Published:Updated:

சூப்பர் சாமியார் ஆவது எப்படி? - குதூகல குண்டாலினி குறிப்புகள்!

சூப்பர் சாமியார் ஆவது எப்படி? - குதூகல குண்டாலினி குறிப்புகள்!
சூப்பர் சாமியார் ஆவது எப்படி? - குதூகல குண்டாலினி குறிப்புகள்!

சூப்பர் சாமியார் ஆவது எப்படி? - குதூகல குண்டாலினி குறிப்புகள்!

'ஆதியோகி' காலம் தொட்டு 'மர்மயோகி' காலம் வரை சர்ச்சைக்குள்ளாகும் விஷயங்கள் இரண்டுதான். ஒன்று சினிமா, இன்னொன்று சாமியார்கள். கமண்டலம், புகை மண்டலம் எல்லாம் பழைய ஸ்டைல். இன்று ஆரோ சவுண்டு சிஸ்டம், 3டி, லேசர் ஷோ என சாதி, மத பாரபட்சம் இல்லாமல் கலர்ஃபுல் கார்ப்பரேட் சாமியார்கள்தான் ட்ரெண்ட். சூப்பர் சாப்பாடு, காஸ்ட்லி கார்கள் என ஜம்மென வாழும் அவர்களைப் பார்க்கும் பலருக்கும் காதில் புகை வரத்தான் செய்கிறது. டோன்ட் ஒர்ரி பாஸ். கீழே இருக்குற விதிகளை கடைபிடிச்சா நீங்களும் ஆகிடலாம் அடுத்த சாமியார்.

* சாமியாராக முதல் தேவை ஒரு பெயர். அது கண்டிப்பாய் சின்னதாக இருக்கக் கூடாது. 'நந்தா' பின்பெயராய் இருந்தால் எக்ஸ்ட்ரா ஓட்டுக்கள் விழும். பெயருக்கு முன்னால் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 'வள்ளல்', 'குரு', 'பகவான்' என ஏதாவது ஒன்றைப் போட்டுக்கொள்ளலாம். உங்கள் பெயரைச் சொல்லும்போதே சொல்பவருக்கு நடுமுடி நட்டமாய் நிற்கவேண்டும். பக்தர்களோடு இன்னும் நெருங்க, 'சித்தப்பா, தாய்மாமா' என உறவுமுறை வைத்துக்கொள்ளலாம். 

* அடுத்ததாக ஏதாவது ஒரு நிறத்தை தத்தெடுக்க வேண்டும். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற கலர்களுக்கு எல்லாம் ஏற்கெனவே கிராக்கி என்பதால் சாம்பல் கலர், சாக்கு கலர் போன்ற யாருமே சீண்டாத கலர்களை தேர்ந்தெடுத்து கும்பலாய் யூனிபார்ம் தைத்துக்கொள்ள வேண்டும்.

* நெக்ஸ்ட் 'கெண்டைக் காலில் இருக்கும் குண்டாலினியை எழுப்புவது எப்படி?', 'பின் கபாலத்தில் இருக்கும் பூச்சாண்டியை விரட்டுவது எப்படி?' உள்ளிட்ட டிப்ளமோ டிகிரி கோர்ஸ்களை மைக் வைத்து சொல்லித் தர வேண்டும். 'இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா சார்... இங்க பாடத் தெரியாதவங்களையும் பாட வைப்போம், ஆடத் தெரியாதவங்களையும் ஆடவைப்போம்' என வித்தை காட்டவேண்டும்.

* லைட்டாக கூட்டம் சேரத் தொடங்கியவுடன் யோசிக்காமல் ஆசிரமம் தொடங்கிவிட வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் இருந்தால் சாதா சாமியாராக இருந்து சூப்பர் சாதா சாமியார் ஆகும்போது ஆசிரமத்தையும் பெரிதாக கட்டிக்கொள்ளலாம். அதனால் காட்டுப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் நலம். 

* ஜலதோஷம் தொடங்கிய மூன்றாவது நாள்... அதாவது காய்ச்சல் தொடங்கிய இரண்டாவது நாள் தொண்டையில் இருந்து வரவா வேணாமா? என யோசித்து யோசித்து வருமே வாய்ஸ்... அதுதான் இனி உங்களின் நிரந்தரக் குரல். முகத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு அந்த சளி பிடித்தக் குரலில் பேசினால் சிலிர்த்துப் போய் சில்லறைகள் குவியும்.

* கார்ப்பரேட் ஆவதற்கு முதல் படி... ஸ்கூல், காலேஜ் கட்டுவது. சுற்றி இருக்கும் வனப் பரப்புகளை எல்லாம் காம்பவுண்ட் வளைத்துப் போட்டால் 'ஆன்மிக வள்ளல்' 'கல்வி வள்ளல்' ட்ரான்ஸ்பர்மேஷன் ஆகிவிடலாம். 'ஏழு உலகங்களும் போற்றும் எட்டாவது வள்ளலே', என்றும் 'தித்திப்பு குறையாத எங்களின் குலோப் ஜாமூனே' என அரசியல் கட்சிகள் போல அடிப்பொடிகளைவிட்டு கோஷங்கள் போட்டுக்கொள்ளலாம். 

* பேச்சு மட்டுமில்லை. எழுத்தும் முக்கியம். 'குழாயைத் திற தண்ணி வரட்டும்', 'அதுக்கு மட்டும் ஆசைப்படாத', 'புஜபல பராக்கிரம கலகல குல்பியானந்தா - An Untold Story' போன்ற தலைப்புகளில் எழுதித் தள்ளவேண்டும். முக்கியக் குறிப்பு: எழுதுவதுதான் முக்கியம். புரிவது அல்ல. அடிச்சோட்டுறா பசுபதி!

* கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிகள் இருக்கும்போது கோடிகளில் புரளும் கார்ப்பரேட்களுக்கு இருக்க வேண்டாமா? உங்கள் வசதிகேற்றபடி சுமார் குரலில் பாடவோ (தீம் மியூசிக் போட்டு அட்ஜஸ்ட் செய்துவிடலாம்), அபிநய விரல்களால் ஆடவோ (லைட் எபெக்ட்ஸ் போட்டு மழுங்கடித்துவிடலாம்) செய்யவேண்டும். கொன்னக்கோல் தெரிந்தால் இன்னும் வசதி. #தின்னத்தா தின்னத்தா தகிதம்ததா!

* ஆசிரமம் கட்டியாயிற்று. வற்றாமல் வாளியில் அள்ளி ஊற்றும் கல்வி வள்ளலாகவும் மாறியாகிவிட்டது. இதை எல்லாம் நிர்வாகம் செய்ய? 'கணக்கு வழக்கு' மிக முக்கியம் அமைச்சரே!! அண்ணன், தம்பி, மகன், மச்சான் என இருக்கும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு கொடுத்து பக்கத்து பெர்த்திலேயே படுக்கப் போட்டுவிட வேண்டும். சொந்தம் சோறு போடும்.

* காலண்டரில் பண்டிகை வரும் நாட்களை எல்லாம் முன்னாலேயே குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது அழிந்துபோன மாயன் காலத்து பண்டிகையாக இருந்தாலும் சரி. மாயன்தான் மூத்தகுடி என சொல்லி அதற்கு ஒரு விழா எடுத்தால் கலெக்‌ஷன் கடல் தாண்டி கொட்டும்.

* சமையலறை திறப்பு விழாவோ, சிலை திறப்பு விழாவோ அந்துஸ்துக்கேற்ற வகையில் வார்டு கவின்சிலர் தொடங்கி டொனால்ட் ட்ரம்ப் வரை சிறப்பு விருந்தினராக கூப்பிட வேண்டும். இந்த ஏரியாவில் போட்டி அதிகமென்பதால் உங்கள் மொத்தக் க்ரியேட்டிவிட்டியையும் காட்டியே ஆகவேண்டும் பாஸ்.

* 'பிரிக்க முடியாதது' எனக் கேட்டால் சிவாஜி இப்போது சாமியாரும் சர்ச்சையும் என மம்மி பிராமிஸ் செய்வார். எனவே ஆடியோ, வீடியோ, ஸ்க்ரீன்ஷாட், கொலை, கொள்ளை என எதிலாவது நம் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டும். தியாகம்தான் உன்னை உயர்த்தும் குமாரு! 

நித்திஷ்

அடுத்த கட்டுரைக்கு