Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

பொம்மைகள் வாங்கிய பாண்டி பஜார் நாட்கள்!

##~##

''எனக்கு சென்னைனாலே நினைவுக்கு வருவது தி.நகர்தான். அங்கே நீலகண்ட மேத்தா தெருவில் இருந்தோம். பக்கத்தில்தான் மனோரமா ஆச்சி வீடு. வெளிநாட்டில் இருந்த அம்மாவும், அப்பாவும் பிரசவத்துக்காக சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டாங்க. இப்படித்தான் சென்னை எனக்கு ஹோம் கிரவுண்ட் ஆனது!'' - யோசித்து யோசித்து சென்னை குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் த்ரிஷா.

என் ஊர்!

''ஷாப்பிங் போக எந்தச் சிரமமும் இல்லை. காலாற நடந்து போற தூரத்துல பாண்டி பஜார். சனி, ஞாயிறுன்னா எப்பவும் ஜாலி. அப்பா, அம்மா கையைப் பிடிச்சுக்கிட்டே நடந்துபோய் பிக் ஷாப்பர் பேக் நிறைய பொம்மை வாங்கிட்டு வருவோம். சின்ன வயசுல மட்டும் இல்லை... இப்பவும் நான் அப்பா அம்மாவுக்கு அதே செல்லம்தான். எல்.கே.ஜியில் இருந்து சர்ச் பார்க் ஸ்கூலில்தான் படித்தேன். ஸ்கூல்ல நான்  செம சேட்டை.

சர்ச் பார்க் காம்பவுண்ட்டுக்குள் நான் தலைகீழாகத் தொங்காத மரமே இல்லை.   அம்மா, அப்பாவை மாசம் ஒரு முறையாவது ஸ்கூல் டீச்சர்ஸ் கூப்பிட்டு என்னைப் பத்தி புகார் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான்தான் 'கேங் லீடர்’!  அங்க ஒரு குட்டி ராஜாங்கமே நடத்திட்டு இருந்தேன்.  என் ரவுடித்தனம் தாங்காம, 'வீட்ல என்ன பண்றீங்க? உங்களுக்குப் பிள்ளை வளர்க்கவே தெரியாதா?’னு அம்மாவைக் கூப்பிட்டுத்  திட்டும்போது எல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி பாவமா நின்னுட்டு இருப்பேன். ஆனா, ஸ்டடீஸ்ல எப்பவும் நல்ல ரேங்க் வாங்கிடுவேன். அதான் என்னை ஸ்கூல்லயும் வீட்லயும் சகிச்சுட்டு இருந்தாங்க!

எங்க ஸ்கூல்ல படிச்சு முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா மேடத்துக்கு வரவேற்பு விழா நடந்தது. அப்போ ஸ்டேஜ்ல நான்தான் வெல்கம் டான்ஸ் ஆடினேன். அப்போ ஜெயலலிதா மேடம் என்னைப் பாராட்டிய வார்த்தைகளும் அவரோட புன்னகையும் இப்பவும் என் மனசுல அப்படியே இருக்கு!

என் ஊர்!

என்கூட படிச்ச ஹேமா, ஸ்வேதா, அகிலா, நேகா, காம்னா, பிரவீணா, பூஜா எல்லோரும் இப்போ வரை என்கூட டச்ல இருக்காங்க. தி.நகர் வீட்ல இருக்கும்போதுதான் எனக்கு முதல் மாடலிங் வாய்ப்பு வந்தது. 'மெடிமிக்ஸ்’ சோப் விளம்பரம் அது. ஏவி.எம் ஸ்டுடியோ போயிருந்தப்ப, அங்கே 300 பேர் ஏற்கெனவே காத்து இருந்தாங்க. 'இவங்களைத் தாண்டியா என்னை செலெக்ட் பண்ணப் போறாங்க’னு நம்பிக்கையே இல்லாமல்தான் இன்டர்வியூவில்  கலந்துகொண்டு திரும்பினேன். பார்த்தா மெடிமிக்ஸ் விளம்பரத்தில் நடிக்க நான் செலெக்டட். அந்த டர்னிங்பாயின்ட்  தி.நகர் வீட்டில்தான் நடந்தது.

என் ஊர்!

அப்புறம் மிஸ் சென்னை, மிஸ் தமிழ்நாடுனு அடுத்தடுத்து விருதுகள். மிஸ் சென்னை கிடைச்சதும் தி.நகர் வீட்டில் வெச்சுதான் விகடனுக்கு முதல் பேட்டி கொடுத்தேன். பார்த்தா அடுத்த வாரம் விகடன் அட்டைப் படத்தில் என் படம்! ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.  இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் பறந்து பறந்து நடிச்சுட்டு இருந்தாலும் தி.நகர் வாழ்க்கையும், சர்ச் பார்க் ஸ்கூலும் என் மனசைவிட்டு  நீங்காது!''

- நா.கதிர்வேலன், படங்கள்: வி.செந்தில்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு