Election bannerElection banner
Published:Updated:

அழகான அஞ்சலி!

அழகான அஞ்சலி!

##~##

துரை மூலக்கரை நல்லமுத்துப்பிள்ளை ரோட்டில் கார்ப்பரேட் அலுவலகம் போல் ஒரு நவீனக் கட்டடம். நுழைவாயிலில் நீர் ஊற்று வரவேற்க, தூய்மையான நடைபாதை. இடையில் காற்றில் அலையும் பூஞ்செடிகளுக்கு மத்தியில் இன்றைய வருகையாளர்கள் சிலரது பெயர்களும் நேரமும் பட்டியலில் பளிச்சிடுகிறது. பின்னணியில் காற்றில் மெல்லிசை தவழ்கிறது.

 'ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க;
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க;
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க;
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!’

- பாடல் வரிகளைக் கூர்ந்து கவனித்தால், புலப்படுகிறது அந்த இடம் தியான மண்டபம் அல்ல.. மயானம்!

அழகான அஞ்சலி!

மதுரையில் சுற்றுப்புறத்தை மாசு படுத்தாத எரிவாயு தகனம், தகனத்தைப் பார்க்க நெருங்கிய உறவுகளுக்குக் கண்ணாடி அறை, இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கடன் செய்ய மண்டபம், மனஅமைதி பெற தியான மண்டபம், சுத்தமான கழிவறை, குளியல் அறைகள் என்று ஆச்சர்யப்படுத்துகிறது இந்த மயானம். இந்த வசதிகளை எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தது

மாநகராட்சி என்றாலும் ஓராண்டுக்கும் மேலாக அதே தரத்துடன் பராமரித்து வருகிறது 'ரோட்டரி மதுரை மிட்டவுன்’ அமைப்பு.

அழகான அஞ்சலி!

அதன் தலைவர் வழக்கறிஞர் ராமபாரதியிடம் பேசினோம். ''மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு மழைக்காலத்தில் என் பெரியப்பா இறந்துட்டார். உடலை தகனம் பண்ண  நாகனாகுளம் சுடுகாட்டுக்குப் போனேன். சுற்றிலும் குப்பை. நிற்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம். தகனம் பண்ற இடத்தில் கூட்டமா பன்றிகள் இருந்தன. அவற்றை விரட்டிவிட்டு பெரியப்பாவின் உடலை எரிச்சோம். அந்த உடலோட எங்க  மனசும் வெந்துப் போச்சு. பெரியப்பா இறந்ததுக்குக் கூட நான் அழலை. அவரது உடலை இப்படி ஓர் இடத்தில் தகனம் பண்றோமேன்னு நினைச்சுதான் கதறி அழுதுட்டேன். 'ஏன், இப்படி இருக்கு?’னு விசாரிச்சப்போ, நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டம் கிடப்பில் கிடந்தது தெரிஞ்சுது. அந்தத் திட்டத்தைச் சீக்கிரமா செயல்படுத்த முடிவு செஞ்சோம். மாநகராட்சியோடு சேர்ந்து ரோட்டரி மிட்டவுன் அமைப்பும் களம் இறங்குச்சு. எங்க ஆர்வத்தைப் பார்த்துட்டு, அதை நிர்வாகம் பண்ணும் வேலையை எங்களிடமே ஒப்படைச்சது  மாநகராட்சி.

அழகான அஞ்சலி!

இந்த மாயானத்தில் பாடை, மேள தாளம், வெடிக்குத் தடை. 1,350 ரூபாய் கொடுத்தால், இறந்தவரின் வீட்டுக்கே ஆம்புலன்ஸில் சடலத்தைக் கொண்டுசென்று இறுதிக் கடன்களை செய்வோம். இதை ஒரு கார்ப்பரேட் அலுவலகம் மாதிரியே நடத்திட்டு இருக்கோம். யூனிஃபார்ம் அணிந்து 21 பேர் வேலை பார்க்குறாங்க. இங்கே யாரும் மது அருந்துவதோ, இறந்தவரின் உறவினர்களிடம் பணம் கேட்பதோ கிடையாது. இங்கே கேட்கும் பாட்டு, ஈரோடு ரோட்டரி சங்கத்துக்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல். இந்த இடத்தை நாங்கள் மயானம், சுடுகாடுனு சொல்றது இல்லை. 'அஞ்சலி’னுதான் கூப்பிடுறோம்!'' என்கிறார் ராமபாரதி.

இறுதிச் சடங்கு, தகன நிகழ்ச்சியை வெளிநாட்டில் இருக்கும் அவர்களது உறவினர்கள் பார்க்க வசதியாக வீடியோ எடுத்து சி.டி.யை வழங்குகிறார்கள். அடுத்த கட்டமாக www.rotaryanjali.comஎன்ற வெப்சைட் மூலம் நேரடியாகப் பார்க்க ஏற்பாடு செய்து வருகிறார்களாம்!

- கே.கே.மகேஷ், படங்கள்: க.கார்த்திக்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு