Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

சங்கராபரணி எழுதிய ஒரு கவிதை

##~##

'' 'என் ஊர்’ என்று நினைத்தவுடன், ஆற்றையே ஒரு கலக்குக் கலக்கி, நீந்திக் களித்து, கண்கள் சிவந்து, ஈரப் பாவாடை சரசரக்கப் பாதை எல்லாம் நீர் சொட்டச் சொட்ட பயந்தபடி வீட்டுக்கு வரும் பள்ளி நாட்கள்தான் எனக்குள் தோன்றும்!'' - வில்லியனூர் பற்றிய நினைவுகளின் நிழலாட பேசத் தொடங்கினார் கவிஞர் மாலதிமைத்ரி.

 ''சங்கராபரணி இரண்டு கரையும் புரண்டு ஓடும் மழைக் காலம் ஆகட்டும், கோகிலாம்பாள் வடமென முறுக்கி ஓடும் கோடைக் காலம் ஆகட்டும்... அதன் அழகே தனி! வெள்ளக் காலங்களில் பள்ளி விடுமுறை. வெள்ளம் பாய்ந்து ஓடும் சாலையில் ஒருவரோடு ஒருவர் கைகோத்தபடி ஆற்றங்கரைக்கு ஊரே திரண்டு போய் திருவிழாபோல் வெள்ளப் பெருக்கைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்போம்.

என் ஊர்!

ஒவ்வொரு முறை வெள்ளம் வரும்போதும் 1969-ம் ஆண்டு வெள்ளத்தைப்பற்றிய கோரக் கதை எல்லார் பேச்சிலும் இடம்பிடித்து பாரம் மனதை அழுத்தும். வளைகாப்பு முடிந்து கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தன் குடும்பத்துடன் அடை மழையில் ஒரு அம்பாஸடர் காரில் பிறந்த வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தாள். ஆரியப்பாளையம் தரைப் பாலத்தின் வெள்ளத்தைக் கடக்கும்போது கார் அடித்துக்கொண்டு போய் நடு ஆற்றின் மண்மேட்டில் சொருகி நின்றுவிட்டது. அந்தக் குடும்பமும் காப்பாற்றப் போன காவல் துறை ஆய்வாளர் கொண்டா கோடீஸ்வர ராவும் தீயணைப்புத் துறை அதிகாரி நடராஜும் அந்த வெள்ளத்தில் சிக்கிப் பலியாயினர். என் அப்பா வும் உடன் வந்த இன்னொரு காவலரும் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு நீந்தி அருகில் போக முயன்றனர். அப்பாவுக்கும் அவர்களுக்கும் 10 அடி தூரம் இருக்க... வெள்ளம் திடீர் என்று வேகம் எடுக்க... அப்பாவின் கண் எதிரில் அதிகாரிகளை யும் காரில் இருந்த குடும்பத்தினரையும் வெள்ளம் இழுத்துப்போனது. பயந்துபோய் கரைக்கு வர நினைத்துத் திரும்பும்போது, தண்ணீரில் அடித்து வந்த மரம் மோதி, இரண்டு பாறைகளுக்கு நடுவில் போய் மாட்டிக்கொண்டார். கரையில் இருந்தவர் கள் கயிற்றைப் பிடித்து இழுத்து அப்பாவைக் காப்பாற்றினார்கள். இந்தச் சம்பவத்துக்கு அடுத்த ஆண்டே சங்கரா பரணிக்குப் புதிய பாலம் கட்டினார் கள்.

என் ஊர்!

நாலு பேர் சேர்ந்து அணைத்தாலும் திமிறும் தூங்குமூஞ்சி மரங்களின் நிழல் தொடரும் சாலைகள். பத்துக்கண்ணு மதகில் இருந்து ஆல விழுது எனக் கிளை பிரிந்து ஓடி வரும் ஊசுட்டேரி வாய்க்கால்கள் வில்லியனூ ரைச் சுற்றித் தண்ணீரால் கோலமிட்டு இருக்கும். நகரமயமாதலும் கண்மூடித்தனமான தொழில் வளர்ச்சியும் ஊருக்குள் புகுந்த தீவட்டிக் கொள்ளையர்கள்போல, இந்த அழகை எல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு போய்விட்டது. ஊசுட்டேரி வாய்க்கால்களையும் சங்கராபரணி யையும் கொசு உற்பத்திப் பண்ணைகளாக உருவாக்கிவைத்து இருக்கின்றனர் ஆட்சியாளர் கள்.

10 நூற்றாண்டுகளைக் கடந்து வைகாசி மாதத் தில் உச்சி கிடுகிடுக்க... குடைசாய்ந்து ஆடிக் கொண்டு, சிறுவர்களைப் பயமுறுத்தியபடி நான்கு வீதியில் ஓடி வந்து நிற்கும் மிகப் பிரமாண்டமான கோகிலாம்பாள் தேர்.    சித்திரை மாதத்தில் வில்லியனூர் மாதா கோயில் திரு விழாவில் ஊரே அழகழகான கறுப்புச் சட்டிப் பானைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

இன்று ஊர் வளர்ந்து சிறு நகர மாக மாறி, வசதி வாய்ப்புகள் பெருகி இருக்கிறது. மனிதர்களின் சாதிய வன்மம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆகுமோ? ஊரும் சேரியும் இன்னும் தனித் தனியாகத்தான் உள்ளன. சிறு பூசலை யும் பெரிய ஊர்க் கலவரமாக மாற்றி ஆதிக்க சாதியினர் தலித்துகளைத் தாக்குவது இன்றும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. அதில் ஒரு மாற்றம்... இப்போது தலித்துகளும் திருப்பித் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இன்று குடிநோயும் கொலையும் பெருகி, பெண்கள் வாழ அஞ்சும் ஊராக மாறிவிட்டது எங்கள் பகுதி.

என் ஊர்!

இத்துடன், புதுச்சேரி மாநில மக்களுக்கே உரித்தான சோம்பேறித்தனமும் அறிவுத் தேக்கமும் பிரத்யேகமானவை. ஞானம் வளர்த்த பூமி, அறிவு வளர்த்த பூமி என்பவை எல்லாம் பழங் கதைகள். பாரதி, பாரதிதாசனைத் தாண்டி நவீன இலக்கியமும் பன்மொழி இலக்கியமும் படித்து ஏற்பவர்கள் மிக மிகக் குறைவு. அன்று பாரதியை வாழவைத்தது இந்தப் புதுச்சேரி அரசும் மக்களும்; இன்று பிரபஞ்சனை நின்று வாழவிடாமல் துரத்துவதும் இந்தப் புதுச்சேரி அரசும் மக்களும்தான். விவரம் தெரிந்த நாள் முதல் இந்த நிலத்தில் அந்நியமானவளாகவே உணர்கிறேன். கருத்து மாற்றங்களையும் நவீனத் தன்மைகளையும் வெறுக்கும் இந்த மக்கள் கூட்டத்துக்கு நடுவில் மாற்றங்களுக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறேன்!''

படங்கள்: ஜெ.முருகன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு