Published:Updated:

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால் மற்றும் மக்களுக்கு, மிஸ்டர் K பரிந்துரைக்கும் 11 திருக்குறள்கள்! #MorningMotivation

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால் மற்றும் மக்களுக்கு, மிஸ்டர் K பரிந்துரைக்கும் 11 திருக்குறள்கள்! #MorningMotivation
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால் மற்றும் மக்களுக்கு, மிஸ்டர் K பரிந்துரைக்கும் 11 திருக்குறள்கள்! #MorningMotivation

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால் மற்றும் மக்களுக்கு, மிஸ்டர் K பரிந்துரைக்கும் 11 திருக்குறள்கள்! #MorningMotivation

'ஒரு தர்பூசணிக் கதை சொல்றேன் கேளு’ என்று ஆரம்பித்தான் மிஸ்டர் K. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளால் ஒரு மாதிரி டென்ஷனாகவே இருந்தான். ஜெயலலிதா, ஓ,பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி என்று பேசிக்கொண்டிருந்தபோதுதான் அந்தக் கதையை ஆரம்பித்தான். 

'ஒரு கிராமத்துல வருஷா வருஷம் தர்பூசணி சாப்பிடுற போட்டி நடக்கும். அந்தக் கிராமத்துல பெரிய தர்பூசணித் தோட்டம் வெச்சிருக்கிற ஒரு விவசாயி, ரொம்ப சிரத்தையா அதை நடத்துவாரு. நம்மாளும் அதுல கலந்துப்பான். சிவப்பா, இனிப்பா, பெரிய பெரிய தர்பூசணிகள் சாப்பிடக் கிடைக்கும். ஒரே விதி, அதில் உள்ள விதைகளைப் பக்கத்துல இருக்கிற கிண்ணத்துல போட்டுடணும். குறிப்பிட்ட நேரத்துல அதிகமா சாப்பிடுறவங்களுக்கு பரிசு. தோற்றவங்களுக்கு, சுவையான தர்பூசணி சாப்பிட்ட மகிழ்ச்சி. அவ்வளவுதான். 

தர்பூசணிப் பிரியனான நம்ம பையன், போட்டியில விடாம கலந்துப்பான்.  கொஞ்சம் பெரியவனானதும் மேற்படிப்புக்கு வெளியூர் போயிடுறான். 10 வருஷம் கழிச்சு திரும்ப வர்றான். ஆர்வமா, போட்டில கலந்துக்கப்போனா, அவனுக்கு பெரிய ஏமாற்றம். தர்பூசணிப் பழங்கள் ரொம்பச் சின்ன சைஸ்ல இருக்கு. பெரிசா சுவையும் இல்ல. எப்படி வெறும் 10 வருஷத்துல இப்படி மாறிச்சினு யோசிக்கிறான். ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிடுறான்.

விஷயம் என்னன்னா... அந்த விவசாயி இறந்துட்டார். அவர் மகன்தான் 10 வருஷமா போட்டி நடத்துறது. ‘அப்பா பண்ணியது முட்டாள்தனம்.  எவ்ளோ தர்பூசணி ஓசில போகுது!  பெரிய பெரிய தர்பூசணிகளை விற்பனைக்கு அனுப்பினா நல்ல காசு’ன்னு அதையெல்லாம் விற்பனைக்கு அனுப்பி, சின்னச்சின்ன தர்பூசணிகளைப் போட்டிக்கு வெச்சான். அதனால, சின்னச்சின்ன பழங்களை விளைவிக்கக்கூடிய விதைகள்தான் அவனுக்கு மிஞ்சியது. பெரிய பழங்கள் எல்லாம் வெளியூர்களுக்கு விற்பனைக்குப் போயாச்சே. அப்படியே வருஷா வருஷம் சைஸும் குறைஞ்சு, சுவையும் குறைஞ்சு இப்ப இதத்தான் சாப்பிட்டாகணும்னு நிலை. அவங்கப்பா போட்டி வெச்சு மக்களையும் சந்தோஷப்படுத்தினார். தானும் பலன் அடைஞ்சார். அந்த சிஸ்டம் என்னன்னு தெரிஞ்சுக்காம மாத்தினதால, இப்ப யாருக்கும் உபயோகமில்லாத சுவையில்லாத தர்பூசணிகள்தான் மிச்சம்!’

மிஸ்டர் K பூடகமாகச் சொல்லவந்த விஷயம் புரிந்தது.  ’நல்ல கதைதான். எல்லாருக்குமா வேற எதுவும் சொல்லலாமே ’ என்று கேட்டேன்.

‘திருவள்ளுவர் சொல்லாததா? ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தனபால்னு அவங்கவங்களுக்குப் பொருந்துற மாதிரி 10 குறள்கள் சொல்றேன். சாலமன் பாப்பையா, மு.வரதராசனார் இருவருக்கும் நன்றியோட...
 
1.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்ல தமைச்சு. (633)

பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்தவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

2.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் 
எழுபது கோடி உறும். (639)

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும் நாட்டு நலனை எண்ணாமல், தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

3.
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் 
வகையறியார் வல்லதூஉம் இல். (713)

தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறும் தெரியாதவர்; சொல்லும் திறமும் இல்லாதவர்.

4.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே 
வேந்தமை வில்லாத நாடு (740)

மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால், அதனால் ஒரு நன்மையும் இல்லை.

5.
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை. (769)

எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால், அந்தப் படை வெற்றிபெறும்.  

6.
கான முயலெய்த அம்பினில் யானை 
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (772)

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

7.
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ 
மன்றில் பழிப்பார் தொடர்பு. (820)

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை, எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.

8.
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் 
ஏதம் பலவும் தரும். (885)

 சொந்தக் கட்சிக்காரனே உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.

9.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும். (293)

பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது, தன் மனமே தன்னைச் சுடும்.

10.
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் 
நடுவொரீஇ அல்ல செயின். (116)

தன் நெஞ்சம், நடுவுநிலை நீங்கித் தவறுசெய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகிறேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

எதெது, யார் யாருக்குச் சொல்றான்னு நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே... ‘இந்தா இது நமக்கு’ என்று ஒரு குறளைக் கொடுத்தான் மிஸ்டர் K ;


இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

 
அதுசரி! 

-பரிசல் கிருஷ்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு