அடிப்படையாகக் கொண்டு குரலையும் அனுப்ப முடியும் என்பதை நிரூபித்தார். வானொலி உருவானது. தனது படைப்புகளுக்காக நோபல் பரிசும் பெற்றார். உலகப் போரின்போது டெலிகிராம் மிக முக்கியமான தொடர்பு சாதனமாகப் பயன்பட்டது. இன்றும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் தொடர்பு சாதனமாக 'ஹாம்' ரேடியோ பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்தும் இன்றைய நம் தலைமுறை மார்க்கோனிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். காற்றின் மூலமாகப் பாயும் கம்பியில்லாத் தந்தி முறை தான் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொடங்கி இன்று நாம் கையடக்க மொபைல் மூலமாகவே இணையத்தைப் பயன்படுத்துவது வரைக்கும் அத்தனைக்கும் அடிப்படை.

இன்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உலக வானொலி தினம் குறித்து வாழ்த்துகள் தெரிவித்ததோடு, 'ரேடியோ என்பது நேரடியாக தொடர்பில் இருக்கவும், கற்றுக்கொள்ளவும் ஓர் அற்புதமான வழி. எனது 'மன் கி பாத்' அனுபவம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுடன் என்னை இணைத்துக்கொள்ள உதவியது' எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்), 2012-ம் ஆண்டிலிருந்து பிப்ரவரி மாதம் 13-ம் தேதியை உலக ரேடியோ தினமாகக் கடைப்பிடிக்கிறது. மரியாதை நிமித்தமாகவாவது இன்று ஒரு நாள் மட்டும் கொஞ்சம் ரேடியாவை ட்யூன் செய்யலாமே தோழர்களே!

- கருப்பு