Election bannerElection banner
Published:Updated:

சில்க்கி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி... ஆரணிய காண்டம்

சில்க்கி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி... ஆரணிய காண்டம்

##~##

ரிசிக்கு எப்போதும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத இடம் உண்டு! தேர்தல்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில்கூட முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது அரிசி! ஒரு ரூபாயில் இருந்து இலவசமாக மாறி இருக்கும் சலுகை சதுரங்கத்தின் பகடை, அரிசிதான்! அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரிசி, ஆரணியில் ரொம்பவே பிரசித்தம். பட்டுக்குப் போலவே அரிசிக்கும் பெயர் பெற்றதுதான் ஆரணி.

 ஆரணியைச் சுற்றி உள்ள களம்பூர், சேத்துப்பட்டு, செஞ்சி, போளூர், மூலக்காடு ஆகிய பகுதிகளில் நெல் விளைச்சல் அதிகம். இதனால் இந்தப் பகுதிகளில் மாடர்ன் ரைஸ் மில்களும் அதிகம். பதப்படுத்தப்பட்ட அரிசி தயாராகும் விதம்பற்றி அறிய... அம்மாயி அம்மாள் மாடர்ன் ரைஸ் மில் அதிபர் தினேஷ்பாபுவிடம் பேசினோம்.

சில்க்கி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி...  ஆரணிய காண்டம்

''இந்தப் பகுதியில் வெள்ளைப் பொன்னி, டீலக்ஸ் பொன்னி, குண்டு அரிசி என மூன்று வகையான அரிசிகள் தயாராகின்றன. வெள்ளைப் பொன்னி ஆறு மாதப் பயிர். டீலக்ஸ் பொன்னி மற்றும் இட்லி அரிசியான குண்டு அரிசி, இரண்டுமே மூன்று மாதப் பயிர்கள். முதலில் நெல்லை வாங்கி வந்து  தொட்டியில் கொட்டி 18 மணி நேரம் தண்ணியில் ஊறவைப்போம். அதன் பிறகு அந்தத் தொட்டியின் அடிப்பகுதி வழியாகத் தண்ணீரை வெளியேற்றி விடுவோம். அதன் பிறகு நீராவி மூலம் அரிசியை அவிப்போம். அவித்த பிறகு, ஒருநாள் முழுக்கக் களத்தில் காயவெச்சு, 18 மணி நேரம் டிரையரில் காய வைப்போம். டிரையரில் இருந்து எடுத்து அல்லர் போடுவோம். அது ஒயிட்நர், சில்க்கி கிரேடர், கலர் சார்ட்டர் என படிப் படியாகச் சென்று தரமான அரிசி தயாராகிவிடும்.

சில்க்கி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி...  ஆரணிய காண்டம்

நெல்லில் இருந்து தவிடையும் பதரையும் தனித் தனியாகப் பிரித்து விற்றுவிடுவோம். பதர் மாட்டுத் தீவனமாகப் பயன் படுகிறது. தவிட்டில் இருந்து தவிடு எண்ணெய் தயாரிக்கிறார்கள். தவிட்டு எண்ணெயில் கொலஸ்ட்ரால் மிகமிகக் குறைவு என்பதால் இந்த வகை எண்ணெய்க்குத் தற்போது டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

ஒரு மூட்டை நெல் 76 கிலோ கொண்டதாக இருக்கும். இந்த 76 கிலோ கொண்ட நெல் மூட்டையில் இருந்து, 49 கிலோ அரிசிதான் தயாரிக்க முடியும். 20 கிலோ தவிடாகிவிடுகிறது. மீதி 7 கிலோ வேஸ்ட், அதாவது பதர்.  இதில் உடைந்து கிடைக்கும் அரிசியைத்தான் குருணை அரிசி அல்லது நொய் அரிசி என்கிறார்கள். இந்த நடைமுறையில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த கலர் சார்ட்டட் மெஷின் தான். அது முழுமையாகக் குளிரூட்டப் பட்ட அறையில்தான் இருக்க வேண்டும். இந்த மெஷின்தான் வெள்ளை அரிசியைத் தனியாகவும், கல், கறுப்பு அரிசி, பழுப்பு அரிசியைத் தனித்தனியாகவும் பிரிக்கிறது. இதை எல்லாம் முன்னர் ஆட்கள்தான் கைவேலையாகச் செய்துவந்தார்கள். இப்போது உழவு செய்யவே ஆட்கள் கிடைக்காத நிலையில், இந்த வேலைக்கு எல்லாம் ஆள் கிடைப்பது ரொம்பவும் சிரமம்.

அதேபோல் பாலீஷ் மெஷின், அரிசியைத் தரமான அரிசியாக பாலீஷ் செய்து கொடுக்கிறது. அதிக பாலீஷ் செய்யப்படும் அரிசியைத்தான் தற்போது கடைகளில் 'சில்க்கி அரிசி’ என்று விற்கிறார்கள். ஸ்டீம் அரிசி, பாயில்டு அரிசி, புழுங்கல் அரிசி, பச்சரிசி என்று வகை வகையாகப் பிரித்து விற்கப்படுகிறது.

பிராசஸ் முடிந்து அரிசியாக வெளியே வந்ததும் அது 25 கிலோ மூட்டை, 75 கிலோ மூட்டையாகப் பேக் செய்யப் பட்டு மார்க்கெட்டுக்கு அனுப்பப் படுகிறது. இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டு உற்பத்தி ஆகும் அரிசி, தமிழ்நாடு முழுவதும் செல்கிறது. குறிப்பாக திருவண்ணா மலை, வேலூர், ஆம்பூர், ஆற்காடு என ஓசூர் வரை செல்கிறது. குண்டு அரிசிக்கு கர்நாடகா, ஆந்திரா, மைசூரில் நல்ல வரவேற்பு. இங்கு இருந்து சுமார் 75 சதவிகித அரிசி சென்னைக்குத்தான் செல்கிறது.

சில்க்கி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி...  ஆரணிய காண்டம்

ஒரு அரிசி ஆலை நிறுவ, இட மதிப்பு தவிர்த்து 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை மூலதனம் தேவைப்படும். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன!'' என்று அக்குவேறு ஆணிவேறாக அரிசி தயாராகும் விதத்தை விவரித்தார் தினேஷ்பாபு.

இனி, ஒரு பருக்கைக்கூட கீழே சிந்தாமல் சாப்பிடுங்கப்பு!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு