Published:Updated:

ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கவைக்கும் சிறந்த மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது தெரியுமா? #MisterK

ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கவைக்கும் சிறந்த மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது தெரியுமா? #MisterK
ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கவைக்கும் சிறந்த மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது தெரியுமா? #MisterK

ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கவைக்கும் சிறந்த மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது தெரியுமா? #MisterK

ஒருவர், ஒரு அலுவலகத்திலேயே தொடர்ந்து இருக்கக் காரணமாகச் சொல்லப்படும் பல விஷயங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது, ‘அலுவலகச் சூழல்.’ அலுவலகச் சூழல் என்றால், பெரும்பாலான ‘மொதலாளி’கள் அவர்கள் செட் செய்திருக்கிற 2 Ton  ஏ.ஸி-யையும், இம்போர்டட் காபி மேக்கரையும்,  அவர்கள் தேவைக்கு வாங்கி, உங்களுக்குக் கொடுத்திருக்கிற பெரிய சைஸ் மானிட்டரையும்தான் நினைத்துக்கொள்கிறார்கள். அதுவெல்லாமும்தான் என்றாலும், அவற்றைவிட முக்கிய இடம் வகிப்பது... ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்! 

‘நமக்கு வாய்க்கிற, நம் அலைவரிசைக்கு ஏற்ற நண்பர்களாலேயே நம் அலுவலக வாழ்வு நீடிக்கிறது’ என்பதை ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் சொல்லியிருக்கிறார் என்று புருடா விடாமலே ஒப்புக் கொள்வீர்கள். மேனேஜர் உர்ரென்று உறுமும்போதும், எடுத்துக் கொண்ட டாஸ்க், படுத்தி எடுக்கும்போதும், ஒருமணி நேரம் வேலைசெய்த ஃபைல், Save ஆகாமலேயே காணாமல்போகும்போதும்,   “ஃப்ரீயா இருந்தா வாங்களேன் கடைக்கு... டீ காபி வடைலாம் சூடா இருக்கும்”  என்று அழைக்கும் சந்தானம்கள் சூழ் ஆஃபீஸில், எப்போதுமே நோ டென்ஷன்.  

”நான் ரொம்ப ஷை டைப். ஆனா, எனக்கும் ஃப்ரெண்ட்ஷிப் பிடிக்க ஆசைதான். அது எப்படி ஆஃபீஸுக்கு போய் உடனேயே பிடிக்க முடியும்” என்று தயங்குபவரா நீங்கள்? அப்படியெல்லாம் தயங்கினால் வேலைக்காகாது. நீங்களாக சகஜமாகச் சென்று, உரிமையாக உரையாட வேண்டும். உரிமையாக உரையாடுவது என்றால்...

“ஏண்டா சேகர், உனக்கு கல்யாணமாகலையா இன்னும்? பார்க்க ஏழு கழுதை வயசான மாதிரி இருக்க? என்னதான் பிரச்னை?” என்று ஆரம்பித்தால், சேகரின் செருப்பு சைஸ் என்ன என்பது அடுத்த நொடி கண்ணுக்கு நேராகத் தெரியும். 

அதே சேகரின் டெஸ்க்கில், ஒரு பென் ஸ்டேண்ட் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். போகிற போக்கில், அதை நின்று ஒரு பார்வையிட வேண்டும். அதைப் பார்ப்பதை, சேகரும் பார்க்க வேண்டும். கடந்து போய்விட வேண்டும். அடுத்தமுறை சேகர் இருக்கும்போதே, அதைக் கையிலெடுத்து - அது அரதப்பழசான டிசைனா இருந்தாலும் - “ச்சோ.. க்யூட்! நீங்களே பண்ணினதா?” என்று ஒரு கமென்ட்டை மனசாட்சியே இல்லாமல் சொல்ல வேண்டும். சேகர் உங்கள் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு டிக் அடிப்பது உறுதி!  

இந்த ஆக்‌ஷனில், ஒரு விஷயத்தை உறுதியாக நினைவில் கொள்ளுங்கள். சேகரின் ஃப்ரெண்ட்ஷிப் கிடைக்க வேண்டும் என்று நேர்மையாக இதுபோல பழக முயல வேண்டும். மேலே காமெடியாகச் சொன்னேனே தவிர, சேகரிடம் பிடித்த ஏதாவதொன்றை கவனித்துப் பாராட்ட, குறிப்பிட,  தயங்கக்கூடாது. 

புதிதாக ஒரு அலுவலகத்தில் சேர்பவர்கள், செய்கிற பெரிய தவறு; ‘நாம எப்படிப் போய்ப் பேசுறது’ என்று நினைப்பது. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த... சரி... வேண்டாம். நிஜத்தைச் சொல்கிறேன். தன்னம்பிக்கை நூல்களின் தந்தை எனப்படும், புகழ்பெற்ற டேல் கார்னிகி என்ன சொல்கிறார் என்றால், “உங்கள் மீது பிறருக்கு ஆர்வம் வரவழைத்து, இரண்டு வருடங்களில் நீங்கள் பெறும் நட்பைவிட அதிகமான நட்பை, இரண்டே மாதங்களில் பெற முடியும் - நீங்கள் பிறரிடம் ஆர்வம்கொண்டு பழகினால்!”  

“அந்த பேனா குடுங்களேன்... எழுதிட்டு தர்றேன்”

“நம்ம கேன்டீன்ல காஃபிய விட டீ நல்லா இருக்குல?”

“வாவ்! ப்ளூ ஷால்! இந்த டோன் கிடைக்குதா நம்ம ஊர்ல?” 

”ச்சே... பஸ்ல சில்ற இல்லைனு ஒரே டென்ஷனாய்டுச்சு”

“உங்க டெஸ்க்ல ஒட்டிருக்கிற டயலாக் செம. எங்க வாங்கினீங்க?”

இப்படிப் புதிய அலுவகத்தில் இருப்பவர்களுக்கும், உங்களுக்கும் உள்ள பனித்திரையை உடைக்க, நிறைய டயலாக்ஸ் உண்டு. எடுத்த எடுப்பிலேயே “வாட்ஸ் யுவர் வாட்ஸ் அப் நம்பர்”, “வாட்ஸ் யுவர் ஃபேஸ்புக் ஐடி” என்பதையெல்லாம் எவரும் விரும்புவதில்லை. அதுவும் தங்கள் சோஷியல் நெட்வொர்க் அடையாளங்களையெல்லாம்,  இந்திய ராணுவ அதிகாரியின் ரகசிய ஃபைலைவிட ரகசியமாய் வைத்திருக்கும் ஜீவராசிகளெல்லாம் உண்டு. தெரிந்து சில சமயம், “அட பக்கிப் பயலே... அன்னைக்கு இன்பாக்ஸ்ல வந்து அப்படிப் பேசினது நீதானா?” என்று நினைத்துவிட்டால்? (அப்பறம் ப்ரதர்... அந்த ஷால் டயலாக் பொண்ணுக பொண்ணுககிட்ட கேட்கிறதுக்கு... நீங்க கேட்டுட்டு கமெண்ட்ல வந்து என்னைத் திட்டக் கூடாது... ஆமா!)

அலுவலகத்தில் நட்பு அமைய, கையும், புன்னகையும் மிக முக்கியம். “புன்னகை எதிர்வருவோரைப் பார்த்துப் புன்னகைக்க... அதென்ன கை?” என்றால்,

நீங்கள் செல்லும் வாசல் வழியாக யாராவது வருகிறார்களா, உங்களுக்காகத் திறந்த கதவை, ஒரு நிமிடம் பிடித்திருங்கள். பலரும் பின்னால் வருபவர்களின் முகத்திலேயே அறையும் விதத்தில் சாத்திவிட்டுச் செல்வார்கள். அதே ஆள், வெளியில் ஸ்டார் ரெஸ்டாரெண்டிலோ, மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டரிலோ “யெஸ் ப்ளீஸ்...”  என்று கதவு பிடித்து நிற்பார் என்பது வேறு விஷயம். அதே போல, அவர்கள் குட்மார்னிங் என்றால், நீங்கள் கை உயர்த்தி குட் மார்னிங் சொல்லுங்கள். மேலதிகாரி என்றால் கொஞ்சம் பணிவாக! அதற்காக கையை இஷ்டத்துக்கு உயர்த்தி, “குட்மார்னிங்டா பஞ்சாபகேசா” என்று மைண்ட் வாய்ஸை பாடி லேங்க்வேஜிலேயே சொல்லித் தொலைத்துவிடாதீர்கள்.   

அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘கடின சாவு விசிறி’யாக  இருக்கும் பட்சத்தில், நீங்கள் போய் “ரோசாப்பூ... சின்ன ரோசாப்பூ... உம்பேர... சொல்லும் ரோசாப்பூ... ப்பா! என்ன ட்யூன்.... இசைப்புயல் இசைப்புயல்தான்” என்றால் அவர் டிஃபன் பாக்ஸை ரெண்டு டேபிள் தள்ளிக்கொண்டுபோய் வைத்துக்கொள்வார். அதற்குப் பிறகு ‘ரஹ்மான் ‘ரோசாப்பூ’ல ஃபேமஸாகல... ‘ரோஜா’ல ஃபேமஸானவர்’  என்று உங்களுக்குத் தெரியவந்தும் பிரயோஜனமில்லாமல் போய்விடும்.

மிஸ்டர் K-க்கு  நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. அவனுக்கு அலுவலகத்தில் நண்பர்கள் அமைந்தது அதனால்தான். ஒரு மின்னஞ்சலை, சக டீம் மெம்பருக்கு அனுப்பியிருக்கிறான். அவர் “மிஸ்டர் K, உங்ககிட்ட இருந்து மெய்ல் இன்னும் வர்லியே?” என்று எழுந்து கேட்க, இவன் அவர் டெஸ்குக்குப் போய் சிஸ்டத்தை சுற்றி இருந்த புக்ஸ், நோட்டையெல்லாம் ஒழுங்குபடுத்திவைத்துவிட்டு, “வழில இத்தனை கெடந்தா.. டிராஃபிக்ல மாட்டிக்கும்ல... இனி வந்துடும்” என்றிருக்கிறான். இந்தக் கொடுமையான மொக்கை பிடித்துப்போய் 3 புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் அவனுக்கு. இதைக் கேட்டு, ஏற்கெனவே கொஞ்சம் க்ளோஸாக இருந்த 4 பேர் ஒதுங்கிக்கொண்டது வேறு கதை.

அதை விடவும், அதிகமாக, ஒரு ஆஃபீஸ் அவுட்டிங்-கில் சம்பாதித்துவிட்டான். எல்லாரும் செம ஜாலியா பேசிக்கொண்டிருக்க, முதலாளி கெத்தாக நின்றுகொண்டு, “ஓகே கய்ஸ்... உங்களை என் ஆஃபீஸ்ல இருக்க வைக்கிற மோட்டிவேஷனல் ஃபேக்டர் எது? வேலை நேரம், வொர்க் லைஃப் பேலன்ஸ், சிறந்த கருவிகள்... ” என்று பட்டியலிட ஆரம்பிக்க...

இவன் உடனே  கையைத் தூக்கி, “100% இன்க்ரிமெண்ட்” என்றிருக்கிறான்!  மொத்த ஆஃபீஸும் இவனுக்கு ஃப்ரெண்டாகிவிட்டது!  

இதுல எதாவது ஒரு வழிய ஃபாலோ பண்ணி, அலுவலக சூழலை இனிதாக்கிக்கொள்ளுங்கள் நண்பர்களே! 

- பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு