Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

மதுரை வீரன் மேல சத்தியம்!

##~##

ன் சொந்த ஊரான திண்டுக்கல் பற்றி மனம் திறக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்...

''திண்டுக்கல் பிள்ளையார்பாளையம் காளியம்மன் கோயில் தெருதான் என் பூர்வீகம்.  இப்பவும் அந்தத் தெருவுக்குள்ள 'முரளி’னு சொன்னா பலருக்கு என் முகம் மனசுல வந்துடும். அந்தளவுக்கு அங்கிருந்த எல்லாரும் தாயா, பிள்ளையா பழகினாங்க.  

என் ஊர்!

செயின்ட் மேரீஸ் பள்ளிக்கூடத்தில் படிச்சேன்.  மனோகரன், சரவணன்னு ஆரம்பிச்சு என் நண்பர்கள் பட்டாளம் ரொம்பப் பெருசு. சின்ன வயசுலயே பிதாமகன் கணக்கா காளியம்மன் கோயில் தெரு பின்னாடி சுடுகாடே கதினு  கெடப்போம். சுடுகாட்டுல கிடக்குற மண்டை ஓடுகளை வெச்சுத்தான் ஃபுட்பால் விளையாடுவோம். அப்ப அந்த ஏரியா ஒரே வனாந்தரமா இருக்கும். அநாதைப் பொணங்களை கொண்டுவந்து போட்டுட்டுப் போயிடுவாங்க. பல அநாதைப் பொணங்களுக்கு எங்களை கூப்பிட்டுதான் மண்ணு தள்ள வெப்பாங்க. ஒரு தடவை ஒரு பொணத்தை அடக்கம் பண்றதை வீட்டுல பாத்துட்டாங்க. செம அடி கொடுத்து 'இனிமே சுடுகாடு பக்கம் போக மாட்டேன்’னு மதுரை வீரன் சாமி மேல சத்தியம் வாங்கிட்டாங்க.

ராம்குமார்னு ஒரு பையன்தான் எங்க கேங் லீடர். நேருஜி நகர், பாண்டியன் நகர் ஏரியாவில் அப்பத்தான் அங்கங்கே வீடுகள்  கட்டிக்கிட்டு இருந்தாங்க. எங்க லீடர் தலைமையில் அங்கே இருக்கும் தென்னை மரத்துல அடிக்கடி தேங்காய்த் திருடுவோம். ஒரு தடவை இன்ஸ்பெக்டர் வீடுன்னு தெரியாம தேங்காய் திருடி மாட்டிக்கிட்டோம். மனுசன் கட்டி வெச்சு உரிச்சு எடுத்துட்டாரு. ஆனாலும் நாங்க அசரலையே.. அடுத்த நாளே திரும்பவும் தேங்காய்த் திருட ஆரம்பிச்சுட்டோம்.  

என் ஊர்!

இப்படி சின்ன வயசில் ஏகப்பட்ட குசும்பு பண்ணி இருக்கேன். அப்பத்தான் கிரிக்கெட் பிரபலமாகிட்டு இருந்தது. கிருஷ்ணாராவ் தெரு அக்ரஹாரத்துப் பசங்க மட்டும்தான் கிரிக்கெட் விளையாடுவாய்ங்க. எங்களை சேத்துக்க மாட்டாய்ங்க. நாங்க பதிலுக்கு அவங்க விளையாடுற இடத்தில் போயி மண்டை ஓட்டைவெச்சு ஃபுட்பால் விளையாடுவோம். அதைப் பாத்ததும் அந்தப் பசங்க கிலி பிடிச்சு கத்திக்கிட்டே ஓடுவாய்ங்க.

நாங்க ஆவலா எதிர்பாக்குறது மாசி மாசம் நடக்கும் கோட்டை மாரியம்மன் திருவிழாவைத்தான். பதினைஞ்சு நாளும் ஊரே உற்சாகமா இருக்கும். அங்கிங்கு பாட்டுக் கச்சேரிக்கு யாராவது ஒரு பிரபலத்தைக் கூப்பிட்டு வருவாங்க. இப்பமும் 'இந்த வருஷம் பாட்டுக் கச்சேரிக்கு யாரு வந்தா?’னு பயலுககிட்ட கேட்டுக்குவேன்.

என் ஊர்!

நான் படிச்ச ஜி.டி.என் காலேஜ் ஊரை விட்டுத் தள்ளி இருந்தது. அது பசங்க மட்டும் படிக்கும் காலேஜ். எம்.வி.எம். காலேஜுல படிக்குற பொண்ணுங்கள்லாம் 'காட்டு காலேஜ் பசங்க’னு எங்களைக் கிண்டலடிப்பாங்க.

காலேஜுக்கு கட் அடிச்சுட்டு மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும்ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் உக்காந்துக்குவோம். அங்கே உக்காந்துதான் சினிமாவில் இருந்து சைட் வரைக்கும் எல்லா விஷயத்தையும் பேசுவோம்.

திண்டுக்கல்ல எனக்குப் பிடிச்சது பெரிய ஆஸ்பத்திரியில இருந்து திருச்சி போற ரோடுதான். அதான் 'காதல்’ படத்துல மொத ஸீனை அந்த ரோட்ல எடுத்தேன். அந்தப் படத்துக்கு  டிராலி, கேரவன்னு எதுவுமே இல்லாம ரொம்ப சிம்பிளா ஷூட்டிங் நடத்தினோம். ஷூட்டிங்ல சாப்பிடச் சொன்னாக்கூட எங்க பசங்க சாப்பிட மாட்டாய்ங்க. 'வேணாம்பா நீயே கஷ்டப்பட்டு படம் எடுக்குற... நாங்க வீட்லயே சாப்பிட்டுக்குறோம்’னு சொல்லிடுவாய்ங்க. அந்தளவுக்குப் பாசக்காரப் பசங்க.

என் ஊர்!

வாழ்க்கைச் சக்கரம் உருண்டு இன்னிக்கு ஒரு டைரக்டரா சென்னையில செட்டில் ஆகிட்டாலும், போற வர்ற இடங்கள்ல திண்டுக்கல்னு பேரு காத்துவாக்குல காதில் விழுந்தா உடம்பு தன்னால சிலுத்துக்குது!''

- ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவக்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு