Published:Updated:

கவுந்த கப்பலுக்கும் கன்னத்துக்கும் என்ன தொடர்பு? - விளக்குகிறார் மிஸ்டர் K #ThursdayThoughts

கவுந்த கப்பலுக்கும் கன்னத்துக்கும் என்ன தொடர்பு? - விளக்குகிறார் மிஸ்டர் K #ThursdayThoughts
கவுந்த கப்பலுக்கும் கன்னத்துக்கும் என்ன தொடர்பு? - விளக்குகிறார் மிஸ்டர் K #ThursdayThoughts

கவுந்த கப்பலுக்கும் கன்னத்துக்கும் என்ன தொடர்பு? - விளக்குகிறார் மிஸ்டர் K #ThursdayThoughts

ந்த வார ஆனந்த விகடனைக் கையில் வைத்துக்கொண்டு பகபகவென்று சிரித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து, ‘மறுவார்த்தை பேசாதே...’ என்று பாடிக்கொண்டே உள்ளே வந்தான், மிஸ்டர் K.

"என்ன சிரிப்பு?"

"வலைபாயுதேல, ‘மண்ணெண்ணெ, வேப்பெண்ணெ, வெளக்கெண்ணெ’னு ஆரம்பிக்கிற ஒரு பழமொழியை உல்டா பண்ணின ஒரு ட்வீட் படிச்சு சிரிச்சேன்" என்றேன்.

"சரியாப்போச்சு. அது, பழமொழியே இல்ல. ஒரு நிகழ்ச்சில கிண்டலா சொல்லப்பட்டதில்லையா? அதெல்லாம் எப்ப பழமொழி ஆச்சு?" - என்று கொஞ்சம் காரமாகவே கேட்டான்.

"சரிப்பா... இவ்ளோ கோச்சுக்கிறதுக்கு அதுல என்ன இருக்கு?"

"அப்டி இல்லை. பழமொழிகள் எல்லாமே ஒரு அர்த்தம் சொல்பவை. அவை, ரொம்ப நாள் நிலைச்சு நிக்கணும். அதோட அர்த்தம் தலைமுறை தாண்டி எல்லாருக்கும் போய்ச் சேரணும்ங்கிற காரணத்துல, ஒரு எதுகை மோனையோட சொல்லப்படுது. ஆனா, பல பழமொழிகள் இஷ்டத்துக்கு திரிச்சு, என்னென்ன அர்த்தத்துலயோ பகிரப்படுவது எவ்ளோ பெரிய தப்பு!"

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, எதிர்வீட்டு வராண்டாவில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு பெண்ணின் கையை, அவள் அம்மா - போகிற போக்கில் - எடுத்துவிட்டுப் போனார். அதைக் கவனித்ததும் சடாரென்று என் பக்கம் திரும்பினான் மிஸ்டர் K.

"இப்ப அந்தம்மா ஏன் பொண்ணு கையை எடுத்துவிட்டாங்க?” 

“தெரியாதமாதிரி கேட்காத. ‘கப்பல் கவுந்தாலும் கன்னத்துல கைய வைக்காத’ன்னு கேள்விப்பட்டிருப்பியே... அதான் காரணம்.”

"முட்டாள்தனமா, பழமொழியோட அர்த்தத்தைத் திரிக்கிறதால வர்ற பிரச்னை. கன்னத்துல கைய வெச்சா என்ன தப்புனு அறிவியல் ரீதியா யோசிச்சிருக்கியா? இல்ல, அதுக்கும் கப்பலுக்கும் என்ன சம்பந்தம்னு பகுத்தறிவு ரீதியா சிந்திச்சிருக்கியா? ஒண்ணும் இல்ல. அப்டியே ஒரு அர்த்தம் கற்பிச்சு அதையே கொண்டுபோகவேண்டியது. இது தப்பில்லையா?”

எனக்கு அவன் சொல்வது சரிதான் என்று பட்டது. `ஆமாம்ல... கப்பலுக்கும் கன்னத்துல கை வைக்கிறதுக்கும் என்ன தொடர்பு? எதுகை மோனைக்காக மட்டுமே சொல்லிருக்க மாட்டாங்களே’ என்று தோன்ற, அவனிடமே கேட்டேன்.
 

“நீயே சொல்லேன்...”

“அந்தக் காலத்துல, ‘திரைகடலோடி திரவியம் தேடுற’ நோக்கத்துல நம்ம நாட்ல இருந்து  ரங்கூன் மாதிரி வெளிநாடுகளுக்கு - கடல் கடந்து- பொருள் ஈட்டப் போவாங்க. ‘கிளைகள் வானத்தை நோக்கி உயர்ந்தாலும், வேர்கள் விரும்புவது மண்ணைத்தான்’-ங்கிற மாதிரி  எப்படா தமிழ்நாடு வர்லாம்னுதான் இருப்பாங்க.  அஞ்சு வருஷமோ, 10 வருஷமோ சம்பாதிச்ச பணத்தை, தங்கமா, பணமா எடுத்துட்டு - ஒரே ஊரைச் சேர்ந்தவங்க, ஒரே கப்பல்ல - திரும்ப தாய்நாடு நோக்கிப் பயணிப்பாங்க.

இப்ப இருக்கிற அளவு பாதுகாப்பு முறைகள், இயற்கை மாற்றங்கள் குறித்த அறிவிப்பு  நடவடிக்கைகள்லாம் அப்போ குறைவுதானே. அப்படிக் கப்பல்ல வர்றப்ப, இயற்கைச் சீற்றம் காரணமா கப்பல் கவிழ்ந்துடுசுனா... தப்பிச்சு தாய்நாட்டுக்கு வர்றவங்களுக்கு ஒரே சிந்தனைதான் ஓடும். ‘இத்தனை வருஷம் உழைச்சுச் சம்பாதிச்சது போச்சே’னு கப்பல்ல வந்த நண்பர்கள் ஒண்ணு சேர்ந்து ’இனி திருடித்தான் பொருள் சேர்க்கணும்னு முடிவுக்கு வருவாங்க.

வீட்டுச் சுவத்துல பெரிய துளைபோட்டு, ஒரு ஆள் உள்ள போய் பொருட்களை எடுத்துட்டு வந்து, வெளில நிக்கிற கூட்டாளிகிட்டு குடுத்து, இப்படித் திருடுவாங்க. அப்டி  துளைபோட்டுத் திருடுறதத்தான் ‘கன்னம் வைக்கிறது’னு சொல்லுவாங்க"

"அட ஆமாம். நீ சொல்றப்பதான் ஞாபகம் வருது. சந்திரபோஸ் பாட்டுகூட ஒண்ணு இருக்கு... ’காக்கிச்சட்டை போட்ட மச்சான் களவு செய்ய கன்னம் வெச்சான்’”  - நான் பாடினேன்.

“ஆமா..‘கடப்பாறையால் இடப்படும் பெரிய துளை’ அப்படின்னு  கன்னம்-ங்கிற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லப்படுது.

அத்தனை வருடம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, பொருள் ஈட்டிக்கிட்டு வந்து, அதெல்லாம்  'கப்பல் கவிழ்ந்ததால பாழாச்சே'ன்னு இப்படி கன்னம் வைக்கிற வேலைல ஈடுபடுறாங்கனுதான் ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கை வைக்காதே’, அதாவது கன்னம் வெச்சு திருடுற வேலைல கைவண்ணத்தைக் காட்டாத-ன்னு சொல்லப்பட்டது. புரியுதா இப்ப?”

நான் மிஸ்டர் Kஐ பிரமித்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். நெஜம்மா யாருமே எனக்குச் சொன்னதில்லை என்றேன். 

“இல்லை... நிறைய பேருக்குத் தெரிஞ்சும் இருக்கலாம். ஆனா, திரும்பத் திரும்ப சொல்லி, எல்லாருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கணும்னு சொல்றேன்” என்றவனை ஆமோத்தித்துத் தலையசைத்தேன்.  

இந்த வியாழன் இப்படி ஒரு நல்ல தகவலோடு விடிந்தது எனக்கு! உடனே, இதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். உங்களுக்கும் அப்படித்தானே..? 
 

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு