Election bannerElection banner
Published:Updated:

கூத்து கட்டலாம் வாங்க!

கலை வளர்க்க அழைக்கிறார் காஞ்சித் தலைவி

##~##

''கலாசாரம் தொடர்பான ஆய்வுக்காக 1987-ல் இந்தியா வந்தேன். அப்போது தமிழகம் வந்தபோது, இங்குள்ள கலாசாரத்தை உள்வாங்க தமிழ் கற்றுக்கொள்வது அவசியம் என உணர்ந்தேன். பிறகு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பாடப் பிரிவில் சேர்ந்தேன். ஆனால், அங்கு திருக்குறள், நாலடியார் எனத் தீவிர இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தந்ததால், பேச்சுத் தமிழுக்காகக் கிராமத்தை நோக்கிப் பயணமானேன்.

அங்குதான் எனக்குக் கூத்து அறிமுகமானது. இந்த அற்புதமான கலைக்கு, துரதிருஷ்டவசமாக மக்களிடம் மரியாதை இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. கூத்தையே ஒரு பாடமாக எடுத்து பி.ஹெச்டி ஆய்வும் முடித்தேன். ஒரு கூத்துக் கலைஞரையே திருமணம் செய்து, காஞ்சியில் தங்கி பணியாற்றி வருகிறேன்!'' தெளிவான தமிழ்ப் பேசுகிறார் ஹேனி டி ப்ருவின். நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண், தமிழரின் பார்வையில் இருந்து காணாமல் போன கூத்துக் கலையை வளர்க்கும் பணியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளார்.

கூத்து கட்டலாம் வாங்க!

காஞ்சிபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள புஞ்சரசந்தாங்கல் கிராமத்தில் கூத்துப் பயிற்சிக்கு என்றே சுமார் 6 ஏக்கரில் பிரமாண்டமாக இவர்கள் அமைத்துள்ள கூத்துக் கலைக் கூடம் பற்றி ஹேனி டி. ப்ருவின் - ராஜகோபால் தம்பதி பேசுகிறார்கள்.

''இயல், இசை, நாடகம் என முத் தமிழும் தொடர்புடைய கலை, கூத்து. இந்தக் கலைஞர்கள் வெறும் நடிப்போடு தங்களை முடக்கிக் கொள்ளாமல், அத்தனை பணி களையும் செய்யும் திறமை பெற்றவர்கள். உடல் முழுவதும் கட்டைகளால் ஆன அலங்காரத்தைத் தூக்கிக்கொண்டு ஆடி, பாடி, பேசி என அனைத்துத் திறமைகளும் சங்க மிக்கும் தனித்துவம் மிக்க கலை.

இவ்வளவு சிறப்பான கலையை மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில் தீவிரமாக இயங்கினேன். அதுபற்றிய ஆய்வின்போதுதான் ராஜகோபாலைச் சந்தித்தேன். கூத்துக் கலைஞரான அவரிடமும் அதேவித உணர்வுகள். இரு மனம் இணைந்ததால், திருமணம் செய்து கொண்டோம்!'' என்கிற ஹேனியை இடை மறித்துத் தொடர்கிறார் ராஜகோபால்.

''காஞ்சிபுரத்தை அடுத்த பெருங்கட்டூர்தான் என் சொந்த ஊர். அப்பா பொன்னுசாமி, தாத்தா சந்திரன் இருவரும் அந்நாளில் பிரபல கூத்து வாத்தியார்கள். 6 வயதில் இயல்பாக ஆர்வம் ஏற்பட்டு அப்பாவின் கம்பெனியில சேர்ந்தேன். நிச்சயமற்ற வருவாய் காரணமாகத் தொழில்ரீதியான கலைஞர்களும் வேறு தொழிலை நாடினர். இக்கலை பற்றிய தவறான அபிப்ராயத்தால் நாளடைவில் கூத்து நிகழ்ச்சிகள் குறைந்தன. வெறும் கலைஞனா மட்டும் வாழ்க்கையை நகர்த்தப் பிடிக்கலை. அந்தச் சமயத்தில்தான் ஹேனியைச் சந்தித்தேன். நோக்கம் ஒன்றாக இருந்ததால் வாழ்க்கையில் இணைந்தோம்!'' என்கிறார்.

கூத்து கட்டலாம் வாங்க!

''கூத்துக் கலைஞர்களை ஒருங்கிணைப்பதற்காக 1990-ல் கட்டைக் கூத்து சங்கம் உருவானது. கலைஞர்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி அதன் மூலம் கலையை வளர்ப்பதே இதன் நோக்கம். 200-க்கும் மேற்பட்டவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். மகாபாரதம், ராமாயணத்தையும் கூத்தாக நடத்தி வருகிறோம். தவிர, இன்றைய அரசியல் சமூகச் சூழலுக்குத் தக்கவாறு கதை அமைப்பை மாற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் நவீன நாடகங்களையும் அரங்கேற்றி வருகிறோம். உடை, ஆபரணம் என அனைத்தும் இங்கேயே தயாராகிறது!'' என்கிற ஹேனி, 2002-ல் முறையான கூத்துப் பயிற்சி அளிக்க 'குருகுலம்’ என்ற பட்டறையைத் தொடங்கினார். இதில் ப்ளஸ் டூ வரையிலான ரெகுலர் பள்ளி இயங்கி வருகிறது. அதில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கூத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.

''இப்போது 80 மாணவர்கள் கூத்துக் கலை பயில்கிறார்கள். இதில் சரிபாதியினர் மாணவிகள் என்பது எங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. ஆடி மாதத்தில் வெளிமாநில, வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொள்வது இல்லை. தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்கள் களைகட்டும் அம்மாதம் முழுவதும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த பயணப்படுவோம். மாதத்தில் 10 நாட்கள் நிகழ்ச்சி. அதுவும் சனி, ஞாயிறு மட்டுமே. கூத்துப் பயிற்சி முடிப்பவர்களை சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, தொழில்ரீதியாக நிகழ்ச்சிகளில் வாய்ப்பு அளிக்கிறோம். ஒரு பக்கம் மகாபாரதக் கூத்து, மறுபக்கம் அல்ஜீப்ரா!'' என்று ராஜகோபாலின் கரம் பற்றிச் சிரிக்கிறார் ஹேனி.

- எஸ்.கிருபாகரன்
படங்கள்: வீ.ஆனந்தஜோதி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு