Election bannerElection banner
Published:Updated:

தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!

தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!
தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!

தியாகராஜ பாகவதர் முதல் சிம்பு வரை... தமிழ் சினிமா கண்ட புதுமைகள்!

இந்த நூற்றாண்டு இசையையும், சினிமாவையும் அவ்வளவு எளிதாக பிரித்துப் பார்த்துவிட முடியாது. இவை இரண்டும் ஒன்றாகவே பயணப்பட்டுள்ளன. இந்த உறவின் வலிமையை உணர்ந்துகொள்ள, ஒரு 86 வருடங்கள் பின்னோக்கிச் செல்வோம். 

1931 - தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் வெளியான வருடம். நாடகத்துக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ, 50 பாடல்கள் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. முக்கிய வேடங்களை ஏற்றிருந்த நடிகர்கள், பெரும்பாலும் பாடத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். அப்படி இருக்கவேண்டிய கட்டாயமும் அன்றைய தொழில்நுட்பச் சூழலில் இருந்தது. காளிதாஸ் படத்தில், முக்கிய வேடத்தில் நடித்த டி.பி. ராஜலட்சுமி பல பாடல்களைப் பாடியிருந்தார். (என்னதான் புராணக்கதை போன்று அமைக்கப்பெற்றாலும், சுதந்திர உணர்வைத் தூண்டும் நிகழ்கால பாடல்களும் அதில் இடம்பெற்றிருந்தது). இப்படித்தான் தொடங்கியது தமிழ் சினிமா!

1934-ல் ‘பவளக்கொடி’  படத்தில் நடிகராக அறிமுகமானார் பாடகரான தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவராகத்தான் இருக்கமுடியும். ஏனெனில் இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி. இவர் 1937-ல் நடித்த ‘சிந்தாமணி’ தொடர்ச்சியாக ஓராண்டு ஓடியது. இந்த வெற்றியின் நினைவாக, மதுரையில் ‘சிந்தாமணி’ என்ற பெயரில், ஒரு திரையரங்கை திறந்தது ராயல் டாக்கீஸ் நிறுவனம். (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தத் திரையரங்கம் இயங்கிக் கொண்டிருந்தது). அதன்பின் 1944-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஹரிதாஸ்’ வெளியானது. ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக, இப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் ஓடியது. பாகவதரின் புகழும், வளர்ச்சியும் எந்த அளவில் இருந்தது என்றால், அப்போதே திராவிட இயக்கங்கள், அவரைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள முயற்சித்தன. ஆனால் அவர் அரசியலில் பெரிதாக ஆசை காட்டவில்லை. கடைசிவரை அதிலிருந்து விலகியே நின்றார்.

இதே காலத்தில்தான், மற்றுமொரு மாபெரும் கலைஞரான பி.யு. சின்னப்பா அறிமுகமானார். பாகவதர் போன்றே பாடகராக இருந்ததால், அந்தக்காலத்தில் பாகவதருக்கு அடுத்த பெரிய நட்சத்திரமாகத் திகழ்ந்தார். இன்றைய தல-தளபதி போட்டிக்கு தொடக்கபுள்ளி, இந்த கூட்டணிதான் என்றால் அது மிகையாகாது. இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக, இவர் நடித்த ‘உத்தமபுத்திரன்’ கருதப்படுகிறது. இந்த வரிசையில், வில்லுப்பாட்டு கலைஞராக இருந்து, நகைச்சுவை நடிகரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனையும் மறந்துவிட முடியாது.

இப்படி தங்களின் கணீர் குரலில் அரங்கின் கடைசி இருக்கைவரை கேட்குமளவு, பாடிய பாடகர்கள் மட்டுமே நாயகர்கள். ஆனால் இது காலம் செல்ல, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வழக்கொழிந்தது. எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, சிவாஜி போன்ற நாடகக் கலைஞர்கள், திரைத்துறைக்கு வரத்தொடங்கினர். என்றாலும் டப்பிங், ரீ-ரிகார்டிங் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தபின், நடிகர்களே பாடல்களைப் பாடவேண்டிய கட்டாயமில்லாமல் போனது. படத்தில் எவ்வளவு பாடல்கள் இருந்தாலும், அவை எல்லாமே கதையோடு பொருந்தி வந்ததுடன், மக்களுக்குக் கருத்துசொல்ல எனத் தனியாகப் பாடல்கள் வர ஆரம்பித்தது இவர்களின் காலத்தில்தான். அவற்றில் சில அரசியல் பேசவும் தொடங்கியது. தவிர இன்றைய ஓப்பனிங் சாங் கலாச்சாரத்துக்கு அடிப்படை இதுதான். இப்படி மாறிய பின்பு, நடிகர்கள் மிகக் குறைவாகவே பாடினர். ஒருவருக்கு தங்களது குரல் அல்லாது, இன்னொருவர் குரல் கொடுக்கும் கலாசாரமும் இங்குதான் தொடங்கியது.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகும், நடிகர் ஒருவரே பாடலைப் பாடி, அதில் வெற்றியும் கண்டது என்னவோ கமல்ஹாசன் தான்! 1975-ல் வெளிவந்த ‘அந்தரங்கம்’ படத்தின்‘ஞாயிறு ஒளிமழையில்’ பாடல் வாயிலாகத்தான் பாடகரானார் கமல்ஹாசன். ஆனால் இவரது பாடும்திறனுக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்னவோ, 1978-ல் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ படத்தில், இவர் பாடிய 'பன்னீர் புஷ்பங்களே' பாடலில்தான்; இப்பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். அதன்பின் பாடகராகவும் அவர் பெற்ற வெற்றிகள் நாமறிந்ததே.  அதற்கு ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘போட்டுவச்ச காதல்திட்டம் ஓகே கண்மணி’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘தென்பாண்டி சீமையிலே’, ‘இளமை இதோ’, ‘உன்னவிட இந்த உலகத்தில்’, ‘நீயே உனக்கு ராஜா’ என பல பாடல்களைப் பட்டியலிடலாம். மற்ற நடிகர்களுக்கும் சில பாடல்களைப் பாடியிருக்கிறார் கமல்ஹாசன். அதன்பின், நடிகர்கள் பாடுவது அப்போதைய ட்ரெண்டானது. இதன் எதிரொலியாக, ரஜினியும் தனது ‘மன்னன்’ படத்தில் ‘அடிக்குது குளிரு’ பாடலைப் பாடினார். 

இதற்கிடையே, மீண்டும் பாடகர்கள் நடிகர்களாகத் தொடங்கினர். அதில் குணச்சித்திர வேடங்களில் தோன்றிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, மலேசியா வாசுதேவன் ஆகியோர் இதில் அடக்கம். எம்.எஸ்.விஸ்வநாதனும் அஜித்தின் ‘காதல்மன்னன்’ படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானர். கமலின் ‘காதலா காதலா’ படத்தில் இவரது நகைச்சுவை நடிப்பு வேற லெவல்! கடந்த 2003-ல் வெளியான ‘விகடன்’ என்ற படத்தில், பிரபல பாடகரான ஹரிஷ் ராகவேந்திரா கதாநாயகனாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனைத் தவிர்த்து, 2000-களில் விஜய், விக்ரம் போன்ற நடிகர்களும் பாட ஆரம்பித்தனர். அந்த ட்ரெண்ட் யாரையும் அப்போது விட்டு வைக்கவில்லை. எனவே சூர்யா தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என இன்று வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் 25 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் நடிகர் விஜய். அடுத்த தலைமுறை நடிகர்களான தனுஷும், சிம்புவும் ஒருபடி மேலேசென்று, பாடல்கள் எழுதவும் தொடங்கினர். ‘கொலவெறி' 'லூசுப் பெண்ணே' போன்ற பாடல்களின் ‘ரீச்’ அவர்களுக்கான பூஸ்ட். 

இப்படி காலத்துக்கு ஏற்ப மாறிவந்த சினிமாவில், புதிதாக இசையமைப்பாளர்கள் நடிகராகும் ட்ரெண்டும் தொடங்கியுள்ளது. 2012ல் ‘நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, அதில் வெற்றியும் கண்டார் விஜய் ஆண்டனி. அந்த வரிசையில் ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி என பலரும் நடிகர்களாகத் தொடங்கியுள்ளனர். ‘பிச்சைக்காரன்’ வெற்றிக்கு பின், இன்று திரை நட்சத்திரமாகவே மாறியுள்ளார் விஜய் ஆண்டனி. 

இதற்கிடையே, பாடகர்கள் நடிகர்கள் ஆகும் ட்ரெண்டும் முடியவில்லை; பாடகர் விஜய் ஜேசுதாஸ், ‘மாரி’ படத்தில் வில்லனாகத் தலைகாட்டினார். இதில் லேட்டஸ்டாக பாடகர் கிரிஷ், ‘சிங்கம் 3’-ல் போலீஸ் ஆபீஸராக நடித்திருந்தார். நடிப்பு என்று இல்லை, சின்மயி போன்ற பாடகிகள், பல முன்னணி நடிகைகளுக்குக் குரல் கொடுத்தும் வருகின்றனர். இப்படி தொழில்நுட்பத்தால் அப்டேட்டாகிவரும் தமிழ்சினிமாவின் உச்சமாக நடிகர் சிம்பு, சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் முலம் இசையமைப்பாளராகவும் மாறவுள்ளார். 

இப்படி பாடகர்கள் நடிகர்களானது, நடிகர்கள் பாடகர்களானது, இசையமைப்பாளர்கள் நடிகர்களானது, நடிகர்கள் இசையமைப்பாளர்களாவது என தமிழ் சினிமா பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. இனியும் பயணிக்கும்!

- ம. காசி விஸ்வநாதன்

(மாணவப் பத்திரிகையாளர்)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு