Published:Updated:

செல்ஃபி லவ்வர்ஸ்... உங்களுக்காகவே இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதிகள்..!

செல்ஃபி லவ்வர்ஸ்... உங்களுக்காகவே இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதிகள்..!
செல்ஃபி லவ்வர்ஸ்... உங்களுக்காகவே இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதிகள்..!

செல்ஃபி லவ்வர்ஸ்... உங்களுக்காகவே இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதிகள்..!

புகைப்பட விரும்பிகளுக்கும், செல்பி கிங்/குயின்களுக்கும் மிக விருப்பமான சோசியல் மீடியா இன்ஸ்டாகிராம். சிலர் மூணு வேளை சாப்பாடு சாப்பிட்றாங்களோ இல்லையோ... சாப்பிட்றதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் பண்ணாதான் அவங்களுக்குத் திருப்தியே வரும். இவர்களுக்கு ஏற்றார்போல இன்ஸ்டாகிராம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.

நாம் நம் நண்பர்களுடன் கோவா போன்ற இடத்துக்கு சுற்றுலா சென்று வருவதாக வைத்துக் கொள்வோம். கோவா பீச்சில் சன்பாத் எடுத்தது, வாட்டர் பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்தது, கடலுக்கு மேலே பறந்தபடி பாராக்ளைடிங் செய்தது என அத்தனைத் தருணங்களையும் புகைப்படங்களாக சுட்டுத் தள்ளியிருப்போம். ஒவ்வொரு தருணமும் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ மிக அழகாகப் பதிவாகியிருக்கும். இன்டர்நெட் வசதி கிடைத்தவுடன் அதனை நாம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய விரும்புவோம். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்யும்போது, டைம்லைன் புகைப்படங்களால் நிரம்பி மற்றவர்களைக் கடுப்பேற்றும். நாலைந்து புகைப்படங்களுக்கு லைக் செய்துவிட்டு மற்றவற்றை முழுமையாகப் பார்க்காமலேயே ஸ்க்ரோல் செய்துவிடுவார்கள். ஆனால் அத்தனை புகைப்படங்களையும் அப்லோட் செய்ய நம் மனது பரபரக்கும். வேறு வழியில்லாமல் அத்தனையையும் அப்லோட் செய்வோம் அல்லது சிறப்பாக இருக்கும் ஏதாவது ஒரு புகைப்படத்தை மட்டும் அரை மனதோடு அப்லோட் செய்வோம்.

இதைத் தவிர்ப்பதற்காக இன்ஸ்டாகிராம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஃபேஸ்புக்கில் உள்ளது போல இன்ஸ்டாகிராமிலும் கேலரி வசதி அறிமுகமாகியுள்ளது. இனி ஒவ்வொரு பயனரும் பத்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒரே நேரத்தில் அப்லோட் செய்துகொள்ள முடியும். 'கேலரி' வடிவில் நாம் புகைப்படங்களை அப்லோட் செய்யும்போது, ஃபாலோயர்களுக்கு 'Swipe to see more' என்ற ஆப்சன் காட்டும். விருப்பப்பட்டால் அதை க்ளிக் செய்து அவர்கள் மொத்த ஆல்பத்தையும் பார்வையிட முடியும். பத்து புகைப்படங்களில் நமக்கு விருப்பமான புகைப்படங்களை மட்டும் தனித்தனியாக 'ஃபில்டர்' மூலம் அழகுபடுத்திக் கொள்ளும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்வதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த புதிய வசதியைப் பயன்படுத்த முடியும்.

'Disappearing photos/videos' வசதியையும் இந்த அப்டேட்டில் பெற முடியும். இதன் மூலம் நாம் நண்பர்களுக்கு ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ தனியாக அனுப்பிக் கொள்ளலாம். இப்படி அனுப்பும்போது அவர்களுக்கு நோட்டிபிகேசன் காண்பிக்கும். அவர் பார்வையிட்டபின் அந்த புகைப்படம் அல்லது வீடியோ தானாகவே அழிந்துவிடும். ஒருவேளை அந்த நண்பர் அழிந்துவிடுவதற்கு முன் ஸ்க்ரீன்சாட் எடுக்க முயற்சி செய்தால் உங்களுக்கு அது தெரிவிக்கப்படும். இதனால் பயனர்களின் 'ப்ரைவஸி' பாதுகாக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருந்தது.

ஃபேஸ்புக்கில் உள்ளது போல 'லைவ்' வீடியோவும் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்டில் உள்ளது. ஏதாவதொரு நிகழ்வில் இருக்கும்போது லைவ் வீடியோ அனுப்பும்போது ஃபாலோயர்களுக்கு நோட்டிபிகேசன் மூலம் தெரிவிக்கப்படும். ஆனால் லைவ்-ல் வீடியோ அனுப்பும்வரை மட்டுமே இந்த வீடியோவை ஃபாலோயர்கள் பார்வையிட முடியும்.

இவை தவிர்த்து ஏற்கனவே இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருந்த 'ஹேண்ட்ஸ் ஃப்ரீ', 'பூமராங்க்' போன்ற வசதிகளையும், இன்ஸ்டாகிராம் அப்ளிகேசனை அப்டேட் செய்வதன் மூலம் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இன்ஸ்டாகிராம் ஒவ்வொரு வருடமும் அபரிமதமான வளர்ச்சியடைந்து வருகிறது. அதனால் தான் கடந்த 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் பெரிய விலை கொடுத்து இன்ஸ்டாகிராமை வாங்கியது. ஆனால் கடந்த ஆண்டு 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்' என்ற புதிய வசதி அறிமுகமானபோது, இன்னொரு புகழ்பெற்ற சோசியல் மீடியாவான ஸ்னாப்சாட்டை காப்பி அடித்ததாக ஃபேஸ்புக் மீது புகார் எழுந்தது. தற்போது இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் சில வசதிகளும் 'ஸ்னாப்சாட்' அப்ளிகேசனில் உள்ள சிலவற்றின் மேம்பட்ட வசதிகள்தான் என தற்போதும் சர்ச்சை எழுந்துள்ளது.

எது எப்படியோ... இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் அறிமுகப்படுத்தும் சில வசதிகள் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு இனி வரும் காலங்களில் உங்கள் மொபைலிலேயே அழகழகாய் புகைப்படங்கள் எடுக்க முடியும்.

- கருப்பு

அடுத்த கட்டுரைக்கு