Published:Updated:

கடைசிப் பெஞ்சுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கே..!

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடைசிப் பெஞ்சுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கே..!
கடைசிப் பெஞ்சுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கே..!

கடைசிப் பெஞ்சுக்கு பின்னாடி இவ்ளோ கதை இருக்கே..!

நீங்க ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது எப்போதுமே கடைசி பெஞ்சுலதான் உக்காருவீங்களா பாஸ்? அப்போ கண்டிப்பா இதெல்லாம் பண்ணியிருப்பீங்க!

யார் கெத்து? :

பொதுவாக இந்த ஆசை எல்லாப் பசங்களுக்கும் இருக்கும். ஆனா, அதைப் பண்றதுக்கு சில நபர்களால் மட்டும்தான் முடியும். கடைசி பெஞ்சில உட்கார்றதுன்னா சும்மாவா?! புதுசா ஸ்கூல்ல சேர்ந்தாலோ காலேஜில் சேர்ந்தாலோ சேர்ந்த முதல் நாளே `யாரு?... எவரு?' என்று தெரியாமலே இதுக்குத் தான் முதல் சண்டையே வந்திருக்கும். கடைசி பெஞ்சில் யார் உட்கார்ந்தாலும் ஒரு கெத்து தான்.  பரம்பரை பரம்பரையாக  அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கடைசி பெஞ்சில் உட்கார முடியும். தமிழ் சினிமா வேறு லாஸ்ட் பெஞ்ச் பசங்கதான் காதலில் கில்லினு ஒரு இமேஜை உருவாக்கி விட்ருக்கு. காரணம் பொண்ணுங்க பார்வையில பசங்களைப் பொறுத்த வரையில் முதல் பெஞ்சில் உட்கார்ந்தால் சாம்பார்... கடைசி பெஞ்சில் உட்கார்ந்தால் கெத்து என்பது தான்! 

பங்க் பாய்ஸ் :

ஊருக்குள்ள எங்க விஷேசம் நடந்தாலும் அங்கே யூனிஃபார்ம் போட்டோ, கேங்கா பசங்களைப் பார்த்தாலோ அது கண்டிப்பா நம்ம கடைசி பெஞ்ச் பாய்ஸா தான் இருக்கும். அதே மாதிரி தியேட்டர்களில் முதல் நாள் முதல் ஷோ பார்க்கவில்லை என்றால் பெரிய கௌரவக் குறைச்சல் ஏற்பட்டுவிடும் என்று தான் நினைப்பார்கள். படம் ஹிட் அடித்து வசூல் அள்ளியது என்றால் அதில் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸின் பங்கு பெரிதாகவே இருக்கும். ஏன்? எதுக்கு? என்று கேள்வி கேட்காமல் க்ளாஸை கட்டடித்து முதல் ஆளா நிக்கிறது யாரு? நம்ம கடைசி பெஞ்ச் பசங்க தான். கூடப் படிக்கிற பையன் வீட்டில் ஏதாவது விஷேசம்னு வந்துட்டாப் போதும் முதல் ஆளாக விஷேச வீட்டில் இருக்க அம்புட்டு வேலையையும் இழுத்து போட்டு செய்றது நம்ம பயலுகளாகத் தான் இருக்கும். சம்பந்தப்பட்ட ஆளே அந்த விஷேசத்திற்குக் கூப்பிடவில்லையென்றாலும் கூட..!

சிறந்த எண்டர்டெய்னர் :

க்ளாஸில் போர் அடிக்க ஆரம்பித்தால் வெச்சு டைம்பாஸ் பண்ணுவது நம்ம பசங்களைத்தான்! டீச்சர் கேட்குற கேள்விக்கு நல்லா படிக்கிற பையன்கிட்ட பதில் கேட்டாலே அவன் அழகா பதில் சொல்லுவான். ஆனால் டீச்சர்கள் செய்ய மாட்டார்கள். கேள்விக்கான பதில் இவனுக்கு உறுதியாக தெரியாது என்று தெரிந்தபின்பும் எழுப்பி கேள்வி கேட்டு கொடுமை செய்வது நம்ம கடைசி பெஞ்ச் பசங்களைத்தான் இருக்கும். பதட்டம் குறைந்து க்ளாஸே சிரித்து மகிழும்! பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் வாயிலிருந்து பதில் வராதே என்றபடி நின்றுகொண்டே இருப்பதற்கெல்லாம் ஸ்பெஷல் தைரியம் வேண்டும். நம்மப் பசங்க தேக்குடா... முடியுமா..?

ஆல் இன் ஆல் அழகுராஜா :

க்ளாஸில் என்ன நடந்தாலும் முதல்ல நம்ம பசங்களுக்குத் தான் தெரிய வரும். `யார் யாரை லவ் பண்றாங்க?', `ஜோடியாக யார் யாரெல்லாம் க்ளாஸில் மிஸ் ஆவது?' போன்ற அனைத்து விஷயங்களும் தெரிந்த ஒரே ஆள் என்றால் நம்மப் பசங்க தான். ஏனென்றால் ஒட்டுமொத்த க்ளாஸுமே இவன் கண்காணிப்பில்தான் இருக்கும். முதல் பெஞ்சில் இருப்பவனுக்குக் கடைசி பெஞ்சில் என்ன நடக்கிறது என்று தெரியணும்னா 180 டிகிரிக்குத் திரும்பித் தான் பார்க்கணும். ஆனால் நம்ம பசங்களுக்கு அப்படி இல்லை. சிங்கிளாவே கண்ணை உருட்டி ஒட்டுமொத்த வகுப்பையுமே ஸ்கேனிங் செய்து வைத்திருப்பார்கள்.

கருப்பு ஆடு :

ஸ்கூலிலும் சரி... காலேஜிலும் சரி, சின்னச் சின்ன சேட்டைகள் நடப்பது வழக்கம் தான். ஒரு சில சூழ்நிலைகளில் யார் செய்தார் என்பது தெரியாமலேயே போய்விடும். அப்படிப்பட்ட ரணகளப் பொழுதுகளில் சி.பி.சி.ஐ.டி வந்தால் கூட கண்டுபிடிக்க முடியாத பல பிரச்னைகளை மிக ஈஸியான முறையில் கண்டுபிடிப்பது நம்ம கடைசிப் பெஞ்ச் பசங்க தான். அதைத் தாண்டி சொல்ல வேண்டுமென்றால் முதல் பெஞ்ச் பசங்க செய்த சில பெட்டி கேஸ்களுக்கெல்லாம் பாவம் என்று நினைத்து நம்ம பசங்க பொறுப்பேத்துக்குவாங்க. தட் அந்த வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரே மொமெண்ட்!   

கொலப் பசி :

சாப்பாட்டு இடைவேளையில் சாப்பிடாமல் டீச்சர் க்ளாஸ் எடுக்கும் பொழுது சாப்பிடுவதே ஒரு கெத்து தான் மக்களே. கெத்துனு சொல்றதைவிட அதுக்கு ஒரு தனி திறமையே வேணும். டீச்சர் போர்டு பக்கம் ஒரு மைக்ரோ செகண்ட் திரும்பினால் போதும். ஒரு சட்டி சோறு வாய்க்குள்ளே போயிடும். அப்படி நம்மாளுங்க சாப்பிடுற சாப்பாடு அவன் கொண்டு வந்தததா இருக்க வாய்ப்பு ரொம்பவே குறைவு. ஒண்ணு, முன்னாடி பெஞ்ச்காரனுடையதா இருக்கும்... இல்லைனா சைடு பெஞ்ச்காரனுடையதா இருக்கும். இன்டர்வல் வரும்போது தான் தெரியும்... அது எந்த பெஞ்ச்காரனோடதுன்னு. இப்போ நான் கொலப் பசில இருக்கேன் மொமெண்ட்.

- தார்மிக் லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு