Election bannerElection banner
Published:Updated:

நூல் பல கல்!

புழுதிவாக்கத்தில் ஒரு புத்தகக் கூடம்

##~##

ங்கி, நிலம் என்று பென்ஷன் பணத்தை முதலீடு செய்து, வரும் வருமானத்தில் மிச்ச நாட்களை கழிக்கலாம் என்று நினைக்கும் சீனியர் சிட்டிசன்களுக்கு மத்தியில் ஏ.கே.வீரராகவன் வித்தியாசமானவர்! தனக்குக் கிடைத்த ஓய்வூதியத் தொகையைக்கொண்டு புழுதிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் சிறிய நூலகம் கட்டி, அதை அப்பகுதி மக்களுக்கே அர்ப்பணித்து இருக்கிறார். தற்போது இந்த நூலகத்தை அவருடைய வாரிசுகள் பராமரித்து வருகின்றனர்.

''எங்கள் தந்தை டெலிபோன் செலெக்ஷன் கிரேடு இன்ஸ்பெக்டராக 30 வருஷம் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மார்க்சிஸ்ட்டான அவர், பணி ஓய்வுக்குப் பிறகு 'தீக்கதிர்’ பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தார். நல்ல விஷயங்களை விளம்பரம் இன்றி செய்வார். அதுவும் கல்வி விஷயத்தில் ஆர்வம் அதிகம். படிப்பின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க தன்னால் முடிந்ததைச் செய்து வந்தார். அந்த எண்ணத்தின் வெளிப்பாடே இந்த அன்பு நூலகம்.

நூல் பல கல்!

அவர் தன் ஓய்வு ஊதிய பணத்தைக்கொண்டு 2002 பிப்ரவரியில் 'வீரராகவன் - சகுந்தலா’ என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்றை தொடங்கினார். அதில் தன் குடும்ப நபர்கள், சேவை மனம் கொண்ட வெளி நபர்களை உறுப்பினர் ஆக்கினார். 2,800 சதுர அடி கொண்ட இந்த இடத்தை டிரஸ்ட்டுக்காக வழங்கி, அதன் ஒரு பகுதியில் இந்த நூலகத்தை அமைத்தார்!'' என்கிறார் ஏ.கே. வீரராகவனின் மகன் ஸ்டாலின்.

இந்த நூலகம் ஏ.கே.வீரராகவனின் பென்ஷன் தொகை, அவருடைய ஆறு  மகன்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், கட்டடம் மூலம் கிடைக்கும் வாடகை இவற்றின் மூலம் இயங்கி வருகிறது. மற்ற எவரிடமும் நிதி உதவி பெறுவது இல்லையாம். ''2008-ம் ஆண்டு   அவர் காலமாகும் வரை அப்பாதான் இந்த நூலகத்தைப் பராமரித்து வந்தார். அதன் பிறகு  அம்மா சகுந்தலாவும், அண்ணி ஜெயலெட்சுமியும் பராமரித்து வருகிறார்கள். அப்பாவின் பிறந்தநாள், நினைவு நாட்களில் இந்தப் பகுதி குழந்தைகளுக்கு விளையாட்டு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் கொடுப்போம்.

நூல் பல கல்!

நூலகத்தில் புத்தகம் எடுக்க 50 பைசா, 1 ரூபாய் என சிறு தொகை மட்டுமே கட்டணம். உறுப்பினராக 100 ரூபாய் கட்டணம். இதுவும்கூட நூலகப் பராமரிப்புச்  செலவுக்கு மட்டுமே. குழந்தைகள், பெரியவர் என 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த நூலகம் இயங்குகிறது.

காமிக்ஸ், கட்டுரை, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. இவை தவிர வார, மாத இதழ்களும் உண்டு. நூலகத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தாலும் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அனைவரும் தொடர்ந்து செயல்படுகிறோம்!'' என்கிறார் ஸ்டாலின்.

நூல் பல கல்!

நூலகத்தைப் பராமரித்து வரும் ஜெயலெட்சுமி,  ''குழந்தைகள் புக்ஸ் படிக்க ஆர்வமாத்தான் இருக்காங்க. ஆனா பெற்றோர்தான், 'பாடம் படிக்காம இங்கே வந்து கதை புத்தகம் படிக்கிறியா?’னு திட்டி கூட்டிட்டுப் போயிடுறாங்க. விடுமுறை தினங்களில் மட்டும்தான்  அனுப்பிவைக்கிறாங்க. படக்கதைகள், தன்னம்பிக்கையைத் தூண்டும் வரலாறுகள்னு பாடப் புத்தகத்தை தாண்டிய வேறொரு உலகம் இருப்பதையே நம் பெற்றோர் மறந்துவிடுவதுதான் சோகம்!'' என்பவர், ''புத்தகத்தை எடுத்துச் செல்பவர்களில் சிலர் திரும்பக் கொடுப்பது இல்லை. வீடு வீடாக நாங்களே போய் வாங்க வேண்டி இருக்கிறது!''  என்கிறார் கவலையுடன்!

- பானுமதி அருணாசலம்,
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு