Published:Updated:

அனிருத், கருண் நாயர் இருவருக்கும் அந்தக் குதிரை மீது காதல்..!

ராகுல் சிவகுரு
அனிருத், கருண் நாயர் இருவருக்கும் அந்தக் குதிரை மீது காதல்..!
அனிருத், கருண் நாயர் இருவருக்கும் அந்தக் குதிரை மீது காதல்..!

இந்தியாவில் லேட்டஸ்ட்டாக ஃபோர்டு மஸ்டாங் (Mustang) காரை வாங்கியிருக்கும் பிரபலம், இந்திய கிரிக்கெட்டின் முச்சத நாயகன் கருண் நாயர். இந்தியாவின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான விரேந்திர சேவாக்குக்கு அடுத்தபடியாக, முச்சதம் அடித்த இந்தியர் இவர்தான்! ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரைச் சேர்ந்த கருண் நாயர், Pony Car என்று அழைக்கப்படும் மஸ்டாங் காரின் சிவப்பு நிற மாடலை வைத்திருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘என் காதல்’ என்று இதை வர்ணித்துள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தான் அடித்த முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய வீரரான கருண் நாயர், மற்றுமொரு சாதனையும் படைத்திருக்கிறார். முச்சதம் அடித்த பிறகும், அணி அடுத்து ஆடும் போட்டியில், விளையாட வாய்ப்பு கிடைக்காததுதான் அது! எனவே அரவிந்த டி சில்வா, ஜெஃப்ரி பாய்காட், ஜேசன் கில்லஸ்பி, கெவின் பீட்டர்சன், ஷான் மார்ஷ் ஆகியோருக்கு அடுத்தபடியாக, இந்த சரித்திரமிக்க சா(சோ)தனையை தன்வசப்படுத்தியிருக்கும் கருண் நாயர், ராகுல் டிராவிட்டால் அடையாளம் காணப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த காரின் பிரத்யேகமான பதிவு எண்ணைப் பார்க்கும்போது, இன்னோரு விஷயம் புலப்படுகிறது;
KA – தன் முதல் பெயரின் முதல் இரண்டு எழுத்துகள்
NA – தன் இரண்டாவது பெயரின் முதல் இரண்டு எழுத்துகள்
303 – டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோர்

கோலிவுட்டில் நடிகர் தனுஷைத் தொடர்ந்து, அவரது நண்பரான இசையமைப்பாளர் அனிருத்தும் மஸ்டாங் காரை வாங்கியுள்ளார். அறிமுகமாகி 6 வருடங்களில் 15 படங்களுக்கு இசையமைத்திருக்கும் அனிருத், பாடகராகவும் மிளிர்கிறார். இவர் சமீபத்தில் இசையமைத்து வெளியான ரம் திரைப்படம், திரைப்பட ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில், விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தயாராகிவரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ மற்றும் சிவகார்த்திகேயனின் நடிப்பில், மோகன் ராஜாவின் இயக்கத்தில் தயாராகும் ‘வேலைக்காரன்’ என, தமிழ் சினிமாவின் தற்போதைய உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கமிட்டாகியுள்ள அனிருத், நீல நிற மஸ்டாங் காரை சமீபத்தில் வாங்கியிருக்கிறார். எல்லாம் கார் பிரியரான அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படத்துக்கு, அனிருத் இசையமைத்த நேரம் என்றே தோன்றுகிறது! இவரிடம் இருந்து மற்றுமொரு ‘ஆலுமா டோலுமா’ வெளிவருமா என்பதை, காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Rockstar @anirudhofficial Gets a brand new "Mustang" Launched By #Ford

கடந்த 2016 ஆண்டு, டிசம்பர் 29-ம் தேதியில் மஸ்டாங்கை, சென்னையில் ரூ.81.51 லட்சத்துக்கு (சென்னை ஆன் ரோடு விலை) அறிமுகப்படுத்தியது ஃபோர்டு. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், கடந்த ஜூலை 2016 மாதம் இந்தியாவில் களமிறங்கிவிட்டது. முதற்கட்டமாக டெல்லி மற்றும் மும்பையில் மட்டுமே, 6-வது தலைமுறை மஸ்டாங் விற்பனை செய்யப்பட்டது. ஏனெனில் இந்தியாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு மட்டுமே, ஃபோர்டு ஒதுக்கிய 100 மஸ்டாங் கார்கள் அனைத்தும் கார் அறிமுகமான ஒரு மாதத்திலேயே விற்பனையாகிவிட்டன! 401bhp பவர் - 54.3kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 5 லிட்டர் V8 இன்ஜின் இதில் உள்ளது. பேடில் ஷிஃப்ட்டர் உடனான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 0 - 100 கி.மீ வேகத்தை 4.5 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் மஸ்டாங், அதிகபட்சமாக 250 கி.மீ வேகம் செல்லக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. Normal, Sport+, Track, Snow/Wet என நான்கு டிரைவிங் மோடுகளையும் கொண்டுள்ளது. தவிர இதில் Line Lock வசதி இருப்பதால், மஸ்டாங்கில் பர்ன் அவுட் சாகசங்கள் செய்வது ரொம்ப ஈஸி!

 - ராகுல் சிவகுரு