Election bannerElection banner
Published:Updated:

அப்போ...

கலையூர் சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்!

##~##

நேகமாகக் 'கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்...’ பாடல் அந்த ஊரின் தேசிய கீதமாக இருந்திருக்கக் கூடும்!

 புதுச்சேரி கலையூர் கிராமம்தான் அந்தக் கல்யாணச் சாப்பாடு கிராமம். புதுச்சேரியைச் சுற்றியுள்ள கிராமங் களில் நடக்கும் திருமண விருந்துகள், கலையூர்க் காரர்களின் கைவண்ணத்தில்தான் களைகட்டும். அதுவும் 'கலையூர் ரசம்’ என்றால், இன்னமும் வயது முதிர்ந்தவர்களின் நினைவில் மணக்கும். 'கலையூர் சமையல்காரங்க சாப்பாடு தெரியுமில்ல!’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வார்கள் கல்யாண வீட்டார்.

அப்போ...

ஆங்கிலப் பத்திரிகைகள், வடநாட்டுப் பத்திரிகைகள் என்று பல பத்திரிகைகளிலும் இந்த கல்யாணச் சமையலுக்காகவே பதிவுசெய்யப்பட்ட கலையூர், இன்று களையிழந்துகிடக்கிறது. ''அது ஒரு காலமுங்க. காய்கறிகளைப் பதமா அறுக்குறதுக்கும் பக்குவமாச் சமைக்கிறதுக்கும் தனித் தனி டிபார்ட்மென்ட்டா ஆண்களும் பெண்களுமா ஆட்கள் இருந்தாங்க. அவ்வளவு ஏன், ஒவ்வொரு குரூப்பிலும் சாம்பார், ரசத்தில் உப்பும் காரமும் சரியா இருக்கா, பாயாசத்தில் சர்க்கரை அளவா இருக்கானு பார்க்கிறதுக்கே ஒரு ஆள் இருப்பாங்க. பெரிசா ஒண்ணும் வருமானம் இல்லாட்டியும் மனசுக்குத் திருப்தியா இருந்தது. ஆனா, இப்போ சமையல் வேலை செய்யறதுக்கு ஆட்கள் கிடைக்கிறது இல்லை!'' என்று அலுத்துக்கொள்கிறார் ரங்கநாதன். மூத்த சமையல் கலைஞரான ரங்கநாதனின் தொழில் அனுபவம் 40 ஆண்டுகள்.

  ''பரம்பரையா இந்தத் தொழில்தான் செஞ்சுட்டு வந்தோம். ஆனா, இப்போ என் பசங்க விவசாயம் பார்க்குறாங்க. படிச்ச பசங்க இந்தத் தொழிலுக்கு வர்றதில்லைங்கிறது புரிஞ்சிக்கக்கூடிய விஷயம்தான். ஆனா, சாதாரண மக்களும் இப்போ சமையல் வேலைக்கு வர்றது இல்லை.

அப்போ...

கல்யாண வீடுன்னா ரெண்டு நாள் வேலை இருக்கும். கூலியும் பெரிசா கிடைக்காது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செஞ்சா உடனே சம்பளம் கிடைக்குது. கண் எரிய, எரிய வெங்காயம் நறுக்கவோ, அடுப்பில் வெந்து வேகவோ தேவை இல்லை பாருங்க!

மத்தவங்க மனசையும் வயித்தையும் திருப்திப் படுத்தும் சமையல், வெறும் தொழில் இல்லை... அது ஒரு கலை! ஏதோ அரிசி, பருப்பை ஆக்கி முடிச்சா சாப்பாடு தயாராயிடாது. சாம்பார் சுவையாவும் மணமாவும் இருக்கணும்னா சின்ன வெங்காயமும் கொத்துமல்லித் தழையும் தாராளமா சேர்க்கணும். காரக் குழம்பில் பூண்டும் சின்ன வெங்காயமும் அதிகம் சேர்க்கணும். கத்திரிக்காயைக் குழம்புல அப்படியே போடாம, கொஞ்சமா எண்ணெயில் வதக்கிப் போட்டா குழம்போட சுவையே தனி. ரசத்துல புளிப்பு அதிகம் வேணும்னா நாட்டுத் தக்காளி, கொஞ்சமா இருந்தா போதும்னா  பெங்களூரு தக்காளி. வகை வகையா ரசம் வைக்க தக்காளிக்குப் பதில் பைனாப்பிளைப் பதமா நெய்யில் வறுத்து, பைனாப்பிள் ரசம் வைக்கலாம். இப்படி ஏகப்பட்ட நுணுக்கங்கள் இருக்கு.

அப்போ...

இந்தக் கிராமத்துக்குச் சரியான பஸ் வசதி இல்லாததும் இந்தத் தொழில் நொடிச்சுப் போனதுக்கு முக்கியக் காரணம். இப்பப் போய்ப் பார்த்தா, ஊருல கிணறு வெட்ற வேலை நடக்குது. பாதி ஜனம் அங்கேதான் இருக்கும். அவங்களைச் சொல்லித் தப்பு இல்லை, காலம் மாறுதுல்ல?'' என்று சொன்னாலும் ரங்க நாதனின் குரலில் கலக்கமும் நடுக்கமும் தெரியத்தான் செய்கிறது!

   - நா.இள.அறவாழி, படங்கள் : எஸ்.தேவராஜன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு