Published:Updated:

சிங்கம்...சிங்கம்... துரைசிங்கம் தான் நம்ம ஜேம்ஸ்பாண்டு.. எப்படி? #S3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிங்கம்...சிங்கம்... துரைசிங்கம் தான் நம்ம  ஜேம்ஸ்பாண்டு.. எப்படி? #S3
சிங்கம்...சிங்கம்... துரைசிங்கம் தான் நம்ம ஜேம்ஸ்பாண்டு.. எப்படி? #S3

சிங்கம்...சிங்கம்... துரைசிங்கம் தான் நம்ம ஜேம்ஸ்பாண்டு.. எப்படி? #S3

திரையரங்குகளில் தற்போது வசூல் வேட்டையாடி வருகிறது 'சிங்கம்-3' திரைப்படம். முதல் பாகத்தில் தூத்துக்குடியிலும், சென்னையிலும் வேட்டையாடினார் துரைசிங்கம். அடுத்த பாகத்தில் சர்வதேசக் குற்றவாளியைத் தேடி தென்னாப்பிரிக்கா வரை சிங்கத்தின் வேட்டை தொடர்ந்தது. 'இன்டர்நேசனல் காப்' என்ற கேப்சனோடு 'சிங்கம்-3' படத்தில் துரைசிங்கம் வருவதால், டெக்னாலஜி விஷயங்களிலும் இயக்குநர் ஹரி புகுந்து விளையாடியிருக்கிறார். திரைப்படத்தில் சூர்யா பயன்படுத்திய சில டெக்னாலஜி விஷயங்கள் இவை.

ட்ரூ காலர் :

'ட்ரூ காலர்' எல்லாம் ஒரு டெக்னாலஜியா பாஸ்-னு நீங்க கேக்குறது புரியுது. இரண்டாவது பாகத்தில், லாட்ஜ் ஒன்றில் ஒளிந்திருக்கும் நபரை சாவித்துவாரம் வழியாக மொபைல் கேமராவில் பார்த்து சூர்யா குறிவைத்து சுட்டுத்தள்ளியது நினைவிருக்கலாம். நாம ஒரு தொழில்நுட்பத்த எப்படிப் பயன்படுத்துறோம்ன்றது தான் விஷயமே! ஆந்திராவில் சூர்யா வந்திறங்கியதும் அவருக்கு லோக்கல் ரவுடியிடமிருந்து கால் வந்திருக்கும். ஆக்ரோசமாக அனைவரையும் பந்தாடிவிட்டு, 'ட்ரூ காலர்' மூலமாக அந்த நபர் யாரென்று கண்டுபிடிப்பார் நம் ஹீரோ. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து கால் வந்தால், அது யாரென்று கண்டுபிடிக்கத் திணறியதெல்லாம் அந்தக்காலம் பாஸ். ட்ரூ காலர் போன்ற அப்ளிகேசன்கள் அவர்களது ஜாதகத்தையே கொட்டிவிடுகிறது. வில்லன் இதுக்கும் மேலே என்று காட்டுவதற்காக, 'ப்ரைவேட் நம்பர்' மூலம் கால்செய்து ஹீரோவிடம் கண்ணாமூச்சி ஆடியது ஹரியின் டச்.

இ-வேஸ்ட் மற்றும் மெடி-வேஸ்ட் :

இடைவேளை வரை காற்றிலேயே பறந்து பறந்து தாக்கிய சூர்யா, இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியப் பிரச்னையை கண்டுபிடிப்பார். 'இ-வேஸ்ட்' எனப்படும் எலக்ட்ரானிக் குப்பையையும், 'மெடி-வேஸ்ட்' எனப்படும் மருந்துக் குப்பையையும் கொட்ட மேலை நாடுகள், இந்தியா போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றன. கேரளாவில் இருந்து அவ்வப்போது தமிழகத்தின் எல்லையில் 'மெடி-வேஸ்ட்' கொட்டப்படுவதாகவும் புகார் உண்டு. சுற்றுப்புறச் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த விஷயத்தை 'சிங்கம்-3' படத்தில் கையில் எடுத்ததுக்கு ஹரிக்கு சிறப்பு நன்றி.

ட்ரோன் :

ஒரு டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தை விட, வேறொரு காரணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுவது உலக வழக்கம். வானூர்தி எனப்படும் ட்ரோனை செய்தி சேகரிக்கும் ஒரு ரிப்போர்ட்டராகத் தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். அதே ட்ரோனை வில்லனின் கூடாரத்தில் பறக்கவிட்டு உளவு பார்த்து, இறுதியில் அதன்மூலமாக வில்லன் யாரென்று கண்டுபிடித்தது... சர்வதேச போலீஸ் துரைசிங்கத்தின் ஏழாவது அறிவு.

வைஃபை ஹேக்கிங் :

தற்போதைய காலகட்டத்தில் ஒருவரின் மொபைல் அல்லது கணினியை 'ஹேக்' செய்து, தகவல்களைத் திருடுவது காபி சாப்பிடுவதைப் போல சுலபமாகிவிட்டது. நீங்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் உங்கள் அத்தனைத் தகவல்களும் காலி. வில்லனின் இடத்திற்கே செல்லும் சூர்யா, அங்கு வைஃபை கனெக்ட் செய்து மொத்த நெட்வொர்க் தகவல்களையும் தம்மாத்தூண்டு பென்-ட்ரைவில் போட்டுக்கொண்டு வெளியே வருவார். முறையான 'ஃபயர்வால்' இன்ஸ்டால் பண்ணாட்டி 'கடன் பட்டாற் நெஞ்சம் போல' கலங்கி நிற்க வேண்டியிருக்கும் பாஸ். உஷார்!

ஜி.பி.எஸ். ட்ராக்கிங் :

உங்கள் மொபைல் எண்ணை வைத்துக்கொண்டு, ஜி.பி.எஸ். மூலமாக நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதுவரை கண்டுபிடித்துவிட முடியும். கால் டாக்ஸி நிறுவனங்கள் உங்கள் வீட்டு வாசலுக்கே வண்டியை அனுப்புவது கூட ஜி.பி.எஸ். மூலமாகதான் சாத்தியமானது. வில்லன் விட்டல் ராவ் சூர்யாவின் மொபைல் எண்ணை வைத்து, அவர் தூத்துக்குடியில் இருப்பதைக் கண்டுபிடிப்பார். அதன்பின் இருந்த இடத்தில் இருந்துகொண்டு ஜி.பி.எஸ். மூலமாக நோட்டம் விட்டதெல்லாம் டெக்னாலஜி வளர்ச்சியால தான் பாஸ். ஆனால் அதைத் தெரிந்துகொண்ட சூர்யா, இரண்டு சிம்களைப் பயன்படுத்தி 'டபுள் சிம் ஆக்டிவேசன்' மூலம் வில்லனுக்குத் தண்ணி காட்டுவார். 

ஸ்பை கேம் :

உங்களை உளவு பார்க்க வேண்டுமென்றால் ஜேம்ஸ் பாண்ட் எல்லாம் வரத் தேவையில்லை. பேனா வடிவில் இருக்கும் 'ஸ்பை கேமரா' மூலமாகவே உங்களது செயல்கள் அத்தனையையும் வீடியோ எடுக்க முடியும். 'சிங்கம்-3' படத்தில் சூர்யாவுக்கு உதவ நினைக்கும் ரிப்போர்ட்டரான (!!!) ஸ்ருதிஹாசன், வில்லனின் இடத்துக்கு ஸ்பை கேம் பொருத்தப்பட்ட பேக்கை எடுத்துக்கொண்டு செல்வார். வில்லன் தான் ரொம்ப அறிவாளியாச்சே! ஸ்கேனர் மூலமாக உளவு பார்க்க வருவதை அறிந்து ஸ்ருதியை கட்டிப்போட்டதெல்லாம் ரொம்பவே வில்லத்தனம் ஜி!

அட இவ்வளவு வேணாம் பாஸ். சூரியின் சாதாரண ஃபோனை ஃபைலுக்குக் கீழே மறைத்துவைத்து, ஸ்ருதிஹாசன் இருப்பிடத்தை அதன் மூலம் ஒட்டுக்கேட்டு உறுதி செய்வார் சூர்யா. சாதா ஃபோனையே ஸ்மார்ட் ஃபோனாகப் பயன்படுத்த 'சிங்கம்-3' துரைசிங்கத்தால் மட்டுமே முடியும். ஒருவேளை இயக்குநர் ஹரி 'சிங்கம்-4' படத்தில் உங்கள் தகவல்களைத் திருடி உங்களிடமே காசு பார்க்கும் ரான்சம்வேர் கில்லிகளைப்பற்றி படம் எடுத்தாலும் ஆச்சர்யமில்லை.

கொஞ்சம் லோக்கல் தான். ஆனால் கேட்ஜெட்ஸ் விஷயத்தில், சிங்கம் சீரிஸ் தான் நம்ம ஊர் ஜேம்ஸ்பாண்டு என்று சொல்லலாம். 

- கருப்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு