Published:Updated:

ஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..!
ஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..!

ஹேன்ஸ் ஸிம்மர், ஜான் வில்லியம்ஸ் - இரு இசைப் பிசாசுகள் (பிதாமகன்கள்) கதை..!

உங்களுக்கு இவர்களைத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டாலும் இவர்கள் இசை நமக்கு முன்னமே பரிட்சயமாகி இருக்கும். உலக அளவில் திரைப்பட இசையில் மிக முக்கிய பங்காற்றிய இரு வேறு இசைக் கலைஞர்கள் இவர்கள். நாம் பெரும்பாலும் ரசித்து அனுபவித்த ஃபேன்டசி, சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஹாலிவுட் திரைப்படங்களில் இவர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அடுத்தடுத்த பாகங்களில் இயக்குனர்கள் மாறினால் கூட இந்த இசையமைப்பாளர்கள் மாற மாட்டார்கள். தங்கள் இசையின் மூலம் ஒரு காட்சியின் உணர்வுக்கு நிறம் பூசுகிற இந்த  இருவருக்கும் தனித்தனி ஸ்டைல் இருக்கிறது.

" When words fail,music speaks"

           - Hans Christian Anderson

ஹேன்ஸ் ஸிம்மர் (Hans zimmer) 

`பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ என்றவுடன் அந்த துள்ளலான தீம் நினைவுக்கு வருகிறதல்லவா! ஜேக் ஸ்பேரோவின் சாகசத்தையும், ஷெர்லாக் ஹோம்ஸின் துப்பறியும் நுணுக்கத்தையும், பேட்மேனின் கோதம் சிட்டியின் இருளையும், அதன்பிறகான எழுச்சியையும் தன் இசையின் மூலம் பேசியவர் ஸிம்மர். வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு அறிவாளிகள் பட்டியலில் இருக்கும் ஹேன்ஸ் ஸிம்மர் தான்  தனித்துவமான படங்களின் மூலம்,தரமான இயக்குநராய் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கிறிஸ்டோபர் நோலனின் ஆஸ்தான இசையமைப்பாளர்.

`தின் ரெட் லைன்’, `கிளாடியேட்டர்’,  `தி லாஸ்ட் சாமுராய்’, `டாவின்சி கோட்’, நோலன் இயக்கிய `பேட்மேன்’ - மூன்று  பாகங்கள், `இன்செப்ஷன்’, `இண்டெர்ஸ்டெல்லார்’ என ஹாலிவுட்டின் டாப் மோஸ்ட் படங்கள் உட்பட 150 படங்களுக்கு ஸிம்மர் இசையமைத்துள்ளார். 1980 களிலிருந்து தன் இசையால் உலக அளவில் ரசிகர்களை மயக்கி வரும் ஹேன்ஸ் ஸிம்மர் வீட்டு, ஷோ கேஸில் (show Case) ஒரு ஆஸ்கர், நான்கு கிராமி விருதுகள், இரண்டு கோல்டன் க்ளோப் விருதுகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

இன்னொரு சிறப்பான விஷயம்... ஸிம்மர் முறையான இசைப் பயிற்சிகளை விரும்பியவரல்ல. மியூஸிக் பள்ளிக்குக் கூட செல்லாத ஸிம்மர், இசையில் செய்த மாயம் ஏராளம். `Gladiator’ திரைப்படத்தின் `Now We Are Free’ தீம் நம் மனதை உருகி ஓடவைக்கும் (பாலாஜி சக்திவேல் இயக்கிய சாமுராய் படத்தில் இதே இசையை எடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் பயன்படுத்தி இருப்பார்)

டாவின்சி கோட் படத்தின் Sang Real Theme, ரகசியங்கள் அவிழ்க்கப்படும்போது நம்மை அறியாமல் உணர்வெழுச்சியை ஏற்படுத்தி கரைய வைக்கும். `ஷெர்லாக் ஹோம்ஸ்’ படத்தின் `Romanian Holiday’ தீம் ஏற்படுத்தும் பூரிப்பை ஒரு வகையில் அடக்க முடியாது. மனதை இரண்டாகப் பிரித்து நடுவே தாண்டவமாடும் இசை அது. இப்படி ஏராளம் சொல்லலாம். காட்சியின் பின்னெழும் இசைக்கு மிக முக்கிய கடமை அந்த காட்சியின் உணர்வைப் பாதிக்காமல் இருப்பது. ஒரு திரைப்படத்தில், சில காட்சிகளில் இசை பேசும். சில இடங்களில் அமைதியே மேல். ஆக, எந்த இடத்தில் பின்னணி தேவை, எந்த இடத்தில் தேவையில்லை என்ற விஷயங்களில் ஹேன்ஸ் ஸிம்மர்  உச்சம் தொட்டவர்.

ஜான் வில்லியம்ஸ் (John Williams)

ஸிம்மரை விட சீனியரான ஜான் வில்லியம்ஸ் வாங்கியவை  ஐந்து ஆஸ்கர்கள்  (ஆஸ்கருக்கு ஐம்பது முறை நாமினேட் ஆனது தனிக்கதை), நான்கு கோல்டன் க்ளோப், 23 கிராமி!  ஸிம்மருக்கு நோலன் என்றால், ஜான் வில்லியம்ஸுக்கு ஸ்பீல்பெர்க். 1952-ல் இருந்து இன்று வரை இசையமைத்து வரும் இந்த 85 வயது ஜான் வில்லியம்ஸ்,  E.T ,Schindler's list தொடங்கி சமீபத்தில் வெளிவந்த BFG வரை ஸ்பீல்பெர்க்கின் திரைபடங்களுக்கு வலு சேர்த்தவர். இவர் வாங்கிய ஐந்து ஆஸ்கர்களில் மூன்று விருதுகள் ஸ்பீல்பெர்க் படங்களுக்கு வழங்கப்பட்டதுதான். உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற துப்பறியும் அகழ்வாராய்ச்சியாளர்  இண்டியானா ஜோன்ஸுக்கு இவர் போட்ட தீம், உலகின் அனைத்து இண்டியானா ஜோன்ஸ் ரசிகர்களை துள்ளி எழ வைக்கும்.

`ஸ்டார் வார்ஸ்’, `ஹோம் அலோன்’, `ஹாரிப்பாட்டர்’ என ஜான் வில்லியம்ஸ் இசையமைத்த படங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை. ஹாரிப்பாட்டரின் இசை பற்றி சொல்லவே தேவையில்லை. ஹாக்வேர்ட்ஸ் ஸ்கூல் பிரம்மாண்டமாய் காட்டப்பட்டு ஸூம் இன் ஆகும் போது வரும் ஹெட்விக் தீம் இன்றும் உலகெங்கிலும் உள்ள ஹாரிப்பாட்டர் ரசிகர்களை எப்போது எங்கு கேட்டாலும் மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கிறது.

`ஜூராஸிக் பார்க்’ முதல் பாகத்தில் முதன்முதலாக டைனோசார் காட்டப்படும் காட்சியின் பின்னணி இசையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். 1992-க்கு முன் வரை கிங்காங் உள்ளிட்ட படங்களில் பொம்மைகள் போல் காட்டப்பட்டு வந்த டைனோசாரை, மக்கள் முதன்முதலில் ஒரிஜினலுக்கு மிக அருகில் உள்ள உருவ அமைப்பில் தியேட்டரில் `ஜூராசிக் பார்க்’ படத்தின் முதல் காட்சியில்தான் பார்த்தார்கள். மிக நீண்ட கழுத்துடைய அந்த சைவ உண்ணி டைனோசாரை மக்கள் காணும் போது பின்னணியில் எழுந்த வயலின் இசை அத்தனை மக்களையும் இன்ப அதிர்ச்சியின் உச்சத்தை தொடவைத்தது.

இசை தான் நம்மை என்னென்ன செய்கிறது! 

இந்த இருவேறு இசைப்பிசாசுகள் உண்மையில் திரைப்பட பின்னணி இசையிலும் வேறொரு பரிமாணத்தை தொட்ட பிதாமகன்கள். என்றாவது இவர்கள் இசையை நாம் கேட்க ஆரம்பித்தோம் என்றால் நம் கை பிடித்து அழைத்துச் செல்வார்கள்.

"Without music, Life would be a mistake"

                   - நீட்ஷே

 - ஜீ.கார்த்திகேயன்

(மாணவப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு