Published:Updated:

"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

Published:Updated:
"`குருதிப்புனல்’ கதையைப் படமாக்குவதே கமலின் கனவு...!" - கவிஞர் புவியரசு #VikatanExclusive

கவிதைகள்,மொழிபெயர்ப்பு என  நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதிக் குவித்தவர்... சாகித்ய அகாடமி விருது பெற்றவர்...  நவீன நாடகங்கள், திரைப்படங்கள்,  மேடைப் பேச்சு  என பல தளங்களிலும் தீவிரமாகப் பங்காற்றுபவர். எண்பத்தைந்து வயதாகிறது. தீவிரம் குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார் கவிஞர் புவியரசு. புத்தக வெளியீடு, வாசிப்பு, சந்திப்புகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் புவியரசு உடன் ஒரு தேநீர் சந்திப்பு. 

இன்று எல்லா மட்டத்திலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. அலைபேசி, இணையம் என எங்கும் ஆங்கிலமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

“பெரிய ஆபத்து.  ட்ரினிடாட் என்று ஒரு தீவு இருக்கிறது. அங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆறுமுகம் என்ற பெயர் இருக்கும், தமிழ்ச் சடங்குகளும் செய்வார்கள். ஆனால் தமிழ் தெரியாது. உண்மையில் அவர்கள், அங்கு குடியேறியவர்கள் அல்ல. அகதிகளாகச் சென்றவர்கள். அங்கு அவர்கள் வேறொரு மொழியின்  கீழ் அடிமைக்குள்ளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழும்போது தான்  தாய்மொழி  மீது அவர்களுக்கு உணர்வெழுகிறது. இங்குள்ளவர்கள் உணர்வற்றவர்களாகி விட்டார்கள். இந்த மாதிரி விபத்து வேறெந்த மொழிகளுக்கு நிகழ்ந்துள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அம்மொழி என்ன ஆனது என்றும் தெரிந்து கொள்ளவேண்டும்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளம் தலைமுறை வாசிப்பைக் கைவிட்டு இணைய ஊடகங்களின் பக்கம் திரும்பியிருப்பதை கவனிக்கிறீர்களா?"

“வாசிப்பு குறைகிறது என்பது உண்மைதான். ஒரு உதாரணம் சொல்கிறேன். அப்துல்கலாமின் `அக்னிச் சிறகுகள்' புத்தகத்தை நானும் இன்னொருவரும் சேர்ந்து தமிழில் மொழி பெயர்த்தோம். அதிலிருக்கும் கவிதைகளை நான் தமிழாக்கம் செய்தேன். இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றன. ஒரு புத்தகசந்தையின் வெளியே நின்று கொண்டிருந்த நண்பர் ஒருவர் `என்னங்க. அப்துல்கலாம் புக் வாங்கலயா?' என்றார் . நான் `வாங்க வேண்டும்' என்று தலையசைத்தேன். `என்னங்க நீங்க...முக்கியமான புத்தகம். சீக்கிரம் வாங்குங்க' என்றார். உள்ளே போய்விட்டு திரும்பிய போது அதே நண்பர், `அப்துல்கலாம் புக் எங்கே?' என்று மீண்டும் கேட்க,  `நீங்க வாங்கியாச்சா?' என்றேன். `ம்ம்.. ஆறுமாதம் முன்னமே வாங்கிட்டேன்ல' என்றார். அப்போது புரிந்தது. வாங்கியவர் அதைத் திறக்கக்கூட இல்லை. முதல் பக்கமே என் பெயர் போட்டிருக்கிறது. அவருக்கு அது தெரியவில்லை. இது எனக்கு பெரிய  கர்வபங்கமாக இருந்தது. புத்தகங்களை  வாங்கி உள்ளே பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். இது அவர்களின் பிள்ளைகளையும் பாதிக்கிறது."

ஓஷோவின் புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இன்றைய சூழலில், இளைஞர்கள் ஓஷோவைத் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் என்ன?" 

“நான் ஓஷோவின் 33 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். அவரின் மொழி அவ்வளவு எளிமையானது. நம்மை விட ஆங்கில அறிவு குறைந்தவர்களும்  புரிந்து கொள்ளும் வகையில் பேசக்கூடியவர். அவர் காலம் வரை  இருந்த, கெட்டிதட்டிப் போன எல்லாவற்றையும் தன்னுடைய ஞானம் என்ற சம்மட்டியால் அடித்து தூள் தூளாக்கி விட்டார். ஆரம்பகாலத்தில், ஓஷோவின் தத்துவங்கள் கடினமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நானே மேடைகளில் திட்டிப் பேசியிருக்கிறேன். மடத்தில் படித்தமையால், இந்திய ஞானங்களை உள்வாங்கியிருந்த நான், அவருக்கு எதிரான தகவல்களையே படித்து கோபம் கொண்டிருந்தேன். ஒருநாள் சென்னை ரயில் பயணத்தின் போது `மரபின் மைந்தன்' முத்தையாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் `ஏன் ஓஷோவைத் திட்டிப் பேசுகிறீர்கள்?' என்று கேட்டார். எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல்...

`செக்ஸ் சாமியாரை திட்டாமல் என்ன செய்வது?'
`படிச்சீங்களா?'
`இல்லை. படிக்கலைங்க'
`படிச்சுட்டுதான சொல்லணும்'
`ஆமா நியாயம்தான். படிச்சுட்டுதான்  சொல்லணும்'
`சேலம் வந்ததும் நான் இறங்கிடுவேன். அதுவரை நான் சொல்றதைக் கேளுங்க...'

`சரி' 

முத்தையாவின் கொள்கைகளில் அபிப்ராயம் இல்லாதவனான நான் `வானத்திற்கும் வாசல் திறக்கும்' என்று ஆரம்பித்த அவரின் வார்த்தைகளில் மூழ்கிப் போனேன். `orient paper bags' என்ற பெயரில் வெறும் பத்து ரூபாய்க்கு குப்பை அட்டைக் காகிதத்தில் ஓஷோ கிடைப்பதாய் அவர்  சொல்ல, வாங்கிப் படித்தேன். இருபது பக்கங்களில் `என்ன செய்திருக்கிறார் இந்த மனிதன்!' என்று வியந்து போனேன். அவர் கை வைத்து எழுதியதில்லை,பேசுவதோடு சரி. மிகப் பெரும் தைரியசாலி. அமெரிக்காவால் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டவர். கிறித்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களையும் கடுமையாக எதிர்க்கிறவராக இருந்தபோதும், மத நம்பிக்கையுடைவர்களையும் விட அதிகமாக இயேசுவைப் படித்திருக்கிறார்... விமர்சிக்கிறார்.

கலீல்ஜிப்ரானின் `profit' எனும் கையளவு புத்தகத்தைப் பற்றி நான்கு பாகம் வருமளவு பேசியிருக்கிறார். தன்னை அரசியலுக்கு அழைத்த நேருவையும், இந்திரா காந்தியையும் விமர்சனம் செய்திருக்கிறார். இன்றைய ஆசிரியர்களுக்கே ஓஷோவைத் தெரியவில்லை. அவர்கள் எப்படி அடுத்த தலைமுறைக்கு அவரைக் கொண்டு செல்ல முடியும்? நம்மை இறுக்கங்களிலிருந்தும் முடிச்சுகளிலிருந்தும்  காப்பாற்றும் வழிமுறைகளையெல்லாம் ஓஷோ சொல்லியிருக்கிறார். ஓஷோவைப் படித்தவர்களுக்குத் தரிசனம் கிடைக்கிறது."

விருமாண்டி, ஹே ராம், ஹவுஸ்ஃபுல், மருதநாயகம் என நிறைய திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். நல்ல திரைமொழி எப்படி இருக்கவேண்டும்?" 

“ஒரு  படம் முழுவதும் நாம் உபதேசம் செய்ய வேண்டும் என்பது இல்லை. ஒரு அயல்மொழி திரைப்படம்... எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அம்மாவிடம் வருத்தப்பட்டு, மகனும், அவன் அப்பாவும் ஒரு  பயணம் மேற்கொள்கின்றனர். படமே பயணத்தின் அடிப்படையில் நகர்கிறது. அமெரிக்கா எவ்வளவு அழகானது என்பதைக் காட்டுவதற்கு படம் எடுத்தாற்போல் கார், படகு, ரயில் என அனைத்திலும் பயணிக்கிறார்கள். கடைசியாய் ஒரு மர வீடு, ஊசியிலைக் காடுகளுக்கிடையே அமைந்துள்ள ஹோட்டல் அது. சுற்றி பெரிய காடு, தொலைவில் ஒரு ஏரி.

`அப்பா.. ரொம்ப அழகா இருக்குல்ல'
`ஆமாமா..நல்லாயிருக்கு'
`எங்கப்பா எருமையெல்லாம் காட்டுறேன்னு சொன்ன! ஒண்ணையுமே காட்டலையே'

அப்போது  அங்கு ஒரு நீக்ரோ பணிப்பெண் வருகிறாள். அவள் நிதானமாய் சொல்கிறாள். `அன்பு மகனே... எல்லா எருமைகளையும் வெள்ளைக்காரன் கொன்றுவிட்டான்'

செவ்விந்தியர்கள், அவர்களது கால்நடைகள், பண்பாடு என எல்லாவற்றையும் வெள்ளைக்காரன் அழித்த வரலாற்றை அப்பெண் ஒரு வரியில் சொல்கிறாள். அப்படித்தான் தேவர்மகனில் சொல்லும் வசனத்தையும் கருதுகிறேன்.

தேவர்மகன், மருதநாயகம் எல்லாம் தாண்டி, கமல் ஒரு திரைப்படத்தை எடுக்க விரும்பினார். அது இந்திரா பார்த்தசாரதியின் `குருதிப்புனல்'. தலைப்பை மட்டும் பயன்படுத்திவிட்டார். இருந்தாலும் அதைத் திரைப்படமாக எடுக்கும் எண்ணமும், திண்ணமாய் அவரில் இருக்கிறது. சமீபத்தில் கூட அதைப்பற்றி பேசினார்.`பத்தே நாளில் எடுத்துவிடலாம் ..வாங்க ' என்றார். எடுக்க முடியவில்லை.

`ஹே ராம்’ படத்தில் எந்ததெந்தக் கதாப்பாத்திரங்கள் எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்களே நடித்திருந்தார்கள். காந்திக்கு சாஹிபை போடலாமென ஆலோசனை கூறினேன். அதன்பின்பே நஷ்ருதீன் ஷா படத்திற்குள் வந்தார். திரைக்கதை ஆங்கிலத்திலேயே எழுதியிருந்தார் கமல். அதனை தமிழில் மொழிபெயர்த்தேன். ‛என் படத்தில் சப்டைட்டில் போடமாட்டேன்’ என்று கமல் பிடிவாதமாய் இருந்தார். `ஏன்’ என்று கேட்டேன். `இது தமிழ் படமல்ல. இந்தியப் படமென இருக்கட்டும்' என்று திடமாகக் கூறினார்." 

நவீன நாடக உலகிலும் உங்களது பங்களிப்பு இருந்திருக்கிறது. கோவையில் முதல் நவீன நாடகத்தை நீங்கள் தான் நிகழ்த்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்."

“மரபு நாடகங்களையும் நிறைய செய்திருக்கிறோம். `நாடக கலாரத்னா விருது’ கொடுத்து அதிலிருந்து கழட்டிவிடவும் பார்த்தார்கள். குழுவினருடன் பம்பாய் சென்றிருந்தோம். நாஞ்சில் நாடன் அழைத்துச் சென்றார். இயக்குநர் பா.ஞானராஜசேகரன் நட்பும் அதில் இருந்தது. பெரிய நவீன நாடக நிகழ்வு அது. ஓம்பூரி போன்ற பிரபல நடிகர்கள் கூட அங்கு நாடகத்தில் நடிக்கிறார்கள். அந்த நாடகத்தில் ஓம்பூரி கையில்  சிகரெட் பற்றவைக்கிறார். சாம்பல் நாஞ்சில் நாடன் மேல் விழுகிறது. அவ்வளவு நெருக்கமாக பார்வையாளர்களை அடைகிற நாடகமுறையை கோவையிலும் கொண்டுவர நினைத்தோம்.
பாதல்சர்காரிடம் நேரடியாக பயிற்சி பெற்ற ரவிச்சந்திரன் அரவிந்தன் என்ற நாடகக்கலைஞரின் உதவி பெரியதாக இருந்தது. அவர்கள்தான் அதற்கான பணிகளை முன்னெடுத்துச் சென்றார்கள். நாங்கள் கல்லுரிகளுக்குச் சென்றோம். மாணவ மாணவிகளின் நடிப்பும், கற்பனாசக்தியும் அவ்வளவு அபாரமாக இருக்கும். நாடகங்கள் வளரவேண்டுமென்றால் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும், சக்தியும் போதும். மிகச்சிறந்த இடத்தை நம்மால் அடையமுடியும்."

எழுபது ஆண்டு இலக்கிய வாழ்வு நிறைவாக இருக்கிறதா?" 

இலக்கிய வாழ்வு வாழ்ந்ததில் நிறைவு இருக்கிறது. மகிழ்ச்சி இருக்கிறது. சின்ன மனத்தாங்கல்களும் இருக்கின்றன... அதில் முக்கியமானது, புறக்கணிக்கப்படுதல்.
எனக்கு மட்டுமல்ல. என்னைப் போன்ற பலருக்கும் அது இருக்கிறது. பத்திரிகைகளும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றன. அது ஒரு சின்ன மனத்தாங்கல்தான். இனி அவர்கள் கண்டுகொண்டு என்ன ஆகப்போகிறது! வயதான காலத்தில் இந்த புகழ் மீதெல்லாம் ஆசை போய்விட்டது. பாராட்டு விழாக்களால் ஒரு பயனும் இல்லை.
படைப்பாளியை மாவட்ட வாரியாக பிரிப்பதும், மார்க்ஸியவாதியா என்று பார்ப்பதும் கூட இங்கே  நிகழ்கிறது. நான் மார்க்ஸியவாதிதான். என் படைப்பிற்கு கொள்கையாக மார்க்ஸியம் இருக்கிறதே தவிர, என் படைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியது இல்லை. என்னுடைய பார்வைக்கு வழிகாட்டியாக, மார்க்ஸியம் இருக்கிறது. இதனை அரசியலாகவும், கட்சியாகவும் பார்ப்பது தவறு.

ஜீ.கார்த்திகேயன்

(மாணவப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism