Election bannerElection banner
Published:Updated:

எளிமையின் அடையாளம் அப்துல் கலாம்!

பாண்டிச்சேரி பரமேஸ்வரன் நாயர்

##~##

ப்துல் கலாம் - இன்றைய இளைஞர்களின் ஆதர்சம்! 'கனவு காணுங்கள்’ என்னும் கலாமின் வார்த்தைகளை நரம்புகளில் க்ளூகோஸாக ஏற்றிக் கொண்டு கண்கள் முழுக்கக் கனவுகளோடு திரிகிறார் கள் இளைஞர்கள். அப்துல் கலாமின் செயலராகப் பணிபுரிந்து, தற்போது புதுவையில் வசிக்கும் பரமேஸ்வரன் நாயர், கலாமுடனான தன் அனுபவங்கள் குறித்து இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''1966-ம் ஆண்டு எம்.ஏ. முடிச்ச கையோட, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி பாஸ் ஆனேன். தொடர்ச்சியாக இந்தியாவின் பல மாநிலங்களில் பலவிதமான நிர்வாகப் பணிகள். 1975-ல் புதுச்சேரியில் ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். 1951-ல் கேரளாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்தான் முதன்முதலா கலாம் சாரைச் சந்தித்தேன். நான் நிர்வாகத் துறையில் தலைமை அதிகாரி. கலாம் தலைமை விஞ்ஞானி களில் ஒருவர். எல்லோரும் சரியா சாயங் காலம் 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பிடுவாங்க. ஆனா, கலாம் சார் மட்டும் ராத்திரி 10 மணிக்கு மேலும் வேலை பார்ப்பார். சமயங்களில் அங்கேயே தூங்கிவிடுவதும் உண்டு. மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து வழக்க மான வேலைகளை ஆரம்பித்துவிடுவார். அந்த ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் அவருக்கு இந்தியாவின் முதல் குடிமகன்கிற அந்தஸ்தைத் தந்தது!  

எளிமையின் அடையாளம் அப்துல் கலாம்!

சில வருடங்களில் நான் ஆயுத உற்பத்தி துறைக்கு மாற்றப்பட்டேன். எனக்கும் அவருக்கும் பெரிய இடைவெளி ஆகி விட்டது.

2002-ல் கலாம் ஜனாதிபதி ஆனார். ஒருநாள் நான் என்னோட சீனியர், 'கலாம் உங்களைப் பார்க்க விரும்பறார்’னு சொன்னார். பிறகுதான் தெரிஞ்சுது கலாம் என்னைத் தன்னோட பெர்சனல் செக்ரட்டரியா நியமிச்சு இருக்குற விஷயம். பரவசமான அனுபவங்கள் அளித்த ஐந்து வருடங்கள் அவை!

ஒரு முறை ராஷ்டிரபதி பவனுக்கு கலாம் சாரின் உறவினர்கள் வந்திருந்தாங்க. மொத்தம் 59 பேர். அவங்களோட சாப்பாடு, தங்கும் இடம் தொடங்கி டீ வரைக்கும் ஆன செலவை கலாமே கொடுத்துவிட்டார். இதுவாவது பரவாயில்லை. கலாமின் அண்ணன் கலாமின் அறையில் அவரோடு தங்கி இருந்தால், அந்த அறைக்கான வாடகையையும் கொடுத்துவிடுவார்.

எளிமையின் அடையாளம் அப்துல் கலாம்!

ஒரு முறை கலாமின் அண்ணன் ஹஜ் பயணம் போனார். 'எப்படியும் பாஸ்போர்ட்டில் ஏ.பி.ஜே-ன்னு இனிஷியல் இருக்கிறதால் என் அண்ணன்னு தெரிஞ்சுடும். அதுக்காக அவருக்கு எந்த சிறப்புச் சலுகைகளும் தர வேணாம்னு தூதரக அதிகாரிகளிடம் சொல்லிடுங்க’னு சொன்னார். நெகிழ்ந்துட்டேன். ஒரு விபத்தில் சிக்கி, என் மனைவியின் கால் முறிந்தபோது, நேரடியா வீட்டுக்கு வந்து விசாரிச்சார். அந்த எளிமைதான் அப்துல் கலாமின் அடையாளம்.

இளைஞர்கள் மீதுதான் அவருக்கு அளவு இல்லாத நம்பிக்கை. ஆனால், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இணைய மாட்டார். அரசியல் கட்சி தொடங்கவும் மாட்டார். 'அறம், அறிவியல், ஆன்மிகம் இது மூன்றும் இணைந்த இளைஞர்கள்தான் இன்றையத் தேவை’னு அடிக்கடி சொல்வார். அவரோட ஆசைப்படியே அப்படியான இளைஞர்கள் 2020-ல் இந்தியாவை வல்லரசு தகுதிகளுடனான நல்லரசாக வடிவமைப்பார்கள்!''- சிலிர்ப்புடன் முடிக்கிறார் பரமேஸ்வரன் நாயர்.

- நா.இள அறவாழி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு