Published:Updated:

உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்துகள் இவைதான்! #Oilspill

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்துகள் இவைதான்! #Oilspill
உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்துகள் இவைதான்! #Oilspill

உலகில் நடந்த மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்துகள் இவைதான்! #Oilspill

தொடர்ந்து தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் பிரச்னைகளின் காரணமாக நாம் மறந்துபோன ஒன்று, சென்னையில் நடந்த எண்ணெய்க் கசிவு விபத்து. ஆனால், கடல்வாழ் உயிரினங்களுக்கும்  மீனவர்களுக்கும் அது மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இதுபோல உலக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற சில எண்ணெய்க்கசிவுகளின் தொகுப்பு இது.

1. டோரி கேன்யான் எண்ணெய்க்கசிவு (1967):

டோரி கேன்யான், மிகப்பெரிய எண்ணெய்த் தொட்டியைக்கொண்ட கப்பல். 1967- ம் ஆண்டு மார்ச் 18 அன்று லண்டனில் உள்ள ஸ்கிலி ஐஸ்லஸ் என்னுமிடத்தில், இந்தக் கப்பல் பாறையின் மீது மோதியதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. இதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? 60,000 டன் எடையைத் தாங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக் கப்பலை 1,20,000 டன் எடையைத் தாங்கும் அளவுக்கு மாற்றி அமைத்ததே. இந்த எண்ணெய்க்கசிவு விபத்து, சுமார் 270 மைல்கள் பரவியதோடு மட்டுமல்லாமல் 180 மைல்களுக்கும் மேலாக கடலோரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தின் விளைவாக, சுமார் 15,000-க்கும் மேலான பறவைகளும்  கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிந்தன. இதனைச் சரிசெய்ய, நஞ்சுக் கரைப்பான்களைப் பயன்படுத்தி எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் முயற்சியில் ராயல் கப்பற்படை ஈடுபட்டும், முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. இறுதியாக, வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து தீயை ஏற்படுத்தி எண்ணெய் படலைத்தை அகற்றினர்.

2. இக்ஸ்டாக் எண்ணெய்க்கசிவு (1971):

1971- ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி இந்த விபத்து நேரிட்டது. வழக்கமாக கப்பல்களில் ஏற்படும் எண்ணெய்க்கசிவு, விபத்துபோல அல்லாமல் எண்ணெய்க்கிணறைத் தோண்டும்போது நிகழ்ந்தது. இந்த எண்ணெய்க்கசிவின் தாக்கம் 10,000 – 30,000 சதுர மைல் அளவில் ஒரு வருடத்துக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

3. சீ ஸ்டார் எண்ணெய் விபத்து (1972):

1972-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் நாள், ஓமன் வளைகுடாவின் தென்கொரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸீ ஸ்டார் எண்ணெய்க்கிடங்கைக் கொண்ட கப்பல், பிரேசில் நாட்டின் ஹோர்டா பார்போசா என்ற சரக்குக் கப்பலின் மீது மோதியதால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்டாலும் எண்ணெய்கிடங்கு முழுவதும் கடலில் மூழ்கியது.

4. அமோகோ கேடிஷ் எண்ணெய்க்கசிவு (1978):

அமோகோ கேடிஷ் என்ற மிகப்பெரிய கப்பலில் இருந்த எண்ணெய்க்கிடங்கானது குளிர்காலச் சூறாவளியால் கப்பலின் திசை மாறி, மார்ச் 17 அன்று உடைந்துபோனது. இந்தக் கசிவில் 69 மில்லியன் கேலன்கள் எண்ணெய் ஆங்கிலக் கால்வாயில் கொட்டப்பட்டது. பின்னர் பிரஞ்சுக்காரர்களால் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

5. அட்லாண்டிக் எம்பரஸ் எண்ணெய் விபத்து (1979):

வெப்பமண்டலச் சூறாவளியின் காரணமாக 1979, ஜூலை 19-ல் டிரினிடாட் மற்றும் டோபோகோ கடற்கரையில், கிரேக்க சரக்குக் கப்பல் ஏஜியன் எண்ணெய்க்கிடங்கின் மீது மோதியதால் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது. பிறகு, பல நாட்கள் கழித்து இந்தக் கப்பல் அப்படியே கடலில் மூழ்கியது.

6. நெளரஸ் விபத்து (1983):

பெர்சியன் வளைகுடாவில், 1983- ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி எண்ணெய்க்கிடங்கினைக்கொண்ட கப்பல் பலவீனமான நிலையில் மேடையில் மோதியதால், எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது. அந்த நேரங்களில் ஈரான் - ஈராக் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காரணத்தால், இந்தக் கசிவு மிகவிரைவாக அகற்றப்பட்டது.

7. கோல்வா நதி எண்ணெய்க்கசிவு (1983):

1983-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ம் தேதி, ரஷ்யாவில் அமைந்துள்ள கோல்வா நதிக்கரையில், எட்டு மாதங்களாக பாதிப்படைந்த நிலையில் இருந்த எண்ணெய்க்குழாய், குளிர்காலத் தாக்கத்தினால் மதில் சுவரை உடைத்துக்கொண்டு கசிய ஆரம்பித்தது. இந்த எண்ணெய்க் கசிவு, 170 ஏக்கர் பரப்பளவில் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களையும் ஓடைகளையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.

8. கேஸ்டிலோ டி பெல்வர் எண்ணெய்க்கசிவு (1983):

1983 ஆகஸ்ட் 6-ம் நாள் தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் என்னும் நகரிலிருந்து சுமார் 70 சதுர மைல் தொலைவில், வடமேற்குத் திசையில் கேஸ்டிலோ டி பெல்வர் எண்ணெய்க்கப்பல் தீ பற்றிக்கொண்டதில், 25 மைல் தொலைவுக்கு கடலோரத்தில் எண்ணெய்க்கசிவு பரவிக் காணப்பட்டது. பல நாட்களுக்குப் பிறகுதான் 31 மில்லியன் கேலன் எண்ணெயுடன் இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

9. எம்/டி ஹேவன் டேங்கர் விபத்து (1991):

1991, ஏப்ரல் 11-ல் இத்தாலியின் ஜெனிவாவில் எம்/டி எண்ணெய்க்கிடங்கு வெடித்து மூழ்கியதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் தாக்கம், மத்திய தரைக் கடலில் சுமார் 12 ஆண்டுகள் வரை பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து ஏற்பட முக்கியக் காரணம், ஈரான்-ஈராக் போரின்போது ஏவப்பட்ட ஏவுகணை, எண்ணெய்க்கிடங்கில் மோதியதேயாகும்.

10. ஏ.பி.டி சம்மர் எண்ணெய்க்கசிவு (1991):

1991-ம் ஆண்டு மே 28-ம் தேதி அங்கோலா நாட்டின் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பெரும் விபத்து, அங்கு பணி புரிந்த 32 பேரில் 5 பேரை உயிரிழக்கச்செய்தது. இந்த எண்ணெய்க்கசிவு, 80 சதுர மைல்களுக்கு கடலில் பரவி, மூன்று நாட்களாக கடலில் எரிந்துகொண்டிருந்தது. இறுதியாக, ஜூன் 1-ம் தேதி முழுவதுமாகக் கடலில் மூழ்கியது.

11. அரேபியன் வளைகுடா எண்ணெய்க்கசிவு (1991):

1991- ம் ஆண்டு வளைகுடா போரின்போது, ஈராக் படைகளினால் குவைத், பெர்சியா வளைகுடாவில் இந்த எண்ணெய்க்கசிவு விபத்து அரங்கேறியது. அமெரிக்கப் படைகளின் ஊடுருவலைத் தடுக்க, கரையோரமிருந்த எண்ணெய்க்கிடங்கு திறக்கப்பட்டது. இதன் விளைவாக 4 அங்குலம் தடிமன் அளவிலான எண்ணெய்ப்படலம் சுமார் 4,000 சதுர மைல்களுக்குக் கொட்டப்பட்டது.

12. ஒடிசி எண்ணெய்க்கசிவு (1998):

கனடாவின் நோவா ஸ்கோடியா கடற்கரையோரத்தில் 1998-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க்கசிவில் 40 மில்லியன் கேலன்கள் எண்ணெய், சுமார் 700 நாட்டிகல் மைல் அளவில் கடலில் கலந்து, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

13. வளைகுடா எண்ணெய்க் கசிவு (2010):

2010, ஏப்ரல் 22-ம் தேதி மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள எண்ணெய்க்கிணற்றில் ஏற்பட்ட கசிவு, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். ஆழ்கடலில் ஏற்பட்ட கசிவு, ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் கேலன்கள் அளவிற்கு வெளியேறியது. மேலும் இந்தக் கசிவு, ஜூலை 15-ம் தேதி வரை சுமார் 572 சதுர மைல் தொலைவில் வளைகுடா பகுதியில் பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துபோயின. 1.82 மில்லியன் கேலன் அளவுக்கு சுத்திகரிப்பான் இந்தக் கசிவை நீக்கப் பயன்படுத்தியிருந்தாலும், இதன் தாக்கம் இனி வரும் காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அறிவியலாளர்களின் கருத்து.

இவை தவிர இன்னும் ஏராளமான எண்ணெய் கசிவு விபத்துகள் நடைபெற்றிருக்கின்றன. வட அமெரிக்காவில் இருக்கும் அலாஸ்காவில் 1989ல் நடைபெற்ற எக்ஸான்வால்டேஸ் கப்பல் விபத்தும் குறிப்பிடத்தக்கது.  மனித நடமாட்டம் இல்லாத ஆழ்கடலில் நடந்தவை முறையாக பதிவு செய்யப்படவில்லையென சூழியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

14. சென்னை எண்ணூர் எண்ணெய்க்கசிவு (2017):

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் அருகே, ஜனவரி 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால், கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதன் விளைவாக, ஏராளமான கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டன. 

ஒரு வெள்ளம் வந்தால், அரசு நிர்வாகம் எந்தளவுக்கு மெத்தனமாகச் செயல்படும் என்பதற்கு 2015-ம் ஆண்டு வந்த சென்னை வெள்ளச் சம்பவம் ஒரு உதாரணம். அதுபோலவே ஒரு எண்ணெய்க்கசிவு விபத்து, நம் நாட்டுக் கடற்கரைகளில் நடந்தால் அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதற்கு, வாளியோடு கடலை சுத்தம்செய்த இளைஞர்களே ஒரு உதாரணம். பேரிடர்கள் எப்போதும் நமக்கு எதையாவது கற்றுக்கொடுத்துவிடுகின்றன. அரசும், நாமும் அதிலிருந்து ஏதேனும் கற்றுக்கொள்கிறோமா? என்பதுதான் கேள்வி!

- மு.முருகன்,

மாணவப் பத்திரிகையாளர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு