Published:Updated:

இந்தப் பூமியைப் பத்திரமாக அடுத்த சந்ததியினரிடம் நாம் கொடுப்போமா?

கே
இந்தப் பூமியைப் பத்திரமாக அடுத்த சந்ததியினரிடம் நாம் கொடுப்போமா?
இந்தப் பூமியைப் பத்திரமாக அடுத்த சந்ததியினரிடம் நாம் கொடுப்போமா?

”ஏ.சி என்பது, ஒரு சின்ன அறையைக் குளிராகவும் அகண்ட பூமியைச் சூடாகவும் மாற்றுகிறது.” பல ஆயிரம் பேரால் பகிரப்பட்ட இந்த ட்வீட் நிதர்சனமான உண்மை. நாம் நம்மைக் குளிர்வூட்டச் செய்யப்படும் எல்லாக் காரியத்திலும், இந்த பூமி ஏதோவொரு வகையில் தன்னைச் சூடாக்கிக்கொண்டே இருக்கிறது. பூமி என்பது மனிதனை விட பல மடங்கு பிரம்மாண்டமானது. அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என இனியும் அலட்சியமாக இருக்க முடியாது. 

1880-களில் இருந்து பூமியின் வெப்பநிலையைக் கணக்கிட்டுவருகிறார்கள்.  இந்த 137 ஆண்டுகளில், 2016 -ம் ஆண்டில்தான் அதிக வெப்பநிலை பதிவாகி இருக்கிறது இதை முறியடிக்க, நிச்சயமாய் இன்னும் 137 ஆண்டுகளை நாம் எடுக்கப்போவதில்லை. 2017 அந்த சாதனையை முறியடித்துவிடும். இதே நிலை இன்னும் 80 ஆண்டுகள் தொடர்ந்தால் லண்டன், நியூ யார்க், ஷாங்காய் போன்ற பெரு நகரங்கள் நீரில் மூழ்கிவிடும் என்கிறது, புதிய ஆய்வு.  கடல் மட்டம் 10 அடி வரை உயரக்கூடும்.

“விஷயம் கை மீறிப் போய்விட்டது. இந்த பாழான பூமியைத்தான் நாம் நமது அடுத்த தலைமுறையினர் கைகளில் திணிக்கப்போகிறோம் “ என்று சில ஆண்டுகளாகவே கவலை தெரிவித்துவருகிறார் நாசா விஞ்ஞானி ஜேம்ஸ்.ஈ.ஹேன்சென். இது ஹேன்செனின் அதீத கற்பனை என்று பிற விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருந்தாலும், இதில் உண்மை இருப்பதை மாறிவரும் பருவநிலைகள் உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. 

2012-ம் ஆண்டு, 'சேசிங் ஐஸ்' என்ற டாக்குமென்ட்ரி படத்தை புகைப்படக்காரர் ஜேம்ஸ் பேலாக் உதவியோடு இயக்கினார், ஜெஃப் ஒர்லோவ்ஸ்கி. புவி வெப்பமயமாதலுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளை பதிவுசெய்ய, ஜேம்ஸ் பலோக் க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, அலாஸ்கா போன்ற இடங்களுக்கு சென்றார். 1979-களில் இருந்த ஆர்டிக் பனிப்பாறைகள், 2012-ம் ஆண்டுக்குள் பாதிக்கும் மேலாக குறைந்துவிட்டது என்கிறார்கள். 2012-ம் ஆண்டு மட்டும், 4.5 மில்லியன் சதுர மைல் (அமெரிக்கா, மெக்ஸிகோ இணைந்த அளவு) அளவுக்கான பனிப்பாறைகள் மறைந்துபோய்விட்டன என்கிறது அந்தப் படம். 

மனிதர்களாகிய நாம், இதுவரையில் 580 பில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடை காற்று வெளிமண்டலத்தில் கலக்கச்செய்து, வெட்கித் தலை குனியும் சாதனையைப் படைத்து இருக்கிறோம். உலகம் அழிந்துவிடும் என்று எப்போதும் பீதியூட்டும் வாட்ஸ்அப் பதிவுகள்தான் இதுவும், என  இதை நிச்சயமாய் கடந்துபோகலாம். உலகம் அழிவதுபோல எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள், இன்னும் 50 இதே ரீதியில் வரும் என நம்பலாம். ஆனால், நாளுக்கு நாள் புவி வெப்பமாகிக்கொன்டு வருவதை, இயற்கை உணர்த்தாமல் இல்லை. 

“இவ்வளவும் நடந்தபோது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? “ என்று என் மகள் கேட்டால் என்ன செய்வது? என்கிறார் ஜேம்ஸ். இப்போது, வெறும் விஞ்ஞானியாக இருந்து ஒரு பயனும் இல்லை என கல்லூரி மாணவர்களோடு புவி வெப்பமையாவதைத்  தடுக்க நடவடிக்கைகள் எடுக்காத அரசைக் கண்டித்துப் போராட்டங்களில் ஈடுபடுகிறார். அவ்வப்போது கைதாகிறார். 

ஹேன்சென் சொல்வது இருக்கட்டும், நாம் என்ன செய்யப்போகிறோம்? 450 கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தப் பூமியில், தோராயமாக 2 லட்சம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதர்கள் வாழ்ந்துவருகிறோம். நமக்குப் பின்வரும் சந்ததியினருக்கு, எதையும் நாம் சேமிக்கத் தேவையில்லை. குறைந்தது வாழத் தகுதியானதொரு நிலப்பரப்பையாவது  விட்டுவைக்கலாம்.    

- கார்க்கிபவா