Published:Updated:

''மௌனமே மகத்தான மருத்துவம்!''

நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்

''மௌனமே மகத்தான மருத்துவம்!''


வாசம் வீசும் துளசி ஐயா வாண்டையார்

##~##
மைதிக்கும் ஆளுமைக்கும் ஒருசேர்ந்த உதாரணம் தஞ்சாவூர் துளசி ஐயா வாண்டையார். 40 வருடங்களுக்கும் மேலாக கீதை வகுப்புகள் நடத்தி வருபவர். பூமி தான இயக்கத் தலைவர் ஆச்சார்ய வினோபா பாவே அவர்களுக்கு நிலங்களை அள்ளிக்கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர். சோழ மண்டலத்தின் கல்வித் தந்தையாய் விளங்கும் துளசி ஐயா வாண்டையார் 80 வயதைக் கடந்தும் உடலை இளமையாக வைத்திருப்பவர். ஆன்மிகத்தின் மீதான பற்றுதலும், இயற்கையின் மீதான பேரன்பும் நற்பண்புகளுமே அவருடைய இளமைக்குக் காரணம். வாழ்வியல் நெறிகள் குறித்து அவர் எழுதி இருக்கும் ஏராளமான புத்தகங்களே அதற்கு சாட்சி.

''ஆன்மிகமே ஆரோக்கியம்... ஆரோக்கியமே ஆன்மிகம்!'' என சொற்பொழிவுகளில் வலியுறுத்தும் துளசி ஐயா வாண்டையார் வாழ்வியல் குறித்து இங்கே பேசுகிறார்.

''பிறருக்கு உதாரணமாக வாழ்தல்தான் வாழ்க்கை. நம் வாழ்க்கை அடுத்தவர்களுக்கான வழிகாட்டி. பொருளும் செல்வமும் சேர்ப்பது மாத்திரமே உயர்வுக்கு வழிவகுத்துவிடாது. குணத்தில் நேர்மையும், குன்றாத மாண்புமே ஒரு மனிதனை உயர்ந்தவனாக மாற்றும். பிறரையும் திருத்தி, நாமும் துல்லியமாக வாழ்வதே பிறவிப் பயனின் சுகம்.

''மௌனமே மகத்தான மருத்துவம்!''

நம் வாழ்வில் தவறியும் தவறு நிகழ்ந்துவிடாதபடி நம்மை ஆன்மிகம்தான் வழிநடத்துகிறது. ஸ்ரீகாயத்ரி மந்திரத்தை காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஓதிப் பாருங்கள். என்றைக்கும் இல்லாத அமைதியும் ஆத்மார்த்த நிம்மதியும் உங்களுக்குக் கிட்டும். ஸ்ரீகாயத்ரியை ஒவ்வொரு வேளையும் 108 முறை அல்லது 11 முறை ஜெபிப்பது சிறப்பு. 'மந்திரங்களிலெல்லாம் காயத்ரியாக நானிருக்கிறேன்’ என்று ஸ்ரீ கண்ணன் கீதையில் திட்பமாகக் கூறியிருப்பது காயத்ரிக்கு இறைவனே அளித்த சான்று. அதையே ஆன்றோர் வாக்கும் 'ந காயத்ர்யா; பரோமந்த்ர’ எனக் கூறிக் கண்ணனின் அருள்வாக்கை ஆமோதிக்கிறது!'' எனச் சொல்லும் துளசி ஐயா ஆன்மிகத்தின் வழி நடக்கும் நெறிமுறைகள் குறித்து தொடர்கிறார்.

''அன்றாடப் பணிகளைத் தொடங்கும் முன்னர் இறைவனை மனக்கண்ணில் நிறுத்துங்கள். உங்களின் விருப்ப தெய்வத்தைச் சிந்தித்து வணங்கி தியானம் செய்யுங்கள். நீராடுவதற்கு முன், 'இந்த நீரால் என் உடல் தூய்மையாவதுபோல், என் உள்ளப் பாவமும் கரைந்துபோக உன்னைப் பிரார்த்திக்கிறேன்!’ எனச் சொல்லுங்கள். சாப்பிட அமரும்போது, 'சர்வேஸ்வரா! உன் கருணையால் இந்த உணவு எனக்குக் கிடைத்தது. உன் திருநாமத்தைச் சொல்லி உண்ணுகிற எனக்கு நல்லபடி செரிமானமாகி உடலில் ஒட்ட உன்னைப் பிரார்த்திக்கிறேன்!’ என உளமார ஓதிச் சாப்பிடுங்கள்.

'இப்படி எல்லாம் செய்யாமலே எனக்கு நல்லபடி செரிமானம் ஆகிறதே’ என சிலர் கேட்கலாம். எதுவும் நமக்குச் சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. நாம் சாப்பிடும் உணவை உற்பத்தி செய்ய வியர்வையோடு பல விவசாயிகள் போராடி இருக்கிறார்கள். இயற்கை அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. அதற்கெல்லாம் நன்றி செய்யும் விதமாகத்தான் சாப்பிடும் முன் நாம் இறைவனை நினைக்கிறோம். இரவு உறங்கச் செல்லும் முன், 'நான் புரிந்த குற்றங்களை எல்லாம் மன்னித்து, செய்த தவற்றை மீண்டும் செய்யாமல் என்னைக் காத்து, விரக்தியான கனவுகள் காணாமல் திடமான தேகத்தோடு எழுந்திட அருள வேண்டுகிறேன் இறைவா!’ எனப் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த உறக்கம் மிகுந்த நிம்மதியாக இருக்கும்.

''மௌனமே மகத்தான மருத்துவம்!''
''மௌனமே மகத்தான மருத்துவம்!''

வாரத்துக்கு ஒரு நாள் இரண்டு அல்லது ஆறு மணி நேரம் மௌனமாக இருக்கப் பழகுங்கள். ஆத்மாவுக்கு அமைதியும் உணர்வுக்கு ஊக்கமும் கொடுக்கும் மகத்தான மருத்துவம் மௌனம்!'' எனச் சொல்லும் துளசி ஐயா வாண்டையார், மகாத்மா காந்திஇறந்த நாளில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மௌன விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார். 17 வயதில் தொடங்கிய விரதம் இன்றைக்கும் ஒவ்வொரு வெள்ளியும் தொடர்கிறது.

''நாள் முழுவதும் நம் உடலை வேலை வாங்குகிறோம். நம் உடல் எப்படி எல்லாம் சிரமப்படுகிறது என்பதை எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? பெட்ரோலை நிரப்பினால் ஓடுகிற வாகனம் அல்ல நாம். உடற்பயிற்சி செய்கிறபோது உடல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின் அவசியத்தை என்னதான் வலியுறுத்தினாலும், 'அதற்கெல்லாம் நேரம் ஏதுப்பா?’ என சலிப்பு காட்டுகிறார்கள் பலரும். 24 மணி நேரமும் நமக்காகச் சுழலும் உடலுக்கு 25 நிமிடங்களை ஒதுக்கக்கூட நாம் முயற்சிப்பது இல்லை. ஆசனப் பயிற்சிகளைப் பக்தியோடு செய்தால் எத்தகைய வியாதிகளும் விலகி ஓடும். வயதில் வளையாதது வயோதிகத்தில் வளையுமா என்ன?

கதிரவன் உதிக்கும் முன் எழுந்து காலைக் கடன்களை முடித்த பிறகு 25 நிமிடங்கள் தேக நலத்துக்கு ஆசனப் பயிற்சி செய்து அதன் பிறகு அந்த நாளைத் துவங்கிப் பாருங்கள். மாலை ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள். அன்பு, கருணை, சத்தியம் பிரார்த்தனையின் ரூபமாக இருக்கட்டும்!'' - வாழ்வியல் பயிற்சிகளை விளக்கும் வாண்டையார் நிறைவாக இப்படிச்   சொல்கிறார்...

'' 'மூல மனிதனுக்கு நீ ஆதி; இயங்கும் எல்லா அண்ட சராசரங்களுக்கும் நீயே ஆதாரம்; அறிந்தவனும் நீ; யாவையும் விளக்கமாய்த் தெரிவிப்பவனும் நீ; அளக்க இயலா உன் அற்புத சக்தியால் உலகைக் காக்கின்றாய்!’ என்கிறது கீதை. அது உணர்த்தும் பாதையின் வழியே பயணித்தலே வாழ்வியலுக்கு அழகு!''

- இரா.சரவணன்
படங்கள்: கே.குணசீலன்

அடுத்த கட்டுரைக்கு