Published:Updated:

"இந்த பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" வைரமுத்துவின் 'கருவாச்சி காவியம்' நாவலின் பிரசவ அத்தியாயம் #CelebrateWomen

வி.எஸ்.சரவணன்
"இந்த பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" வைரமுத்துவின் 'கருவாச்சி காவியம்' நாவலின் பிரசவ அத்தியாயம் #CelebrateWomen
"இந்த பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" வைரமுத்துவின் 'கருவாச்சி காவியம்' நாவலின் பிரசவ அத்தியாயம் #CelebrateWomen

பெண்ணின் பிரசவகாலப் போராட்டத்தை எழுத்தில் தரிசிக்கத் தந்தவர் கவிஞர் வைரமுத்து, தன் 'கருவாச்சி காவியம்' நாவலில், நட்டநடுக்காட்டில், தன்னந்தனியாகப் பிள்ளை பெற்றுக்கொண்ட கருவாச்சியின் கதை சொல்லும் அந்த அத்தியாயம் இங்கே. கிராமத்து மொழிவழக்கில் பிரசவ ரத்த வாடையும், பச்சை உடம்பின் வாதையுமாகச் செல்லும் இந்த வரிகளைப் படித்து முடிக்கும்போது... பெண்கள் மீதான மரியாதை இன்னும் விரிந்து மலர்ந்திருக்கும் உங்களுக்குள்!  

காடு, நடுக்காடு.

காலம், சாயங்காலம்.

ஆகாயத்துல சூரியனையுங் காணோம்; அக்கம்பக்கம் ஆளுகளையும் காணோம்.

என்ன பண்ணுவா பாவம் இடுப்பு வலி எடுத்தவ?

'யாத்தே! என்னியக் காப்பாத்துங்க'ன்னு உசுர் கிழிய ஓங்கிக் கத்துனாலும் அந்த ஓசை கேக்குற ஒலி வட்டத்துக்குள்ள உசுருக எதுவும் இல்ல.

வெலாப்பக்கம் மின்னல் சுளீர் சுளீர்னு வெட்டி வெட்டிச் சுண்டுது. இடுப்புக்குள்ள யாரோ குடியிருந்துக் கிட்டே கோடாலி எடுத்து வெட்டுற மாதிரியிருக்கு.

'தடால்'னு தூக்கித் தரையில எறிஞ்சா வெறக.

பிள்ள பெறக்க ஒரு வாரம் பத்து நாள் ஆகும்னு கெழவிச் சொன்னது தப்பாப்போச்சே. இந்த வலி பொய் வலியாத் தெரிய லையே... உசுரக் கிண்டிக் கெழங் கெடுக்கிற வலியாத் தெரியுதே!

"கடவுளே என்னியக் காப்பாத்திரு. தாயும் பிள்ளையும் தனித்தனின்னு ஆக்கிரு."

எங்க போயி விழுகிறது?
நிக்கிற பூமி நெருஞ்சிக் காடு.

கெழக்க வறட்டாறு; மேற்க அகமலை; வடக்க இண்டம்புதர்க்காடு; தெக்க ஒரு கெணத்து மேடு. அங்க தெரியுது ஒரு காவக் குடிசை.

ஒரு முந்நூறு அடி தூரந்தான் இருக்கும்... முந்நூறு மைலாத் தெரியுது இடுப்புவலிக்காரிக்கு.

இடுப்புல கைய வச்சு அழுத்தி, வகுத்துல சிலுவை சொமந்து, ஒரு பக்கமா ஒருக்களிச்சு ஓரஞ்சாஞ்சு, நெருஞ்சி முள்ளு வழி நடந்து காவக்குடிசைக்குள்ள போயி விழுந்துபோனா.

சின்னக் குடிசை, குட்டையன்கூட அதுல குனிஞ்சுதான் போகணும். அகத்திக் கம்புகள ஊடுமரமா வச்சுத் தென்னங்கீத்துகள்ல கட்டிவச்ச குடிசை. சாமை வைக்கோலப் பரப்பியிருக்கு தரையில; இத்த சாக்கு ஒண்ணு விரிச்சுக்கெடக்கு அதுக்கு மேல, மறுகு கருது அறுத்துவச்ச கம்பங்கருது மூடைக ரெண்டு ஓரத்துல. பச்சைப் பிள்ளைக்காரி பிள்ளைய அட்டத்துல போட்டுப்படுத்திருக்க மாதிரி கம்பங்கருதுச் சாக்குகளுக்கு அங்கிட்டு ஒண்ணும் இங்கிட்டு ஒண்ணுமா ரெண்டு பூசணிக்கா. குடிசைக் கூரைக்கு மத்தியில கயிறு கட்டிச் சுக்காக் காஞ்சு தொங்குது சொரக்குடுக்க ஒண்ணு. இடுப்பப் புடிச்சு 'யப்பே! யாத்தே'ன்னு கத்திக் கதறிச் சாஞ்சு விழுந்து, சரிஞ்சு கெடக்கா கம்பங்கருது மூட்டையில கருவாச்சி.

"கடவுளே! ஒத்தையில பிள்ள பெறுன்னு
என் நெத்தியில எழுதிட்டியா?"

இந்த ஒலகத்துல மொதல் பிள்ள பெத்த பொம்பளைக்கு எவ பிரசவம் பாத்தது? அப்பிடி ஆகிப்போச்சா இந்தக் கருவாச்சி கத?

முண்டித் தவிக்குது பிள்ள; முட்டித் தெறிக்குது வலி. "இந்த பொழப்புக்குச் செத்தே போகலாம் போலிருக்கே!" பேறுகால வலியில துடிக்கிற எல்லாப் பொம்பளைகளும் ஒரு தடவையாவது போயிட்டுவார முடிவுக்கு அவளும் போயிட்டு வந்துட்டா.

"முன்னப்பின்னப் பிள்ள பெத்தவ இல்லையே... யாத்தே நான் என்ன பண்ணுவேன்? ஆளுக யாராச்சும் கூட இருந்தா நாம மல்லாக்கக் கெடக்கலாம். வேலைய அவுக பாப்பாக. இப்ப நானேதான் பிள்ளத்தாச்சி; நானேதான் மருத்துவச்சி. மல்லாக்கக் கெடந்து எடக்குமடக்காகிப் போனா எந்திரிக்க முடியுமா?"

அனத்திக்கிட்டே ஒரு கையத் தரையில ஊன்டி ஒருக்களிச்சு எந்திரிச்சா. சரசரசரன்னு சீலயத் தெரைச்சுத் தொடைக்கு மேலே சுருட்டி இடுப்புக்கு மேல ஏத்திவிட்டா. பல்லகக் கடிச்சு முனகிக்கிட்டே முன்னுக்க சாக்க இழுத்துப் போட்டு அதுமேல முட்டிக்கால் போட்டா. ரெண்டு பக்கமும் ரெண்டு கையத் தரையில அழுத்தி ஊன்டிக்கிட்டு ஆனமட்டும்

"ஏலே! கடைசியில செயிச்சது யாரு? கருவாச்சி தான!

அத்து விட்டாக; அழிச்சாட்டியம் பண்ணியும் பாத்தாக, நேத்து காட்ல பொதையலெடுத்த மாதிரி கையில பிள்ளையோட வந்துட்டாளா இல்லையா? ஆதியிலேயே அப்பன் இல்ல, இப்ப ஆத்தாளுமில்ல. உள்ளங்கையில அடுப்புக் கூட்டி ஒருத்தியாக் கஞ்சி காச்சிற மாதிரி, ஒத்தையில பிள்ள பெத்து ஒண்ணும் நடக்காத மாதிரி நடந்து வந்துட்டாளப்பா. கட்டையன் கட்டின தாலி கழுத்துல; கட்டையன் குடுத்த பிள்ள இடுப்புல. இன்னைக்கிக் சொல்றேன் எழுதிக்க, என்னைக்கிருந்தாலும் சடையத்தேவன் தேடிவச்ச சொத்தக் கட்டியாளப்போறது யாரு? கருவாச்சி மகன்தானப்பா!"

கட்டையன் மூஞ்சியில கரும்புள்ளி செம்புள்ளி குத்தாத குறை தான். அவன் காதுபடவே பேசுது கடந்துபோற சனம். காஞ்ச மொளகாயில வெதைகள்லாம் ஓடி வந்து மொளகா மூக்குல சேர்ற மாதிரி, அவன் ஒடம்புல இருக்கிற கோபமெல்லாம் ஒண்ணு கூடித் தெரண்டு மூக்கு நுனியில வந்து ஒக்காந்திருக்கிருச்சு. மூட்ட முடிச்சோட! தீக்குச்சியெல்லாம் தேவையில்ல. அவன் மூக்கு மேல பத்தங்குல தூரத்துல வச்சாலும் பத்திக்கிரும் பீடி. அவன் சின்ன மூக்கு வெடைக்கிறப்ப தூவாரம் ரெண்டும் விரிஞ்சு விரிஞ்சு ரெண்டு கொட்டாவி விடுது.

"சொத்து கேப்பாளா மில்ல சொத்து...? அவ பிள்ளையக் கண்டந் துண்டமாப் பிச்சுப் பிச்சுக் காக்காய்க்குப் போட்டுட்டா...? எங்கூட படுத்துப்பெற முடியுமா இன்னொரு பிள்ள...? ஏலே! நரி நண்டத் தூக்குற மாதிரி துண்டாத் தூக்கிட்டு வாங்கடா அவ பெத்து வச்சிருக்கிற பிண்டத்த."

எரிஞ்சுக்கிட்டிருந்த பீடியத் தீயோட வாய்க்குள்ள தள்ளி, 'கறிச் கறிச்'சுன்னு மென்னு தின்னு, நாக்கப் பல்லுல நறநறன்னு வழிச்சுக் கரேர்னு காறித் துப்புறான் கட்டையன்.

வீட்டு வாசல்ல கெடந்த வெளிக் கல்லுல ஒக்காந்து வெத்தல தட்டிக்கிட்டிருக்காரு சடையத்தேவரு. இடிச்ச கூலிக்கு எனக்கொரு பங்குன்னு எவனும் கேட்டுரக்கூடாதுங்கிறதுக்காக... அவரா இடிச்சு அவராப் போட்டுக்கிறது தான் அவரோட வெகுநாளைய வெத்தலக் கொள்கை.

விழுகட்டும் அவர் காதுலன்னு வேணும்னே பேசிட்டுப் போறாக வெவகாரம் புடிச்ச ரெண்டு மூணு ஆளுக.

"கருவாச்சி புள்ள கறுப்பா? செவப்பா?

"குங்குமப்பூவப் பால்ல போட்டுக் கொடங்கொடமாக் குடிச்சாலும் சிவீர்னா இருக்கும் கட்டையனுக்கும் கருவாச்சிக்கும் பெறந்த பிள்ள? அவுக வம்ச நெறந்தான்; கறுப்பு."

"பிள்ள யார் மாதிரி இருக்கு...? அவுக அப்பன் மாதிரியா? ஆத்தா மாதிரியா?"

"ரெண்டு கழுதைக மாதிரியும் இல்லையாம்."

"பெறகு?"

"அவுக தாத்தன் சடையத்தேவர் சாடையாம்."

காலம் முறுக்கிப் புழிஞ்ச முதுகுத் தண்டுக்குள்ள 'சிலீர்'னு ஒரு மின்னல் ஓடி மறைஞ்சதுல சிலுத்துப்போகுது கெழவனுக்கு.

வெத்தல ஓரல்ல தாளம் தப்புது.

ஒத்தையில பிள்ளையெடுத்து வந்தவள ஊரே வேடிக்கை பாத்துட்டுப் போக, வீட்டு வெளிக்கதவச் சாத்திக் கிட்டு நடுவாசல்ல தயிர்ப் பலகையைப் போட்டு, கருவாச்சி ஒடம்பெல்லாம் மஞ்சப்பூசி அவள ஒட்டுத்துணியில்லாம ஒக்காரவச்சு, எட்டி நின்னுக்கிட்டு எளம் வெந்நிய சொம்புல மோந்து அவ மேல 'சல்லு சல்லு'ன்னு வீசியடிக்கிறா ரங்கம்மா.

சும்மா மஞ்சள் மழை பேஞ்ச மாதிரி ஒழுகி வருது தண்ணி ஒடம்பெல்லாம்.

"போதுமாத்தா போதுமாத்தா..." கையில தண்ணியத் தடுத்துக் கத்துறா கருவாச்சி. ''ஏய்! சும்மா இர்றீ. பிள்ள பெத்த பச்ச ஒடம்புல பிசுக்குப் போகணுமா இல்லையா?"

கிட்ட வந்து மூஞ்சி தேச்சு, முதுகு தேச்சு, முன் மார்பு கழுவிவிட்டவ, தண்ணி ஊத்திக்கிட்டே வகுத்தப் புடிச்சு வலிக்காம  ஒரு எளங் கசக்குக் கசக்கிவிடுறா; 'கச கச கச'ன்னு வெளியேறுது கழிவு கசடெல்லாம்.

ஒடம்புல ஒழுகுற மஞ்சத் தண்ணியும் உறுப்புல ஒழுகுற செந்தண்ணியும் சேந்து புது நெறம் குடுத்துப் போகுது வாசல் வழி.

பேறு காலம் ஆன பொம்பளைக்கு முப்பது நாளைக்கும் இருக்கும் தீட்டு, சில பொம்பளைகள மூணு மாசம் வரைக்கும் தீட்டிப்புடும் போட்டு.

கருவாச்சிய 'கரகரகர'ன்னு தேச்சுக் கழுவி வந்தவ, 'யாத்தே'ன்னு அலறிட்டா... அவ உயிர்த்தலத்த உத்துப் பாத்ததும்.

"அடி பாதகத்தி மகளே! பூவா இருக்க வேண்டிய எடத்தப் புண்ணா வச்சிருக்கிறியே!"

'புண்பட்ட எடத்தப் புகையவிட்டு ஆத்து'ன்னு அதுக்கொரு வைத்தியம் ஆரம்பிச்சுட்டா ரங்கம்மா.

ஒரு மஞ்சட்டியில அடுப்புக் கங்குகள அள்ளிக் கொட்னா. அதுல சாம்பிராணிய அள்ளி எறிஞ்சா. அது மேல ஆவாரங்குழை பரப்பி அதுக்கு மேல வேப்பங்குழைய வச்சா. சட்டியில இருந்த சந்துகள்ல வெள்ளப்பூடுத் தொலியையும் அள்ளிப்போட்டா, ''சுவத்தப் புடிச்சு நின்னுக்கிட்டுக் கால் ரெண்டையும் அகட்டி வையிடி ஆத்தா'ன்னு அதட்டுனா.

சீலயத் தெரட்டிச் சுருட்டி ரெண்டி காலையும் அவ அகட்டி நிக்க. காலுக்கு மத்தியில மஞ்சட்டிய நீட்டி இவ புகை மூட்டம் போட, கவுட்டு வழி போகுதய்யா புகை மண்டலம். புண்பட்ட எடம் தேடி. ஆவி புடிச்ச பொம்ளைய ஆதரவா அணச்சுப் பாயில படுக்கவச்சாக.

தோலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தக் கட்டி, பிசுக்கு ஒட்டிக் கெடந்த பெறந்த பிள்ளையத் தூக்கி உடம்பெல்லாம் 'நசநசநச'ன்னு நல்லெண்ணெய்த் தடவி, கம்மாக் கரம்பையத் தேச்சுக் கழுவிவிடவும். சும்மா 'பளபள'ன்னு கண்ணாடி மாதிரி ஆகிப்போனான் கருவாச்சி மகன்.

குளிப்பாட்ன பிள்ளைக்கு லேசா சாம்பிராணி காட்டி ஆத்தாளோட சேத்துவிடவும் அது மொதல் மொதலா வாய் பொருத்துது மொலையில.

சப்புது பிள்ள; தாய்ப்பால் இல்ல.

பேறுகாலம் பாக்க ஆத்தா இல்லையேங்கற
வருத்தத்தில கடைசிப் பத்து நாளா அன்னந்தண்ணி இல்லாம அழுதுக்கிட்டேயிருந்த வளுக்கு, குழாயத் திருகிவிட்ட மாதிரி கொட்டவா போகுது பாலு?

"ஏலே கொண்ணவாயா! வெள்ளாட்டம்பால் இருந்தாப் பீச்சி வெரசாக் கொண்டாடா."

எங்க போயிப் புடிச்சானோ... எத்தனை ஆட்டுல பீச்சினானோ? கா(ல்) மணி நேரத்துல ஓடி வந்துட்டான் அரைக்காச் சொம்புப் பாலோட.

ஆட்டு ரோமம் பால்ல கெடந்தா

மாட்டிக்கிரும் பிள்ளைக்குன்னு வெறும் துணியில வடிகட்டிச் சங்குல ஊத்துனா பால, பண்ணருவா எடுத்தா; அத உள்ளடுப்புல போட்டு ஓரம் சுடவச்சா. சுட்ட பண்ணருவா மூக்க சங்குல செலுத்த சுரீர்னு சத்தம் போட்டுச் 'சுட்டுட்டேன்'னு சொல்லுச்சு பாலு; புகட்டிட்டா வைத்தியச்சி.

தாயில்லாத பிள்ளைகளுக்கும் தாய்ப் பால் இல்லாத பிள்ளைகளுக்கும் ஆடும் மாடும்தான் ஆத்தா.

தேனி சந்தைக்குப் போனா, திருக்கை மீன் கருவாடும் நெத்திலியும் வாங்கிட்டு வரணும். அதுல பச்சப்பூடு போட்டுக் கொழம்புவச்சுக் குடுத்தா, பால்கட்டும் பச்ச ஒடம்புக்காரிக்கு.

நாலு ஆளுக கம்பு சுத்தி என்னிய வளச்சு வளச்சு அடிச்ச மாதிரி மேலுகாலு வலிக்குது. பேய்ப் பசி பசிக்குது. இப்ப என்ன குடுத்தாலும் திம்பேன். எதாகிலும் குடுங்க" - வைத்தியச்சியையும் பவளத்தையும் கெஞ்சிக் கேக்குறா கருவாச்சி.

"இந்தாத்தா! வகுத்துப்புள்ளக்காரி எதையும் திங்கலாம்; கைப்புள்ளக்காரி கண்டதையும் திங்கப்படாது. பிள்ளைக்கு ஆகாது. 'வாயக் கட்னவ பிள்ள வளப்பா; வயித்தக் கட்னவ புருஷன் வளப்பா'னு சும்மாவா சொன்னாக?"

விடிய்ய, அடுப்புல தண்ணிப் பான வச்சு, அதுல புளிய எலைய அமுக்கிக்கொதிக்க வச்சு, இடுப்புக்குத் தண்ணி ஊத்தி, சுக்குக் களி கிண்டிச் சூடு ஆறும் முன்ன நல்லெண்ணெயை ஊத்தி நறுக்கா கருப்பட்டி போட்டு அவ ரெண்டு வாய் திங்க... ''என் பேரன் எங்க?"ன்னு கேட்டு வந்துட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

பாயில கெடந்த பயல மடியில தூக்கிவச்சுக் கொஞ்சிட்டு, சட்டைக்கு உள்கூட்ல கையவிட்டு தங்கச் சங்கிலிய எடுத்துப் பிள்ள கழுத்துல போட்டு, ''கைக்காசு போட்டுச் செய்முறை செய்ய வக்கில்லைன்னாலும், கடனத் திருப்பிக் கட்டத் தெம்பு இருக்கு தாயி. எம் மகளுக்கு ஒன் ஆத்தா போட்ட சங்கிலிய ஒம் மகனுக்கு நான் திருப்பிப் போட்டிருக்கேன்'னு சொல்லி வயசான கண்ல அழுதாரு.

களி தின்டுக்கிட்டிருந்தவ தன்னையறியாம எச்சிக் கையெடுத்துக் கும்பிட்டா பெரியவர.

- ஆனந்த விகடனில் வைரமுத்து எழுத்தில் வெளிவந்த 'கருவாச்சி காவியம்' நூலின் ஒரு பகுதி.