Published:Updated:

டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?
டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

டொனால்டு டிரம்ப் கார் விற்பனைக்கு! அதில் என்ன ஸ்பெஷல்? விலை என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்ட Cadillac One கார் விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த காலத்தில் அவர் பயன்படுத்திய 1988-ம் ஆண்டைச் சேர்ந்த Cadillac Limousine, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

Cadillac Trump என அழைக்கப்படும் இந்த கார், இங்கிலாந்தில் உள்ள குளொசெஸ்டர் நகரத்தைச் சேர்ந்த Craig Eyre எனும் கார் டீலரிடம் இருக்கிறது. Cadillac நிறுவனம், இது போல 50 கார்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, அவை அனைத்தையும் டிரம்ப் வாங்கும் ஆர்வத்தில் இருந்தார். என்ன நடந்ததோ தெரியவில்லை, வெறும் இரண்டு Limousine கார்களை மட்டுமே Cadillac தயாரித்தது. இதனாலேயே ஸ்பெஷல் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது இந்தக் கார்.

Cadillac மற்றும் Dillinger/Gaines எனும் கோச்சுகளை வடிவமைக்கும் நிறுவனம் இணைந்து, டிரம்ப்பின் மேற்பார்வையில், இதனை வி.ஐ.பி-களுக்கான காராக வடிவமைத்துள்ளன. அப்போதைய Cadillac நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த ஜான் க்ரெட்டன்பெர்கர் (John Grettenberger) என்பவரிடம், ''ஒரு சிறந்த Limousine காருக்கான டிஸைனை, Cadillac நிறுவனம் வெளியிட விரும்புகிறேன். அதில் அதிக ஹெட்ரூம் மற்றும் ஒருவர் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும்'' என டிரம்ப் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வெளிப்பாடாக, கடந்த நவம்பர் 1987-ல் நடைபெற்ற Las Vegas Limousine & Chauffeur Show-வில், இப்படிப்பட்ட Limousine காரைத் தயாரிக்கப் போகிறோம் என்பதை அறிவித்த Cadillac நிறுவனம், அடுத்ததாக ஜனவரி 1988-ல் நடைபெற்ற Atlantic City Limousine & Chauffeur Show-வில் காட்சிபடுத்தியது Cadillac நிறுவனம். ஆக வெறும் இரண்டு மாதத்தில், டிரம்ப் கேட்டபடியே Golden Series and Executive Series-ல் Limousine காரைத் தயாரித்து அசத்திவிட்டது Cadillac நிறுவனம்.

Cadillac Trump கார், 1980-களில் இருந்த டிஸைன் கோட்பாடுகளின்படி இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. கிரோம் பார்களால் ஆன கிரில், ஸ்டீலால் ஆன காரின் பக்கவாட்டுப் பகுதியில் உள்ள கதவு பில்லர்கள், கூடுதல் ஹெட்ரூமுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ரூஃப் பகுதி, Gold Lined டயர்கள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த Golden Series காரின் உற்பத்திச் செலவைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அதிக இடவசதிக்காக நீட்டிக்கப்பட்ட கேபினில் இத்தாலிய லெதரால் ஆன இருக்கைகள், Wool கார்பெட், Rosewood பேனல்கள், தங்க இழைகளால் ஆன டிரம்ப் பிராண்டிங் ஆகியவை, தற்போதைய அமெரிக்க அதிபரின் விருப்பத்துக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளன.

அந்த காலத்தில் அதிகபட்ச தொழில்நுட்பங்களாக இருந்த தொலைநகல் இயந்திரம் (Fax Machine), காகிதத்தை மெல்லிய பட்டைகளாக அறுக்கும் இயந்திரம் (Paper Shredder), வீடியோ கேசட் ரெக்கார்டிங் (VCR), NEC செல்ஃபோன், மதுபானம் மற்றும் குளிர்பானங்களை வைப்பதற்காக ஃபைபர் போர்டால் தயாரிக்கப்பட்ட பகுதி (Drinks Dispenser Cabinet) ஆகியவற்றுடன் அசத்தலாக இருக்கிறது Cadillac Limousine. இதைப் பற்றி டிரம்ப் கூறியதாவது, ''தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இந்த காரைப் பார்க்கும்போதே தெரிகிறது. எல்லா வசதிகளும் இருக்கும் இப்படிப்பட்ட காரை, முதன்முதலாக வைத்திருப்பதில் பெருமைப்படுகிறேன். ஏனெனில் நான் அதற்கு தகுதியானவன்(!)'' என உற்சாகமாகப் பேசியிருக்கிறார். 

இந்த வகை கார்களுக்கே உரித்தான கறுப்பு நிறத்தைத்தான், Cadillac Limousine காரும் கொண்டிருக்கிறது. இதன் இழுவைத் திறனுக்காக, 5.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. டிரம்ப் இந்த காரை சில காலமே தன்வசம் வைத்திருந்தார். அவரையும் சேர்த்து, இதுவரை ஐந்து பேர் இந்த காரின் உரிமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  Cadillac Limousine காரின் உரிமையாளராக இருப்பவர், 10 ஆண்டு காலம் இதனைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் ஏலத்துக்கு வரத் தயாராக இருக்கும் இந்த கார், டிரம்ப் அடைந்திருக்கும் உயரத்தை வைத்துப் பார்க்கும்போது, எப்படிப் பார்த்தாலும் £ 50,000 மேலான ஆரம்ப விலையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 42 லட்ச ரூபாய்! 

 - ராகுல் சிவகுரு.

அடுத்த கட்டுரைக்கு